ஓஹோ.. அப்போ இது என்ன.. பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் இலவசம் சரியா? பாயிண்ட்டை பிடித்த பிடிஆர்
சென்னை: பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் இலவச திட்டங்கள் செயல்படுத்தலாமா என தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் புந்தல்கண்ட் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி இலவசத் திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது. இலவச திட்டங்களை அறிவித்து மக்களின் வாக்குகளை விலைக்கு வாங்க முடியும் என சிலர் கருதுகிறார்கள். இந்திய அரசியலிலிருந்து இலவச திட்டக் கலாச்சாரத்தை வேரறுக்க வேண்டும் என பிரதமர் மோடி பேசியிருந்தார்.
இதைத் தொடர்ந்து இலவச திட்டங்கள் குறித்து விவாதங்கள் எழுந்தன. இந்த நிலையில் பிரதமர் மோடியின் கருத்துக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பொது மக்களுக்கான சமூக நலத் திட்டங்களை இலவசம் என்ற குறுகிய வட்டத்திற்குள் அடைக்கக் கூடாது. இதை ஏழை மக்களிடையே நடைபெறும் பொருளாதார புரட்சி என்றே கருத வேண்டும் என பலர் கூறி வருகிறார்கள்.

இலவசங்கள்
இலவசங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மூத்த தலைவர் அஸ்வினி குமார் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தேர்தலின்போது இலவசங்கள் தொடர்பாக அரசியல் கட்சிகள் வழங்கும் வாக்குறுதிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று அவர் கோரியுள்ளார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. அதில், தேர்தலில்போது இலவசங்கள் தொடர்பாக அரசியல் கட்சிகள் வழங்கும் வாக்குறுதிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று அவர் கோரியுள்ளார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

ஆங்கில சேனல்
இந்த நிலையில் இலவசங்கள் தொடர்பாக ஆங்கில சேனலில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்ட தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில் ஒரு திட்டத்தை நல்ல இலவச திட்டம், தீய இலவச திட்டம் என எப்படி வரையறுப்பீர்கள். இலவசங்கள் தீய காரியம் என்றால் அதிமுக அரசின் இரு சக்கர வாகனங்களுக்கு ரூ 25 ஆயிரம் மானியம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க ஏன் பிரதமர் டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்தார்?

கலாச்சாரம்
இலவசம் வழங்கும் கலாச்சாரத்திற்கு எதிராக பிரதமரே அழுத்தம் தருகிறார் என்றால் அவர் நோபல் பரிசு பெற்றாரா பொருளாதாரத்தில் இரு முனைவர் பட்டத்தை பெற்றாரா. அப்படி எதுவும் இல்லாத போது மத்திய அரசின் பேச்சை நாங்கள் ஏன் கேட்க வேண்டும் என சரவெடியாக கேள்விகளை அடுக்கிய வீடியோ வடமாநிலங்களிலும் வைரலானது.

60 வயதுக்கு மேல்
இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என்ற திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அது போல் புதுச்சேரியில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ரூ 1000 திட்டம், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் திட்டங்கள், இலவச சைக்கிள் திட்டங்கள் ஆகியவை புதுவை பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஹரியானாவில் இலவசம்
அது போல் ஹரியானா மாநிலத்தில் நாட்டு மாடுகளை வாங்க ரூ 25 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படும் என முதல்வர் மனோகர் லால் கட்டார் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புகள் குறித்த பேப்பர் கட்டிங்ஸை குறிப்பிட்டு தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இலவச திட்டங்கள்
அதில் இலவச திட்டங்கள் குறித்த விவாதங்களால் நான் குழப்பத்தில் உள்ளேன். இலவச திட்டங்களுக்கு எதிராக பிரதமரின் பார்வையை மீறும் செயலில் ஈடுபட்டுள்ள உத்தரப்பிரதேசம், புதுவை, ஹரியானா முதல்வர்கள், அதாவது அனைத்து பாஜக அரசுகளுக்கு எதிராக நடவடிக்கை பாயுமா. இல்லை ஆளும் கட்சிக்கு ஒரு விதி, எதிர்க்கட்சிக்கு ஒரு விதியா. அல்லது பாஜக ஆளும் மாநிலங்களுக்கு ஒரு விதி, பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு ஒரு விதியா என கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications