பள்ளிக்கரணைக்காக திரண்ட மக்கள்.. பெருங்குடி குப்பை கிடங்கில் அரசின் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு
சென்னை: சென்னை பள்ளக்கரணை ஏரியில் உள்ள பெருங்குடி குப்பைக் கிடங்கில் 93 ஏக்கர் பரப்பில் 99 கோடி செலவில் பல்லுயிர் பூங்கா அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என கருத்து கேட்பு கூட்டத்தின் போது குடியிருப்போர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலங்கள் மிக அபூர்வமான ஈர நிலங்கள் ஆகும்.. அதாவது ஸ்பான்ச் போல் செயல்பட்டு, தென் சென்னையில் எவ்வளவு வெள்ளம் வந்தாலும் உறிஞ்சு தனது நிலத்தில் சேகரிக்கும் தன்மை உடையவை. பள்ளிக்கரணை ஏரி இல்லை என்றால் தென்சென்னை மொத்தமும் கண்டிப்பாக வெள்ளத்தில் அழிந்து போய்விடும். அந்த அளவிற்கு மிக முக்கியமான நன்னீர் நிலமாகும். ஏனெனில் இயற்கையான வடிகால்களாக அடையாறு கழிமுகத்திற்கு பின்னர் நீண்ட கிலோ மீட்டருக்கு எங்குமே கடலில் கலக்க வழி இல்லை. மொத்த சென்னைக்கும் வரும் வெள்ள நீர் பள்ளிக்கரணை ஏரியில் கலந்து அங்கு குறிப்பிட்ட ஆழத்திற்கு சேமிக்கப்படுகிறது. ஒரு கட்டத்தில் அங்கு தண்ணீர் சேமிக்கப்பட்ட பின்னர் மேட்டில் ஏறி அந்த தண்ணீர் ஒக்கியம் மகடு வழியாக பக்கிம்ஹாம் கால்வாய் வழியாக பயணித்து, கடலை நோக்கி பயணிக்கிறது.

இயற்கை கொடுத்த பொக்கிஷமான இந்த பள்ளிக்கரணையை பாதுகாக்க வேண்டிய நாம், அதை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிட்டோம். இப்போது மிக குறுகிய அளவில் தான் பள்ளிக்கரணை ஏரி இருக்கிறது. ராம் நகர், மடிப்பாக்கம், வேளச்சேரி ஆகிய பகுதிகளில் 2004ஆம் ஆண்டு 80 சதவீதத்திற்கு மேல் காலியான நிலங்கள் இருந்த நிலையில். தற்பொழுது, மக்கள் நெருக்கமாக வாழக்கூடிய குடியிருப்புப் பகுதிகளாக மாறிவிட்டதால் பள்ளிக்கரணை ஏரி பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.
1965-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 5 ஆயிரத்து 500 ஹெக்டேராக இருந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம், 2013 ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 600 ஹெக்டேராக சுருங்கி இருந்தது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், 100 ஏக்கருக்கும் மேல் ஆக்கிரமித்துள்ளதாகவும், மேலும் 1,085 தனியார் குடியிருப்புகள் ஆக்கிரமித்துள்ளதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒரு ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
சென்னையில் ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள தென் சென்னையில் மத்திய கைலாசம் முதல் மேடவாக்கம் வரை 5,000 ஹெக்டேர் பரப்பளவுக்கு விரிந்து இருந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தற்போது பெருங்குடிக்குப் பக்கத்தில் வெறும் 500 ஹெக்டேர் பரப்பளவு என்கிற அளவில் தற்போது சுருங்கி இருக்கிறது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் வந்த பின்னர், ஒரு கட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றமே நேரடியாக களம் இறங்கி அதை காப்பாற்ற தொடங்கியது.. இன்று வரை உயர்நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் உள்ள இடம் என்றால் பள்ளிக்கரணை தான்.
இந்நிலையில் சென்னை பள்ளக்கரணை ஏரியில் உள்ள பெருங்குடி குப்பைக் கிடங்கில் 93 ஏக்கர் பரப்பில் 99 கோடி செலவில் பல்லுயிர் பூங்கா அமைக்கும் திட்டத்திற்கு கருத்துக் கேட்பு கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பல்வேறு குடியிருப்புகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்ட தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். அதில் பலரும்பெருங்குடி குப்பைக் கிடங்கில் பல்லுயிர் பூங்கா அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தனர்.
குடியிருப்பு வாசி ஒருவர் கூறுகையில், ஏற்கனவே பட்டினம்பாக்கத்தில் கடலை ஒட்டி தொல்காப்பியர் பூங்காவை அமைத்தீர்கள். அந்த பூங்காவால் என்ன சுற்றுச்சூழல் நன்மை நடந்தது என்று கேள்வி எழுப்பினார். இன்னொரு குடியிருப்புவாசி, இந்தஇடத்தில் ஒதுக்கும் பணத்தை வைத்து வெள்ளத்தை தடுத்து நிறுத்தும் வேலைகளை செய்யலாமே. நாங்கள் பல்லுயிர் பூங்கா அமைக்கும் திட்டத்தை எதிர்க்கிறோம், தயவு செய்து வாழ்க்கையில் நிம்மதியாக இருப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள். இகோ பார்க்கெல்லாம் போட்டு அந்த இடத்தை பாலாக்கிவிடாதீர்கள் என்றார்.
இன்னொரு குடியிருப்புவாசி கூறுகையில், பள்ளிக்கரணை ஏரியின் கொள்ளளவை குறைக்க குறைக்க, சிறுசேரி, நாவலூர், தாழம்பூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நாங்கள் எல்லாரும் வருசத்தில் இரண்டு மாதத்தில் கிட்டத்தட்ட ஒரு வாரம் இல்லாட்டி 10 நாள் வெளியே போய்கொண்டிருக்கிறோம்.. எங்களுக்கு பூங்கா வேண்டாம்.. பாதுகாப்பான இடம் வேண்டும் என்றார்.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 2.5 ஏக்கர் பரப்பில் ஏற்கனவே பூங்கா உள்ள நிலையில், அதைவிடுத்து வேறு ஒரு பூங்கா வேண்டுமா என்று கேள்வி எழுப்பினார்கள். பள்ளிக்கரணை ஏரியில் யாராவது குளம் வெட்டுவார்களா.. எவ்வளவு பெரிய முட்டாள்தனம். வேடதாங்கலை விட அதிக பறவைகள் வந்து செல்லும் இடம் பள்ளிக்கரணையாகும். அப்படி இருக்கும் போது அந்த பறவைகளின் இடத்தை நாம் ஏன் ஆக்கிரமிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினர்.












Click it and Unblock the Notifications