துரத்தும் சொத்து குவிப்பு வழக்கு! சிக்கலில் Ex அமைச்சர் சி.விஜயபாஸ்கர்? கோர்டில் இன்று என்ன நடந்தது
சென்னை: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு புதுக்கோட்டை முதன்மை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அதில் நீதிமன்றம் முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்தவர் டாக்டர் விஜயபாஸ்கர். முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சரான இவர் இப்போது விராலிமலை தொகுதியில் இருந்து சட்டசபை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சராக இருந்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக இவர் சொத்து சேர்த்தாக புகார் அழுந்தது. 35.79 கோடி ரூபாயை இவர் வருமானத்திற்கு அதிகமாகச் சேர்த்தாக புகார் இருந்தது.
அதன்படி லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் தேதி விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீதும் புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து புதுக்கோட்டை இலுப்பூரில் அமைந்துள்ள விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு, கல் குவாரிகள், சென்னையில் உள்ள அவரது வீடு மற்றும் தொடர்புடைய 56 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தினர்.
இது தொடர்பான வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், அங்கே 210 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கையும் மே மாதம் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவியும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
கடந்த முறை இந்த வழக்கு செப் 26ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. இருப்பினும், அப்போது விஜயபாஸ்கர் ஆஜராகவில்லை. அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர், லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் நகல்களில் சில பக்கங்கள் விடுபட்டுள்ளதாகவும் அதை முழுமையாக வழங்க வேண்டும் என்றும் வாதிட்டார்.
இதையடுத்து வழக்கு தொடர்பான ஆவணங்களை முழுமையாக விஜயபாஸ்கர் தரப்புக்கு வழங்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டு புதுக்கோட்டை முதன்மை நீதிமன்றம், வழக்கை ஒத்தி வைத்தது. அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜரானார். இருப்பினும், அப்போது மனைவி ரம்யா ஆஜராகவில்லை.
மேலும், ஏற்கனவே குற்றப்பத்திரிக்கை நகல்கள் விஜயபாஸ்கர் தரப்புக்கு வழங்கப்பட்ட நிலையில், விடுபட்ட பக்கங்களைச் சமர்ப்பிக்க லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவகாசம் கோரினர். இதையடுத்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் கண்டிப்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை நீதிபதி வரும் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications