எடப்பாடி போட்ட சீக்ரெட் ‘டீல்’.. சுற்றி வளைச்சிட்டாங்க.. “சரணாகதி”.. பகீர் கிளப்பிய புகழேந்தி!
சென்னை : கோடநாடு கொலை கொள்ளை வழக்கு உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி திமுக அரசோடு ஒப்பந்தம் செய்துகொண்டு எந்த வழக்கிலும் கைதாகாமல் சுதந்திரமாக சுற்றித் திரிந்துகொண்டு இருக்கிறார் என்று அதிமுக ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி விமர்சித்துள்ளார்.
தேர்தல் ஆணையம் தேர்தல் அட்டவணை வெளியிடும்போதுதான் சின்னத்தை யாருக்கு கொடுப்பது என்று முடிவு எடுப்பார்கள். அதுவரை சின்னம் குறித்து எதுவும் எடுக்கமாட்டார்கள் என்றும் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் 21ஆம் தேதி ஓபிஎஸ் அணியினர் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்தினர். 27ஆம் தேதி ஈபிஎஸ் அணியினர் மா.செக்கள் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர்.
அதிமுகவில் இரு தரப்பினரும் போட்டி போட்டு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வரும் நிலையில், இப்போது தேர்தல் ஆணையத்தில் இந்த பிரச்சனை முடிவுக்கு வராது என்று கூறியுள்ளார் ஓபிஎஸ் ஆதரவாளர் பெங்களூர் புகழேந்தி.

எடப்பாடிக்கே தெரியாது
அதிமுக ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "டிச.21ஆம் தேதி ஓபிஎஸ் நடத்திய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்குப் போட்டியாக டிச.27ஆம் தேதி பழனிசாமியும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்தினார். அவர் எதற்காக அந்தக் கூட்டத்தை நடத்தினார் என அவருக்கே தெரியவில்லை. ஓபிஎஸ், ஈபிஎஸ் போட்டி போட்டுக்கொண்டு மாநாடுகள் நடத்த வேண்டியதில்லை. ஈபிஎஸ் அணியில் உள்ள எம்.எல்.ஏ.க்களில் யாராவது ஒருவரை ராஜினாமா செய்ய சொல்லுங்கள் பார்ப்போம். சசிகலா, டிடிவி தினகரன், ஈபிஎஸ், ஓபிஎஸ் அனைவரும் ஒன்றிணைந்தபின்புதான் யார் தலைமை என்பதை முடிவு செய்வோம். அதுவரை நாங்கள் ஒபிஎஸ் தலைமையில்தான் இருப்போம்" என்றார்.

திமுக அரசோடு ஒப்பந்தம்
மேலும் பேசிய அவர், அதிமுகவை உடைத்து எடப்பாடி பழனிசாமி என்ன லாபம் காண்கிறார் என்று தெரியவில்லை. எடப்பாடி பழனிசாமி திமுக அரசோடு ஒப்பந்தம் செய்துகொண்டு எந்த வழக்கிலும் கைது ஆகாமல் இருக்கிறார் என்று நினைக்கிறேன். கோடநாடு கொலை வழக்கு உட்பட பல வழக்குகள் அவர்மீது நிலுவையில் உள்ளன. எடப்பாடி பழனிசாமி திமுகவுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு சுதந்திரமாக சுற்றித்திரிந்து கொண்டிருக்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சரணாகதி அடைந்துவிட்டார் எடப்பாடி. அதிமுகவைக் காப்பாற்றும் இடத்தில் ஓ.பன்னீர்செல்வம் தான் இருக்கிறார் எனத் தெரிவித்தார்.

அதிமுக சின்னம்
மேலும், அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்பது பற்றி பேசிய புகழேந்தி, தேர்தல் ஆணையம் தேர்தல் அட்டவணை வெளியிடும்போதுதான் சின்னத்தை யாருக்கு கொடுப்பது என்று முடிவு எடுப்பார்கள். அந்த சூழ்நிலை ஏற்படும்போது நேரம் இருக்காது. அதுவரை சின்னம் குறித்து எதுவும் எடுக்கமாட்டார்கள். எந்த புகார் வந்தாலும் வாங்கி வைத்துக் கொள்வார்கள். தேர்தல் ஆணையம் தானாக முன்வந்து எந்த நடவடிக்கையும் எடுக்காது. நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் ஆணையம் செயல்படும். தேர்தல் வந்தால் அதிமுக கட்சி பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்துவிடும் எனக் கூறியுள்ளார்.

கட்சி நிதி தவறாக
மேலும் பேசிய அவர், "ஒ.பன்னீர்செல்வம் பொருளாளராக இருந்தபோது கட்சி நிதி பாதுகாக்கப்பட்டது. ஆனால் தற்போது அதிமுக கட்சி நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எம்ஜிஆர், ஜெயலலிதாவை ஏற்றுக்கொண்டு அரசியல் நடத்துபவர்கள் சேர்ந்து செயல்படலாம் என்று ஓபிஎஸ் கூறியுள்ளார். அதுபோல இணைந்து செயல்பட்டால் நல்லதுதான். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து முதல்வராக இருந்திருந்தால் இதுபோன்ற பிரச்சனைகள் வந்திருக்காது. ஓ.பன்னீர்செல்வம் என்ற தலைவர் இல்லை என்றால் அதிமுக சர்வாதிகாரியின் கைக்குச் சென்றுவிடும்.

நடவடிக்கையே இல்லையே
முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான பருப்பு கொள்முதல் ஊழல் குறித்த வழக்கு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ரேஷன் கடைகளுக்கு சர்க்கரை வாங்கியதிலும் ஊழல் நடந்துள்ளது. இதுகுறித்து புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக முதல்வர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரியவில்லை. ஊழல் குற்றச்சாட்டில் நடவடிக்கை எடுப்பேன் என்று கூறி திமுக ஆட்சி அமைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்கள் என்று திமுக தொண்டர்கள் அனைவரும் கேட்கின்றனர். " எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications