ஸ்டாலின்- உதயநிதியை பற்றியா பேசுறீங்க? எடப்பாடிக்கு எதிராக உயர்நீதிமன்றத்துக்கு போன புகழேந்தி
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினை கடுமையாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்தார். இந்நிலையில் தான் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் புரட்சி அதிமுக கட்சியின் நிறுவனரும், முதன்மை செயலாளருமான புகழேந்தி அவசர வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்கள் மட்டுமே உள்ளது. அதோடு பிரசாரம் வரும் 21ம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது. பிரசாரம் முடிய இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகாலையில் வாக்கிங் செல்லும் மக்களை சந்திப்பது முதல் இரவு 10 மணி வரை வீதிவீதியாக தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் தான் தற்போது அரசியல் கட்சி தலைவர்கள் கட்சி, கொள்கை, ஆட்சிக்கு அப்பாற்பட்டு தனிப்பட்ட தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது பிரசாரங்களில் எல்லாம் சசிகலா காலில் எடப்பாடி பழனிச்சாமி விழுந்த போட்டோவை காண்பித்து விமர்சனம் செய்து வருகிறார். இதனால் எடப்பாடி பழனிச்சாமியும் உதயநிதி பால்டாயில் குடித்தவர் என்று தரக்குறைவான கருத்தை முன்வைத்தார். அதுமட்டுமின்றி முதல்வர் ஸ்டாலின் பற்றி எடப்பாடி பழனிச்சாமியின் சமீபத்திய கருத்தும் சர்ச்சையானது.
அதாவது முதல்வர் ஸ்டாலின் கொரோனா காலத்திலேயே போயிருப்பார் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியது விவாதமானது. முதல்வர் ஸ்டாலின் உள்பட திமுகவினர் கடுமையாக எதிர்த்தனர். இந்நிலையில் தான் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் பற்றி பேசிய எடப்பாடி பழனிச்சாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புரட்சி அதிமுகவின் நிறுவனரும் முதன்மை செயலாளருமான வா புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதில், '' தேர்தல் பிரச்சாரத்தின் போது எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பற்றியும், துணை முதல்வர் உதயநிதி பற்றியும் அவதூறாக பேசி வருகிறார். இதனால் எடப்பாடி பழனிச்சாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று மனுத்தாக்கல் செய்துள்ளார். அதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் அவரது தரப்பில் கோரப்பட்டுள்ளது. வழக்கறிஞர் திருமூர்த்தி இந்த முறையீட்டு வருகிறார்.
எடப்பாடி பழனிச்சாமிக்கு, எதிராக இந்த வழக்கை தொடர்ந்த புகழேந்தி முதலில் அதிமுகவில் தான் செயல்பட்டார். வழக்கை தொடர்ந்துள்ள புகழேந்தி, கர்நாடகா மாநில அதிமுக செயலாளராக செயல்பட்டு வந்தவர். சசிகலாவின் ஆதரவாளராக இருந்த இவர் ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளராக இருந்தார். ஓ பன்னீர் செல்வம் உடன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு, ஓ பன்னீர்செல்வம் அணியில் தொடர்ந்தார். தற்போது புரட்சி அதிமுக என்ற பெயரில் கட்சி தொடங்கி திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.












Click it and Unblock the Notifications