யாரும் பயப்படாதீங்க.. 2015 பெருவெள்ளம் கண் முன் வரும்.. ஆனா நிஜத்தில் வராது.. ஏன் தெரியுமா?
சென்னை: சென்னையை சுற்றியுள்ள நீர் நிலைகளை 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணித்து வருவதால் 2015 ஆம் ஆண்டு ஏற்பட்டது போல் வெள்ளம் ஏற்படாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
Recommended Video
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் கடந்த அக்டோபர் 26ஆம் தேதி முதல் தீவிரமடைந்தது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதில் பூண்டி ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 6 மி.மீ. மழை அளவு பெய்துள்ளது. அதேபோல், சோழவரம் 17 மி.மீ., புழல் 15 மி.மீ., செம்பரம்பாக்கம் 5 மி.மீ. என்ற அளவில் மழை பெய்து உள்ளது.

நீர் வரத்து அதிகம்
இதனால் ஏரிகளுக்கு நீர் வரத்தும் அதிகரித்து உள்ளது. குறிப்பாக பூண்டி ஏரியில் 4 ஆயிரத்து 308 கன அடியும், சோழவரம் ஏரிக்கு 1,076 கன அடியும், புழல் ஏரிக்கு 1,078 கன அடியும், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிக்கு 70 கன அடியும் நீர் வந்து கொண்டு இருக்கிறது.

பாதுகாப்பு கருதி
ஏரிகளின் முழு கொள்ளளவை எட்டிவிடக் கூடாது என்பதால் பாதுகாப்பு கருதியும், குடிநீர்த் தேவைக்காகவும் ஏரிகளில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதன்படி பூண்டி ஏரியிலிருந்து 5,558 கனஅடி நீரும், சோழவரத்தில் இருந்து 1215 கனஅடி நீரும் புழலில் இருந்து 2,169 கனஅடி நீரும் செம்பரம்பாக்கத்திலிருந்து 2,151 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

கடலில் கலக்கிறது
இவை சென்னையில் ஓடும் ஆறுகள் மூலம் கடலில் கலந்து வருகிறது. இந்த நிலையில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்தம் காரணமாக சென்னையில் ஓடும் அடையாறு, கூவம், பக்கிங்காம் உள்ளிட்ட கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அடையாறு ஆற்றில் 4,895 கனஅடி நீர் ஓடுகிறது. இது அடையாறு முகத்துவாரம் வழியாக வங்கக் கடலில் கலக்கிறது.

கூவம் நதி
அது போல் கூவம் நதி நேப்பியர் பாலம் அருகில் கடலில் கலக்கிறது. பக்கிங்கால் கால்வாயானது எண்ணூர் அருகே கடலில் கலந்து விடுகிறது. எங்கெல்லாம் அடைப்புகள் ஏற்பட்டுள்ளனவோ அங்கெல்லாம் அடைப்புகள் நீக்கப்பட்டு நீர் வெளியேற வழி வகை செய்யப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான ஏரிகளின் கால்வாய்கள் மூலம் கடலில் கலக்கிறது. இதனால் நீர் நிலைகளின் கரைகள் சேதமடையாது.

தொடர் கண்காணிப்பு
மேலும் ஏரிகளும் நீர் நிலைகளும் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறது. இரவு நேரத்தில் எங்கும் தண்ணீர் திறந்துவிடக் கூடாது என்றும் பொதுமக்களுக்கு அறிவிக்காமல் தண்ணீரை திறக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் 2015 ஆம் ஆண்டு ஏற்ட்ட வெள்ளம் போல் சென்னையில் ஏற்பட வாய்ப்பில்லை என பொதுப் பணித் துறையினர் தெரிவித்துள்ளார்கள். கடந்த இரு தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த நீர் வளத் துறை அமைச்சர் துரைமுருகன், மழை சூழலை பார்த்தால் 2015 சென்னை பெருவெள்ளத்தை மிஞ்சிவிடும் போல என எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications