TVK: தவெக விருப்பமனுவில் கேட்கப்பட்டுள்ள அந்த 36 கேள்விகள் என்னென்ன?
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் விருப்பமனுவில் என்னென்ன கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். கடந்த வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 10 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்றுத் தீர்ந்ததாக சொல்லப்படுகிறது.
தமிழக சட்டசபைக்கு தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு உள்ளிட்டவைகள் ஈடுபடுகின்றன. அதுபோல் பல்வேறு அரசியல் கட்சிகள் விருப்பமனுக்களையும் கொடுத்து வருகின்றன.

அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்பமனு விநியோகம் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி தொடங்கியது. இதில் பொதுத் தொகுதிகளுக்கு ரூ 10 ஆயிரமும் தனி தொகுதிகளுக்கு ரூ 5ஆயிரமும் விருப்பமனு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மனு படிவத்தைப் பெற ரூ 100 செலுத்த வேண்டும். முதல் நாளில் விருப்பமனு வாங்க பலர் ஆர்வத்துடன் வந்ததால் ஒரு மணி நேரத்திலேயே அனைத்து படிவங்களும் விற்றுத் தீர்ந்தன. பலர் விஜய், தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என கேட்டு விருப்பமனுக்களை பெற்றனர்.
இந்த நிலையில் பனையூரில் கூட்டம் அதிகம் கூடி அது அங்கிருந்த குடியிருப்பாளர்களுக்கு தொந்தரவாக அமைந்ததாக போராட்டம் நடத்தியதை அடுத்து விருப்பமனு வாங்க கட்சி அலுவலகத்திற்கு யாரும் நேரில் வர வேண்டாம் என்றும் கட்சியின் இணையதளத்தில் இருந்து இலவசமாக விருப்பமனுவை பெற்றுக் கொள்ளலாம் என்றும் கட்சித் தலைமை தெரிவித்தது.
இந்த விருப்பமனு படிவத்தில் மொத்தம் 36 கேள்விகள் இடம் பெற்றுள்ளன. அவை என்ன என்பதை காணலாம்.
வேட்பாளர்களின் தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி, அரசியல் பின்னணி, உறுப்பினர் காலம், ஆதார், வாக்காளர் அட்டை எண்கள், அலைபேசி, மின்னஞ்சல், பேசும் மொழிகள் போன்ற தகவல்கள் கோரப்பட்டுள்ளன.
மேலும், குடும்ப விவரங்கள், தொழில், வருமானம், சொத்து விவரங்கள், நிலுவையில் உள்ள வழக்குகள், சமூக வலைத்தள கணக்குகள், போட்டியிட விரும்பும் தொகுதி, அதற்கான காரணங்கள், கழக வளர்ச்சிக்கான பணிகள், போராட்டப் பங்களிப்புகள் மற்றும் சமூக அமைப்புகளுடனான தொடர்புகள் குறித்தும் விரிவாக விளக்க வேண்டும்.
விருப்ப மனுவுடன், சமீபத்திய புகைப்படம், கட்சி உறுப்பினர் அடையாள அட்டை, உயர்கல்வி சான்றிதழ்கள், ஆதார், வாக்காளர் அட்டை, பான் கார்டு மற்றும் குடும்ப அட்டை நகல்கள் இணைக்கப்பட வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளின் தனிப்பட்ட மற்றும் குடும்ப வருமான வரி தாக்கல் ஆவணங்களும் கட்டாயம். கட்டணத்திற்கான டிமாண்ட் டிராப்ட் எண்ணையும் குறிப்பிட வேண்டும்.
இந்த விருப்பமனுக்களை இணையதளத்தில் இருந்து பிப்ரவரி 14 ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications