மாநாடு வெற்றி.. புளியோதரை வீணாகி கீழே கொட்டியதை மிகைப்படுத்துவதா?.. ஒப்பாரி என்கிறார் உதயகுமார்
சென்னை: அதிமுக மாநாடு மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான மக்களுக்கு பார்த்து பார்த்து உணவு சமைத்து பரிமாறப்பட்டது. மிச்சமாகி கீழே கொட்டப்பட்ட புளியோதரையை மிகைப்படுத்தி செய்தி வெளியிடுவது ஒப்பாரி வைப்பது போல இருப்பதாக கூறியுள்ளார் ஆர்.பி உதயகுமார்.
பொன்விழா கொண்டாடும் அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி தனது தொண்டர்கள் படை பலத்தை நிரூபிக்க மதுரையில் எழுச்சி மாநாடு நடத்தினார். இந்த மாநாட்டில் எல்லாமே பிரம்மாண்டம்தான். மலை போல செட் போட்டு அதில் எம்ஜிஆர், ஜெயலலிதா உருவம் வைத்து நடுவே எடப்பாடி பழனிச்சாமி படமும் வைக்கப்பட்டிருந்தது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்ததால் மதுரையே திமிலோகப்பட்டது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 51 அடி உயர கம்பத்தில் அதிமுக கொடியை ஏற்றும் போது ஹெலிகாப்டர் மூலம் 1 டன் எடையிலான பூக்கள் தூவப்பட்டன. எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்குக் கூட இப்படி ஒரு வரவேற்பை யாரும் கொடுத்ததில்லை. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அழைத்து வரப்பட்டுள்ள தொண்டர்களுக்கு, காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 3 வேளை சிறப்பான உணவு வழங்கப்படும் என அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக செல்லூர் ராஜூ மாநாட்டில் கொடுக்கப்படும் உணவுகள், வகை வகையாக இல்லாவிட்டாலும் சுவையாக இருக்கும். மக்கள் வியந்து போகும், அளவிற்கு சாப்பாடு சுவையாக இருக்கும் என்றார்.
இந்த உணவு தயாரிக்கும் பணிகள் சனிக்கிழமை இரவு முதலே தொடங்கி மும்முரமாக நடைபெற்று வந்தது. வரிசையாக தொண்டர்கள் நின்று உணவுகளை வாங்கி சாப்பிட்டனர். காலையில் உணவு மிச்சமாகவில்லை நன்றாக சாப்பிட்ட தொண்டர்கள் மதிய நேரத்தில்தான் உணவு சுமாராக இருந்ததாக கூறினர்.
மதிய சாப்பாட்டுக்கு புளியோதரை மற்றும் சாம்பார் சாதம் தயார் செய்யப்பட்டிருந்தது. அதிகமான நபர்கள் வந்திருந்ததால் சாப்பாடு வாங்குவதற்காக போட்டி போட்டுக்கொண்டு சாப்பாடு வாங்க அதிமுகவினர் முண்டியடித்தனர். மேலும் சாப்பாடு வாங்கியவர்கள் அமர்ந்து சாப்பிடுவதற்கு இட வசதி ஏதும் செய்யாததால் கடும் வெயிலில் நின்றபடி சாப்பிட்டு ஆங்காங்கே சாப்பாட்டை தூக்கி எறிந்து சென்றனர்.
அதிமுக தொண்டர்கள் பெரும்பாலானவர்கள் மாலையிலே ஊர் திரும்பியதால் அவர்களுக்காக தயாரிக்கப்பட்ட புளியோதரை அண்டா அண்டாவாக மிச்சமானது. இதனால் மாநாட்டு திடலில் அவை டன் கணக்கில் கீழே கொட்டப்பட்டது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி மீது மலர் தூவ ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்தவர்கள் உணவில் கவனம் வைத்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மாநாடு நடைபெற்ற இடம் தற்போது குப்பை மலையாக காட்சி அளிக்கிறது. புளியோதரை வீணானது பற்றியும் பல ஆயிரம் கிலோ அரிசியில் சமைக்கப்பட்ட உணவை இப்படி மண்ணில் கொட்டலாமா என்றும் பலரும் கேள்வி எழுப்பினார் ஓ.பன்னீர் செல்வம்.
இந்த நிலையில் புளியோதரை வீணாகி கீழே கொட்டப்பட்டதை ஊடகங்களில் பெரிதுபடுத்துவதாக திருமங்கலம் சட்டசபைத் தொகுதி எம்எல்ஏ ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார். பிரம்மாண்டமாக நடைபெற்ற மாநாடு வெற்றி பெற்ற நிலையில் மிச்சமான உணவு கீழே கொட்டப்பட்டதை ஊடகங்கள் பெரிது படுத்தப்பட்டதாக கூறியுள்ளார் உதயகுமார்.
காவல்துறையினர் முழுமையான ஒத்துழைப்பு தரவில்லை. 15 லட்சம் பேர் மட்டுமே வந்தனர். பல லட்சம் மக்களுக்கு உணவு தயார் செய்யப்பட்டது. புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிச்சாமி தாயுள்ளம் கொண்டவர். மாநாடு உணவு விசயத்தில் பார்த்து பார்த்து தயார் செய்யப்பட்டது. அதிமுக மாநாடு வெற்றியை உலகமே கொண்டாடிக்கொண்டிருக்கிறது. மாநாட்டின் சிறப்பை பற்றியும், எழுச்சி உரையை பேசிக்கொண்டிருக்கும் நிலையில் கரும்புள்ளி போல உணவு வீணாகி விட்டது. பல லட்சம் பேருக்கு உணவு சமைக்கப்பட்டது. பாத்திரங்களை எடுத்துச்செல்லும் போது உணவை கீழே கொட்டி விட்டு செல்கின்றனர். அது ஆங்காங்கே சிதறி கிடப்பதை எடுத்துக்காட்டி மிகைப்படுத்துகின்றனர்.
திருமண வீடுகள், விஷேச வீடுகளில் நம்முடைய உறவினர்களுக்கு உணவு பரிமாறுவதே சவாலான விசயம். பல லட்சம் பேர் பங்கேற்ற மாநாட்டில் இப்படி நடைபெறுவது இயல்புதான். எங்கேயோ சில இடங்களில் புளியோதரை சிந்தி கிடந்ததை மிகைப்படுத்தி காட்டுகின்றனர். 1 லட்சத்து 10 ஆயிரம் கிலோவிற்கு மேல் உணவு சமைக்கப்பட்டது. எல்லோரும் வந்து உணவு சாப்பிட்டனர். இந்த சூழ்ச்சிகள், அவதூறுகள் எல்லாம் எடுபடாது. மாநாடு வெற்றியை குறை சொல்ல முடியாமல் புளியோதரை தோல்வியை மிகைப்படுத்தி காட்டுகின்றனர்.
3 இடங்களில் உணவுக்கூடம் அமைக்கப்பட்டது. 750 அடுப்புகளில் உணவு சமைக்கப்பட்டது. அதில் ஒரு இடத்தில் அவசர கதியில் உணவு கொடுத்திருக்கலாம். அதை போய் மிகைப்படுத்தி விட்டனர். இது எப்படி இருக்கிறது என்றால் உலகமே பாராட்டும் போது ஒரு ஓரத்தில் அமர்ந்து ஒப்பாரி வைப்பது போல இருக்கிறது. எல்லோரும் அதிமுக மாநாட்டினை பாராட்டும் போது புளியோதரை வேகவில்லை என்று சொல்வது வேக்காடு இல்லாதவர்கள் சொல்லும் சொல் என்றும் ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications