FSSAI தடைவிதித்த 15 மணி நேரத்தில் 11 மதுபானங்கள் டாஸ்மாக்கில் விற்பனை! ஆர்.பி.உதயகுமார் கண்டனம்
சென்னை: 11 வகையான மதுபானங்களின் விற்பனைக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI)தடை விதித்த அடுத்த நாளே அந்த மதுபானங்கள் விற்பனைக்கு தவெக அரசு அனுமதி கொடுத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தவெக ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் 717 மதுபான கடைகளில் மூடுவதாக அறிவித்தது ஆனால் அதன் உண்மை நிலை என்னவென்று நமக்கு தெரியவில்லை. இன்றைக்கு கைத்தறி நெசவாளர்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கிற கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களான நெல்லை, சேலம், கடலூர், மும்பை, ஆந்திரா உள்ளிட்ட 10 இடங்களில் இயங்கி வந்த விற்பனை நிலையங்களை தற்போது தவெக அரசால் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் அதிரடியாக மூட வேண்டும் என்று உத்தரவிட்டது.

தமிழ்நாடு அரசின் கைத்தறி துறையின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் வேஷ்டி, சேலைகள், போர்வைகள், துண்டு, பட்டு சேலைகள் , லுங்கி , சட்டைகள், பட்டு வேஷ்டிகள் குழந்தைகளுக்கான ஆடைகள் என பல வண்ண டிசைன்களை உற்பத்தி செய்யப்பட்டு கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருவது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று.
குறிப்பாக விழா காலங்களில் அதற்கு சிறப்பு தள்ளுபடி செய்து விற்பனையை அதிகமாக்கி மக்களிடத்தில் இந்த கைத்தறி , கதர் ஆடையை கொண்டு போய் சேர்க்க இதன் மூலம் வாய்ப்புகள் கிடைக்கும்.
1935 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கோஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு
சென்னையில் மட்டும் 13 இடங்களில் விற்பனை நிலையம் உள்ளன. அதேபோன்று ஒவ்வொரு மாவட்டங்களிலும் பல்வேறு முக்கிய நகரங்களில் விற்பனை நிலையம் இருக்கிறது.
தமிழ்நாடு மட்டுமல்லாது புதுச்சேரி, ஆந்திரா, பீகார் ,சத்தீஸ்கர், டெல்லி, கோவா, குஜராத் ,கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா, தெலுங்கானா, உத்தர பிரதேசம் ,மேற்கு வங்காளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களும் என மொத்தம் 135 கோஆப் டெக்ஸ் விற்பனை நிலையங்கள் நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது.
இங்கு விற்பனை செய்யும் சேலைகள், வேஷ்டிகள் மூலம் லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் முடிவு செய்யப்பட்டு கட்டி காப்பாற்ற பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 2021 நிலவரபடி 1,134 கைத்தறி நெசவாளர்களின் கூட்டுறவு சங்கத்தின் மூலம் கைத்தறி ஆடைகளை உற்பத்தி செய்யப்பட்டு வருவதை நாம் அறிவோம்.
நாடு முழுவதும் 2.44 லட்சம் கைத்தறி நெசவாளர்கள் உள்ளனர் இவர்கள் ஒரு ஆண்டுக்கு ரூபாய் 850 கோடி மதிப்பில் கைத்தறி ஆடைகளை உற்பத்தி செய்கிறார்கள். இந்த கைத்தறி ஆடைகள் மூலம் ஒவ்வொரு ஆண்டும் ரூபாய் 1200 கோடிக்கு
கோஆப்டெக்ஸ் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
திடீரென்று 10 கோஆப்டெக்ஸ் நிறுவனங்களில் விற்பனை குறைவு என காரணம் காட்டி ஆகஸ்ட் 31-க்குள் மூடுவதற்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு உத்தரவிட்டுள்ளது இது கைத்தறி நெசவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்துக்கு தொடங்கப்பட்ட ஒரே நிறுவனம் கோ ஆப்டெக்ஸ். ஒரே நேரத்தில் 10 விற்பனை நிலையங்களை மூடுவதற்கு பதில் விற்பனை குறைவான இடங்களில் விற்பனையை அதிகரிக்க புதிய யுக்தியை கடைப்பிடித்து அந்த நிறுவனம் தொடர வேண்டும் என்பதுதான் தமிழ்நாட்டு மக்களில் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
ஆனால் இந்த அரசு எடுத்தேன், கவிழ்த்தேன் என்று உத்தரவு போடுகிறது . எதிர்ப்பு வந்தால் திரும்ப பெறுவதும் வாடிக்கையாக இருக்கிறது. 11 மதுபானங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது என அந்த மதுபானங்களை டாஸ்மாக் விற்பனை நிலையங்களுக்கு சப்ளை செய்யக்கூடாது என்று தடை செய்யப்படுகிறது.
ஆனால் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தால் தடை செய்யப்பட்ட அதே 11 மதுபானங்களை விற்பனை செய்யலாம் என்று தவெக அரசு 15 மணி நேரங்களில் உத்தரவிட்டிருக்கிறது.
தவெக அரசு பார்வையை இப்போது லாப நோக்குடன் செயல்படுகிறது. அதனால் தான் 51 ஆயிரம் கோடியாக இருந்த மதுபான விற்பனையை
இந்த நிதியாண்டில் 56,000 கோடியாக உயர்த்துவதற்கு இலக்கு நிர்ணயித்து தவெக அரசு மக்களுக்கு "நல்ல மாற்றத்தை" தந்திருக்கிறது. இவ்வாறு உதயகுமார் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
