அப்பாடா.. வென்றார் அப்பாவு.. உச்சநீதிமன்றம் தர முடியாத தீர்ப்பை.. நச்சுன்னு அளித்த ராதாபுரம்!
சென்னை: இன்றைய தேர்தல் வெற்றியில் மிக மிக குறிப்பிடத்தக்கது ராதாபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் அப்பாவு வென்றதுதான்.
இவரது வரலாறு மிக மிக சோகமானது. கைக்கு அருகே வந்த வெற்றியை அதிமுகவின் இன்பதுரையிடம் வெறும் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் பறி கொடுத்தவர் அப்பாவு.. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அவர் போட்ட வழக்கில் கடந்த 5 ஆண்டுகளைக் கடந்தும் கூட இதுவரை தீர்ப்பு வரவில்லை.

உச்சநீதிமன்றம் அளிக்கத் தவறிய தீர்ப்பை இப்போது ராதாபுரம் மக்கள் சிறப்பாக அளித்து அப்பாவுவுக்கு ஆறுதல் வழங்கியுள்ளனர்.
தமிழக அரசியல்வாதிகளில் ஒரு வித்தியாசமான போராளி அப்பாவு. ஆரம்பத்தில் இவர் காங்கிரஸ்காரர். பின்னர் திராவிட அரசியலுக்கு மாறி வந்தார். மக்களுக்காக உழைப்பதில் சலிக்காதவர். அயராமல் போராடக் கூடியவர் அப்பாவு.
கடந்த 2016 சட்டசபைத் தேர்தலில் அப்பாவு ராதாபுரம் தொகுதியில் அதிமுகவின் இன்பதுரையை எதிர்த்துப் போட்டியிட்டார். அத்தேர்தலில் 49 வாக்குகள் வித்தியாசத்தில் இன்பதுரை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தபால் வாக்குகளை எண்ணாமலேயே முடிவு அறிவிக்கப்பட்டதாக கூறி எதிர்த்தார் அப்பாவு. அவரது எதிர்ப்பு கண்டு கொள்ளப்படவில்லை. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் அப்பாவு.
இதை எதிர்த்து இன்பதுரை சுப்ரீம் கோர்ட் போனார். வழக்கு விசாரணைக்கு தடை விதித்தது சுப்ரீம் கோர்ட். பின்னர் அந்தத் தடையை நீக்கிய சுப்ரீம் கோர்ட் தபால் வாக்குகளை எண்ண உத்தரவிட்டது. ஆனால் முடிவுகளை அறிவிக்க இடைக்காலத் தடை விதித்தது. அத்தோடு சரி.. இந்த வழக்கு அப்படியே கிடப்பில் கிடந்தது. ஏப்ரல் 8ம் தேதி இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை தீர்ப்பு வரவே இல்லை.
இப்படி கிணற்றில் போட்ட கல் போல இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில்தான் அப்பாவு தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்ட சட்டசபையின் ஆயுள் காலமும் முடிவுக்கு வந்தது. புதிய சட்டசபைக்கான தேர்தலும் நடந்தது. அதில் அப்பாவு அபாரமாக வென்று இன்பதுரையை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
சுப்ரீம் கோர்ட் காலத்தில் தரத் தவறிய தீர்ப்பை ராதாபுரம் மக்கள் மிகச் சிறப்பாக கொடுத்து அப்பாவுவை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளனர். என்னதான் இருந்தாலும் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.!












Click it and Unblock the Notifications