ஜனவரி 13ல் நீலகிரி வரும் ராகுல் காந்தி.. தவெகவுடன் கூட்டணியா? குழு அமைத்த செல்வப்பெருந்தகை!
சென்னை: ஜனவரி 13ஆம் தேதி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தமிழ்நாடு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூரில் நடக்கும் தனியார் பள்ளியில் நடக்கும் பொன்விழா நிகழ்ச்சியில் பங்கேற்கும் ராகுல் காந்தியை வரவேற்பதற்காகவும், நிகழ்ச்சி ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் 7 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் திமுகவிடம் இருந்து 38 தொகுதிகளை கோரி வரும் காங்கிரஸ் கட்சி, 3 அமைச்சரவை பதவிகளையும் கேட்டுள்ளது. ஆட்சியில் பங்கு கொடுக்க திமுகவினர் அதிருப்தி காட்டி வரும் சூழலில், காங்கிரஸ் கட்சியின் இந்த கோரிக்கை விவாதமாகி இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் இந்த கூட்டணி பேச்சுவார்த்தை எதிர்பார்த்ததை போல் அமையவில்லை என்றால், தவெகவுடன் கூட்டணி அமைக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சூசகமாக பேசி வருகின்றனர். தற்போது நடந்து வரும் ஜனநாயகன் பிரச்சனைக்காக விஜய்யே குரல் கொடுக்காத சூழலில், காங்கிரஸ் கட்சியும், எம்பிக்களும் அதிகளவில் குரல் எழுப்பி வருகின்றனர்.
ராகுல் காந்தியின் SIR போராட்டம் மற்றும் வாக்கு திருட்டு புகார் குறித்த வீடியோக்களை கூட தமிழக காங்கிரஸ் கட்சியினர் அதிகளவில் பகிர்ந்ததில்லை. ஆனால் விஜய்க்கு ஆதரவாக அதிகளவில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இதனால் டெல்லி காங்கிரஸ் தலைமையுடன் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த தொடங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஜனவரி 28ஆம் தேதி தமிழ்நாடு வரவுள்ளதாக காங்கிரஸ் கட்சி தரப்பில் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. ஆனால் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக ராகுல் காந்தி தமிழ்நாடு வரவிருக்கிறார். ஜனவரி 13ஆம் தேதி நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள தனியார் பள்ளியின் பொன்விழா நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளார்.
இதனால் ராகுல் காந்தியை வரவேற்கவும், நிகழ்ச்சி ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் 7 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை அமைத்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உத்தரவிட்டுள்ளார். ராகுல் காந்தியின் இந்த வருகையின் போது திமுக கூட்டணி தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications