''மானமுள்ள தமிழன் அமித்ஷா காலில் விழ மாட்டான்''.. சென்னையில் ராகுல் காந்தி ஆவேசம்!
சென்னை: எந்த மானமுள்ள தமிழனும் அமித்ஷா காலில் விழ மாட்டான் என்று சென்னையில் ராகுல் காந்தி பேசினார்.
நாம் ஒரு மடங்கு அன்பு கொடுத்தால், தமிழர்கள் இரு மடங்கு அன்பை திருப்பி தருவார்கள். நான் தமிழ் கற்று வருகிறேன் என்றும் ராகுல் காந்தி பேசினார்.

அனல் பறக்கும் பிரசாரம்
தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக, அதிமுக கட்சிகளின் சார்பில் சினிமா பிரபலங்கள் பலரும் பிரசாரத்தில் குதித்துள்ளனர். தேசிய தலைவர்களை பொறுத்தவரை பிரதமர் மோடி, அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் பாஜக, அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஏற்கனவே இரண்டு கட்டமாக தமிழகம் வந்து கொங்கு மண்டலத்திலும், தென் மாவட்டத்திலும் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

சென்னையில் ராகுல் பிரசாரம்
மக்களுடன் சேர்ந்து சமையல் செய்தல், பள்ளி மாணவியுடன் தண்டால் எடுத்தல் என பிரசாரத்தின்போது மக்களை வெகுவாக கவர்ந்தார் ராகுல் காந்தி. இந்த நிலையில் ராகுல் காந்தி பிரசாரத்துக்கு இன்று மீண்டும் தமிழகம் வந்தார். இன்று காலை கேரள மாநிலம் கொச்சியில் இருந்து சென்னை வந்த ராகுல் காந்திக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதனை தொடர்ந்து சென்னை வேளச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் அசன் மௌலானா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொண்டார்.

சகோதர, சகோதரிகள்
அப்போது அவர் கூறியதாவது:- தமிழக மக்கள் அனைவரும் எனக்கு சகோதர, சகோதரிகள்தான். நாம் ஒரு மடங்கு அன்பு கொடுத்தால், தமிழர்கள் இரு மடங்கு அன்பை திருப்பி தருவார்கள். நான் தமிழ் கற்று வருகிறேன். தமிழச்சி தங்க பாண்டியன் கவிதைகள் படித்துள்ளேன். பாஜகவில் சம மரியாதை, உரிமை கிடைக்காது.எனக்கு கீழ் கும்மிட்டு நில் என்பதே பாஜகவின் சித்தாந்தம் . காங்கிரஸ் அனைவரையும் அரவணைக்கும் சித்தாந்தம் கொண்டது. பிரதமர் மோடி தமிழக முதல்வரை ஆட்டிப்படைப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. டெல்லியில் இருந்து ஆட்சி செய்யாமல், தமிழகத்தில் இருந்து ஆட்சி செய்யும் முதல்வர் வேண்டும்.

ஸ்டாலின் முதல்வராவார்
பாஜகவை அகற்றும் வரை நானும், ஸ்டாலினும் எந்த வித சமரசமும் செய்து கொள்ள மாட்டோம். இந்த தேர்தலில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் வேர் அறுக்கப்படும். ஸ்டாலின் முதல்வராவார். யோகி ஆதித்யநாத் அமித்ஷா காலில் விழுகிறார். அவர் நேர்மையற்றவர். அமித்ஷாகாலில் முதல்வர் பழனிசாமிவிழுந்துகிடைப்பதைபார்த்தால் கோபம் வருகிறது. ஆனால் எந்த மானமுள்ள தமிழனும் அமித்ஷா காலில் விழ மாட்டான் என்று ராகுல் காந்தி பேசினார்.












Click it and Unblock the Notifications