அன்பில் மகேஷ் வீட்டில் ரெய்டு.. கோபத்தின் உச்சிக்கே போன ஸ்டாலின்.. பறந்து வந்த அட்டாக்!
சென்னை: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்குத் தொடர்புடைய இடங்களில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருவது தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. முன்னாள் முதல்வர் ஸ்டாலின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சென்னை மற்றும் திருச்சியில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட ஆறு இடங்களில் இன்று அதிகாலை முதல் இந்த சோதனை மிக தீவிரமாக நடந்து வருகிறது.

தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி வழங்குவதில் பெரிய அளவில் முறைகேடு நடந்ததாகவும், இதன் மூலம் பல கோடிக்கணக்கில் லஞ்சம் பெறப்பட்டதாகவும் கூறப்படும் புகாரின் அடிப்படையில்தான் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் பள்ளிகள் சங்கத்தின் பெயரில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரில் சில முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த வழக்கின் தொடர்ச்சியாகவும், அதன் நிதி பரிமாற்றங்களை ஆய்வு செய்வதற்காகவும்தான் தற்போதைய இந்த சோதனை நடத்தப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அன்பில் மகேஷ் வீட்டில் அதிரடி சோதனை
திருச்சி தென்னூர் அண்ணா நகரில் உள்ள முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டில், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் இன்று காலை திடீரென நுழைந்தனர். காவல்துறை அதிகாரிகள் அவரது வீட்டை முழுமையாகச் சோதனையிட்டு வருவதுடன், அப்பகுதியில் எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்கப் பலத்த காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
இதேபோல் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் அவருக்குச் சொந்தமான மற்றும் தொடர்புடைய மொத்தம் ஆறு இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடந்து வருகிறது. முக்கிய ஆவணங்களை ஆய்வு செய்வதுடன், அங்குள்ள நபர்களிடமும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. காலை நேரத்திலேயே இந்த சோதனை தொடங்கியதால், அன்பில் மகேஷ் வீட்டின் முன்பு திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்துள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
திமுக தரப்பு கடும் கண்டனம
இந்த திடீர் ரெய்டு நடவடிக்கைக்குத் திமுக தரப்பில் மிகக் கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இது குறித்துக் கடுமையான பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில், அன்பில் மகேஷ் மீது நடத்தப்படும் இந்தச் சோதனை முற்றிலும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும், மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் அப்பட்டமான தந்திரம் என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தற்போது மாநிலத்தில் மக்கள் பல அடிப்படைப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருவதைச் சுட்டிககா ட்டியுள்ள அவர், அந்தப் பிரச்சினைகளைச் சரிசெய்ய வக்கற்ற அரசு, மக்களை திசைதிருப்ப இந்த ரெய்டு அஸ்திரத்தை ஏவியுள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாடு முழுவதும் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் மக்கள் படும்பாடு, பட்டினப்பாக்கம் மீனவர்களின் போராட்டம், நேபாளத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்களின் நியாயமான போராட்டம், ஆவின் பால் தட்டுப்பாட்டால் மக்கள் படும் சிரமங்கள் ஆகியவற்றை அவர் தனது பதிவில் பட்டியலிட்டுள்ளார்.
மேலும், இராமநாதபுரம் இரட்டைக் கொலைச் சம்பவம், சென்னையில் பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலத்தின் போது அரசுப் பேருந்து ஓட்டுநர் அடித்துக் கொல்லப்பட்ட சோகம், மற்றும் அயனாவரத்தில் பெண் காவலர் விவகாரம் போன்ற பல்வேறு சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கவே இந்த நாடகம் நடப்பதாக அவர் கூறியுள்ளார். மக்களின் கோபத்தைத் தணிக்க இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகளும், ரெய்டு நடவடிக்கைகளும் உதவாது என்றும், இந்த அடாவடித் தனமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையைச் சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரின் இந்த அதிரடி சோதனையும், அதற்கு எதிர்வினையாக எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளும் தமிழகத்தில் அரசியல் சூட்டை அதிகரித்துள்ளன. தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கும் வழக்கில் அடுத்து என்னென்ன உண்மைகள் வெளிவரப் போகின்றன, காவல்துறையின் விசாரணை எந்த திசையை நோக்கிச் செல்லப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications
