Rail Fare hike: மாதாந்திர சீசன் கட்டணம் உயர்கிறதா? சென்னையிலிருந்து எந்த ஊர் வரை கட்டண உயர்வு இல்லை?
சென்னை: நாடு முழுவதும் ரயில் கட்டணம் உயரும் நிலையில் மாதாந்திர சீசன் டிக்கெட் வைத்திருப்போர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். புறநகர் ரயில்கள், மாதாந்திர சீசன் டிக்கெட்டுகளுக்கும் கட்டணம் உயர்த்தப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வரும் டிசம்பர் 26ஆம் தேதி முதல் புதிய கட்டண முறை அமலுக்கு வருகிறது. 215 கி.மீ. வரை சாதாரண வகுப்பில் பயணிப்போருக்கு கட்டண உயர்வு இல்லை. 215 கி.மீ.க்கு மேல் சாதாரண வகுப்பில் பயணித்தால் கி.மீ. க்கு 1 பைசா உயரும்.

215 கிலோமீட்டருக்கு மேல் மெயில் மற்றும் விரைவு ரயில்களில் பயணித்தால் கிலோமீட்டருக்கு 2 பைசா உயருகிறது. Non Ac-ல் 500 கிமீ பயணிக்க ரூ 10 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. ஏசி வகுப்புகளில் கிலோ மீட்டருக்கு 2 பைசா அதிகரிக்கப்படுகிறது. இந்த கட்டண உயர்வு மூலம் ரயில்வே துறைக்கு ரூ 600 கோடி வருமானம் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.
இந்த கட்டண உயர்வால் புறநகர் ரயில்கள், மாதாந்திர சீசன் டிக்கெட்டுகளுக்கு கட்டண உயர்வு இல்லை என்ற தகவலை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதனால் மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.
இந்த புதிய அறிவிப்பின்படி சென்னையில் இருந்து 143 கி.மீ. தூரம் கொண்ட காட்பாடிக்கு எந்த கட்டண உயர்வும் இல்லை. அது போல் ஆம்பூர், திருப்பதி, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளுக்கு கட்டண உயர்வு கிடையாது.
அதற்கு மேல் ஜோலார்பேட்டைக்கு செல்ல வேண்டும் என்றால் நிர்ணயித்த கிலோமீட்டரை விட 4கி.மீ. அதிகமாக இருக்கிறது. எனவே ஒரு கிலோமீட்டருக்கு 1 பைசா உயர்வு வீதம் 4 கிலோ மீட்டர் 4 பைசா உயரும்.
இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறது. முதலில் கடந்த ஜூலை மாதம் ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன.
இது குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளாக இந்திய ரயில்வே துறை அதன் சேவைகளை விரிவுப்படுத்தியுள்ளது. அதிக ரயில் சேவைகள், அதி விரைவு ரயில்கள், பாதுகாப்பான பயணம் என பல்வேறு காரணிகளில் இந்த விரிவாக்கம் நடந்துள்ளது.
இது போன்ற விரிவாக்க பணிகளுக்கு பணியாட்களும் அதிகம் தேவைப்படுகிறார்கள். அந்த வகையில் இந்த பணிகளுக்காக ரூ 1.15 லட்சம் கோடியாக ஊதியம் அதிகரித்துள்ளது. கடந்த 2024-2025 ஆம் நிதியாண்டில் ரயில்களை இயக்க ரூ 2.63 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வுகளை சமாளிக்க நடுத்தர பயணிகளளை பாதிக்காத வண்ணம் ரயில் கட்டணங்களை உயர்த்தியுள்ளோம் என தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications