ரயில் பெட்டிக்குள் பெய்த மழை.. கன்னியாகுமரி சூப்பர் பாஸ்டில் இரவு முழுக்க தூக்கத்தை தொலைத்த பயணிகள்
சென்னை: சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு சென்ற அதிவிரைவு ரயிலில் மழை நீர் ஒழுகியதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். ரயில் பெட்டிக்குள் மழைநீர் ஒழுகும் வீடியோவும் இணையத்தில் பரவி வருகிறது.
சென்னையில் இருந்து நேற்று மாலை 5.25 மணிக்கு கன்னியாகுமரிக்கு அதிவிரைவு ரயில் புறப்பட்டு சென்றது. சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை வழியாக செல்லும் இந்த ரயிலில் பயணிகள் கூட்டம் எப்போதும் அலைமோதும்.

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு அதிகாலை 4 மணியளவிலே இந்த ரயில் சென்று விடும் என்பதால் நெல்லை சுற்று வட்டார பகுதி மக்கள் இந்த ரயிலில் சென்றால், விடிவதற்குள் சொந்த ஊரில் காலடி எடுத்து வைத்து விடலாம் என நினைத்துக் கொண்டு இந்த ரயிலில் பயணிக்க அதிகம் விரும்புவார்கள்.. இதனால், சென்னை எழும்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் இந்த அதிவிரைவு ரயிலில் எப்போதும் பயணிகள் கூட்டம் அலைமோதும்.
இந்த நிலையில்தான் நேற்று மாலை வழக்கம் போல கன்னியாகுமரி அதி விரைவு ரயில் சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு சென்றது. இந்த ரயில் இன்று காலை கன்னியாகுமரிக்கு வந்து சேர்ந்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில் இன்று காலை கன்னியாகுமரி ரயில் வரும் வழித்தடங்களான வள்ளியூர், ஆரல்வாய்மொழி, நாகர் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துள்ளது.
மழை பெய்த போது ரயிலுக்குள் மழை நீர் அருவி போல கொட்டியது. இதனால், ரயிலுக்குள் தூங்கிக் கொண்டு இருந்த பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். ரயில் பெட்டிக்குள் தண்ணீர் கசியும் காட்சிகளை பயணிகள் வீடியோவாக பதிவிட்டு சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். ரயில்வே நிர்வாகம் பெட்டிகளை முறையாக பராமரிக்காததால், இரவு முழுவதும் தூக்கத்தை தொலைத்துக் கொண்டு ரயிலில் பயணம் செய்து இருப்பதாக பயணிகள் தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர்.
இதுபோன்ற நிகழ்வுகள் வரும் காலத்தில் நடைபெறாமல் இருக்க ரயில்வே அதிகாரிகள் போதிய முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்.. ரயில் பெட்டிகளை சீர் செய்வதோடு.. அவ்வப்போது சீரான முறையில் பெட்டிகள் உள்ளதா என்பதையும் அதிகாரிகள் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
ரயில் பெட்டிக்குள் தண்ணீர் கசியும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. ரயிலில் முதியவர்கள் குழந்தைகளுடன் வருபவர்கள்தான் அதிக பயணம் செய்கிறார்கள்.. அப்படி இருக்கையில், ரயிலுக்குள் இரவு நேரத்தில் தூக்கத்தை தொலைக்கும் அளவுக்கு இப்படி மழை நீர் ஒழுகினால் பயணிகள் எவ்வளவு சிரமத்திற்கு உள்ளாவார்கள் என்று தங்கள் ஆதங்கங்களை கொட்டி தீர்த்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications