பாஜகவுக்கு சிக்கல்.. ஆனால் செக் வைப்பது காங்கிரஸ் இல்லை, சுயேச்சைகள்.. ராஜஸ்தானில் சுவாரசியம்!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. தலைநகர் ஜெய்ப்பூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 150 வார்டுகளில் பாஜக 78 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 53 வார்டுகளிலும், சுயேச்சை வேட்பாளர்கள் 15 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். அங்குள்ள 10 நகராட்சிகளில் 4 மாநிலங்கள் பாஜக வசம் போய் இருக்கிறது. ஒரே ஒரு மாநகராட்சி மட்டுமே காங்கிரஸ் வசம் சென்றுள்ள நிலையில், மற்ற மாநகராட்சிகள் யாருக்கு என்பதைச் சுயேச்சைகள் முடிவெடுக்கும் நிலை உருவாகியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் இப்போது பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில், அங்கு உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அங்கு பாஜக, காங்கிரஸ் ஆண் ஆத்மி என மும்முனை போட்டி நடந்தது. இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், அதில் அதிகபட்ச இடங்களில் பாஜகவே வென்றுள்ளது.

ஜெய்ப்பூர்
அதில் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் மொத்தமுள்ள 150 வார்டுகளில் இதுவரை 146 வார்டுகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக 78 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 53 வார்டுகளிலும், சுயேச்சை வேட்பாளர்கள் 15 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம் ஜெய்ப்பூர் மாநகராட்சியை பாஜக கைப்பற்றியுள்ளது. மீதமுள்ள 4 வார்டுகளுக்கான முடிவுகள், 5 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட்ட பின்னரே தெரியவரும்.
இது குறித்து ஜெய்ப்பூர் மாவட்ட ஆட்சியர் சந்தேஷ் நாயக் கூறுகையில், "சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மறுதேர்தல் நடத்துகிறோம். இதனால் இந்த வாக்குச்சாவடிகளின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவைத் தொடர்ந்து செப்டம்பர் 16ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்தப்படலாம். அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
பாஜக- காங்கிரஸ்
ராஜஸ்தானில் உள்ள 10 மாநகராட்சிகளில் 8 மாநகராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது. ஜெய்ப்பூர், கோட்டா, உதய்பூர் மற்றும் பில்வாரா மாநகராட்சிகள் பாஜக வசம் சென்றுள்ளது. பிகானேர் மாநகராட்சியில் காங்கிரஸ் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில் பரத்பூர், ஜோத்பூர், அஜ்மீர், அல்வார் மற்றும் பாலி மாநகராட்சிகளில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை. அங்கு சுயேச்சை வேட்பாளர்கள் யாருக்கு ஆதரவு தருகிறார்கள் என்பதைப் பொறுத்தே யாருக்கு அந்த மாநகராட்சி செல்லும் என்பது அமையும்.
சுயேச்சைகள்
பாலி மற்றும் அஜ்மீரில் காங்கிரஸ் அதிக இடங்களை பெற்ற தனிப்பெரும் கட்சியாக உள்ளது. பரத்பூரில் சுயேச்சைகள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். ஜோத்பூரில் பாஜகவும் காங்கிரஸும் சம எண்ணிக்கையிலான இடங்களைப் பெற்றுள்ளதால், சுயேச்சைகளின் ஆதரவு முக்கியமாகியுள்ளது.
ராஜஸ்தான் உள்ளாட்சி தேர்தல்
ராஜஸ்தானில் 252 நகராட்சி கவுன்சில்களில் பாஜக 149 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 95 இடங்களிலும், சுயேச்சைகள் 8 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர். 47 நகராட்சிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், பாஜக 21 இடங்களிலும், காங்கிரஸ் 17 இடங்களிலும், சுயேச்சைகள் 9 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர்.
வார்டு அளவில் பார்க்கும்போது, பாஜக 3,646 வார்டுகளிலும், காங்கிரஸ் 3,110 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது. மற்ற வேட்பாளர்கள் 2,164 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர். அதாவது இந்த தேர்தல் முடிவுகளை வைத்து பார்க்கும்போது, சுயேச்சைகள் முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
