ராஜேஷ் லக்கானி மீண்டும் தமிழகம்.. நில நிர்வாக ஆணையராக புதிய பொறுப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் முக்கிய பொறுப்புகளில் ஒன்றான நில நிர்வாக ஆணையராக மூத்த ஐஏஎஸ் அதிகாரியான ராஜேஷ் லக்கானி புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசுப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் தமிழகப் பணிக்குத் திரும்பியுள்ள இவரது இந்தப் புதிய நியமனம் மாநிலத்தின் நிர்வாக வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பையும் பேசுபொருளையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசியலிலும் அரசுத்துறைகளிலும் தனது துணிச்சலான நடவடிக்கைகளால் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருபவர் ராஜேஷ் லக்கானி.. கடந்த 1992ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான ராஜேஷ் லக்கானி, தனது நீண்டகாலப் பணியின் தொடக்கமாக தருமபுரியில் உதவி ஆட்சியராகப் பதவியேற்றார்.

Rajesh Lakhoni

ராஜேஷ் லக்கானி யார்

அதனைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் தனது திறமையான நிர்வாகத் திறனை வெளிப்படுத்திய இவர், கடந்த 2003 முதல் 2004ம் ஆண்டு வரை கன்னியாகுமரி கலெக்டராகவும், 2005 முதல் 2006\ம் ஆண்டு வரை தேனி மாவட்ட கலெக்டராகவும் முத்திரை பதித்துள்ளார்.

மேலும் மாநகராட்சி நிர்வாக ஆணையர், சிப்காட் செயலாளர், சுற்றுலாத் துறை செயலாளர், வீட்டுவசதித்துறை முதன்மை செயலாளர், ஊரக வளர்ச்சித் துறை முதன்மை செயலாளர், தமிழக மின் வாரியத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறையின் முதன்மை செயலர் என பல முக்கிய உயர் பதவிகளை வகித்து தனது முத்திரையைப் பதித்துள்ளார்.

ஆர்கே நகர் தேர்தல்

குறிப்பாக, கடந்த 2015ம் ஆண்டு தமிழகத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்ற ராஜேஷ் லக்கானி, ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது, தேர்தல் நேரத்தில் நடைபெற்ற பணப்பட்டுவாடாவை கொஞ்சமும் சகித்துக்கொள்ளாமல், அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவை அதிரடியாக நிறுத்தி உத்தரவிட்டார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரலாற்றிலேயே பணப்பட்டுவாடாவை காரணம் காட்டித் தேர்தலை நிறுத்தியது அதுவே முதன்முறையாகும். அதுமட்டுமல்ல, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்ய இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்ததும் இவரே ஆவார். எனினும் இடைத்தேர்தல் முடிந்தபிறகே அவர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்...

ஸ்டாலின் அரசில் பதவி

நேர்மையான மற்றும் துணிச்சலான முடிவுகளுக்குப் பெயர்பெற்ற இவர், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றதும் திறமையான மற்றும் சுறுசுறுப்பான அதிகாரிகளின் லிஸ்ட்டில் முன்னிலை வகித்தார்.. ஸ்மார்ட் + ஆக்டிவ்வாக செயல்படும் அதிகாரிகளின் லிஸ்ட்டை ஸ்டாலின் கையிலெடுத்த நிலையில், அதில் டாப்பில் இடம்பெற்றிருந்தவர் ராஜேஷ் லக்கானிதான்.. அதன்படிதான், தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராகவும் ராஜேஷ் லக்கானி ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டார்.

மீண்டும் தமிழக பணி

இப்படி தமிழகத்தில் 33 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்து வந்த இவர், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அரசுப் பணிக்குச் சென்று நவோதயா வித்யாலயா சமிதியின் ஆணையராகச் செயல்பட்டு வந்தார்.

இதனிடையே, தனிப்பட்ட காரணங்களுக்காகத் தங்களை மாநிலப் பணிக்குத் திரும்ப அனுமதிக்க வேண்டும் என அவர் விடுத்த கோரிக்கைக்கு மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்ததை அடுத்து, அவர் மீண்டும் தமிழகப் பணிக்குத் திரும்பினார்.

இப்போது கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் நில நிர்வாக ஆணையராக அவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இவரது பதவிக்காலம் 2029ம் ஆண்டு மே 31ம் தேதி வரை நீடிக்கிறது.

நில நிர்வாக ஆணையர் பதவி

நில நிர்வாக ஆணையர் என்பது மாநிலம் முழுவதிலும் உள்ள அரசு நிலங்களைப் பராமரித்தல், பாதுகாத்தல் மற்றும் அவை தொடர்பான வருவாய் நிர்வாகத்தை முழுமையாக மேற்பார்வையிடும் ஒரு மிக முக்கியமான பொறுப்பாகும். அரசுத் திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு பணிகளுக்காக நிலங்களைக் கையகப்படுத்துவதுடன், பிற துறைகளுக்கு அரசு நிலங்களை முறைப்படி ஒதுக்கீடு செய்யும் பணிகளை இந்தத் துறை மேற்கொள்கிறது.

அதுமட்டுமல்லாமல், நிலப் பதிவேடுகளைப் பராமரித்தல், ஆக்கிரமிப்புகளில் இருந்து அரசு நிலங்களை மீட்டுப் பாதுகாத்தல் மற்றும் நில உரிமைகள் தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளுக்குச் சட்டப்பூர்வத் தீர்வுகாண்பது இதன் முதன்மை பொறுப்புகளாகும்.

சுருக்கமாக சொன்னால், சிக்கலான நில நிர்வாக அமைப்பை முறைப்படுத்தவும், அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கான நில நடவடிக்கைகளை வேகப்படுத்தவும் ஒரு கண்டிப்பான, சுறுசுறுப்பான மூத்த அதிகாரி தேவை என்ற அடிப்படையில் தான் ராஜேஷ் லக்கானி இந்தப் பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளதாகவே தெரிகிறது..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+