Flashback: "அண்ணாமலை.. மறக்க முடியுமா".. எல்லாம் முடிஞ்சு "கலைஞ்சு" போன பிறகு "அதை" வைரலாக்கும் ரசிகர்கள்!!
சென்னை: அண்ணாமலை திரைப்படம் வந்து 29 ஆண்டுகள் ஆன நிலையில் 1996ஆம் ஆண்டு அந்த படத்தின் சைக்கிளை மூப்பனார் தனது தமாகா கட்சியின் சின்னமாக்கிய நிலையில் ரசிகர்கள் பழைய நினைவுகள் அசைப்போட்டு வருகிறார்கள்.
ரஜினிகாந்த், குஷ்பு, மனோரமா, ராதாரவி, ஜனகராஜ், ரேகா, சரத்பாபு உள்ளிட்டோர் நடித்த படம் அண்ணாமலை. இந்த படத்திற்கு தேவா இசை அமைத்துள்ளார்.
பாடல்கள் அனைத்தும் ஹிட். இந்த படம் வெளியாகி நேற்றுடன் 29 ஆண்டுகள் ஆன நிலையில் ரசிகர்கள் "அண்ணாமலையை" கொண்டாடி வருகிறார்கள். பழைய நினைவுகளையும் அசைப்போட்டு வருகிறார்கள். இந்த படம் ஜூன் 27, 1992 ஆம் ஆண்டு வெளியானது. அண்ணாமலை சைக்கிளுக்கும் அரசியலுக்கும் ஒரு தொடர்பு உள்ளது. அது என்ன என்பதை ரீவைண்ட் செய்து பார்க்கலாம்.

பொதுமக்கள்
1991- 1996ஆம் ஆண்டு ஜெயலலிதா ஒரு சாலை வழியாக செல்கிறார் என்றால், அந்த சாலை வழியே போகும் பொதுமக்கள் மணிக்கணக்கில் காத்திருந்துவிட்டு அவரது கார் கடந்த பிறகுதான் அவர்கள் பயணிக்க அனுமதி கொடுக்கப்பட்டது. அது போல் ஜெயலலிதாவின் வேதா இல்லம் போயஸ் தோட்டத்தில் இருந்ததால் அங்கு வரும் வாகனங்களை போலீஸார் சோதனை செய்தனர். இதனால் அங்கு வசிப்போர் பல மணி நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. இந்த வாகன சோதனைக்கு ரஜினிகாந்தின் காரும் தப்பவில்லை.

இயக்குநர்
அதிமுக ஆட்சியின் போது இயக்குநர் மணிரத்னத்தின் வீட்டின் மீது மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசினர். இதையடுத்து 1995-இல் நடந்த பாட்ஷா வெற்றி விழாவில் பேசிய ரஜினி, "தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் அதிகமாகிவிட்டதாக" விமர்சித்திருந்தார். வாகன சோதனை, வெடிகுண்டு வீச்சு உள்ளிட்டவை ரஜினிக்கு ஜெயலலிதா மீது அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் பாட்ஷா வெற்றி விழாவில் ஜெயலலிதாவுக்கு எதிராக ரஜினி கோபத்தை காட்டிவிட்டார்.

அமைச்சர்
அதுவும் அவர் அப்போதைய அதிமுக அமைச்சர் ஆர் எம் வீரப்பன் முன்னிலையில் அவ்வாறு பேசியிருந்தார். எனினும் அதை அவர் அந்த சமயத்தில் ஆட்சேபம் தெரிவிக்காமல் இருந்ததால் ஜெயலலிதா ஆர்எம்வீயின் பதவியை பறித்தார். அந்த நேரத்தில் 1996 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. திமுகவுடன் மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி அமைத்தது. அக்கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் "ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழக மக்களை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது" என ரஜினிகாந்த் கூறி திமுக கூட்டணிக்கு வாய்ஸ் கொடுத்தார்.
|
வாய்ஸ்
இதையடுத்து சைக்கிள் சின்னம்+ ரஜினியின் வாய்ஸ் ஆகியவற்றை வைத்து அவர் நடித்த அண்ணாமலை படத்தின் ரெக்கை கட்டி பறக்குதடி அண்ணாமலை சைக்கிள்.." பாடலையும், அந்த படத்தில் அவர் பயன்படுத்திய சைக்கிளையும் தமாகாவினர் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தினர். இதையடுத்து திமுக கூட்டணி அபாரமாக வென்றது.












Click it and Unblock the Notifications