முதல்வர் வேட்பாளர்.. சின்ன ஏமாற்றம்.. மீண்டும் மா.செக்களை சந்திக்கும் ரஜினிகாந்த்.. மீட்டிங்
நடிகர் ரஜினிகாந்த் நாளை தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நாளை தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகை எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் நடிகர் ரஜினிகாந்தை தீவிரமாக உற்றுநோக்கி வருகிறது. நேற்றுதான் காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் உடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் கடந்த வாரம் நடிகர் ரஜினிகாந்த் தன் மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் உடன் சந்திப்பு நடத்தினார். சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் இந்த கூட்டம் நடந்தது. கட்சி தொடங்குவது தொடர்பாக ரஜினிகாந்த் தீவிரமாக ஆலோசனைகளை மேற்கொண்டார்.

என்ன சொன்னார் ரஜினி
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகளின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தேன். கூட்டம் நன்றாக சென்றது. அரசியல்கட்சி தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆலோசனையில் ஒரு விஷயத்தில் மட்டும் எனக்கு திருப்தியில்லை.

என்ன ஏமாற்றம்
தனிப்பட்ட ஒரு விஷயத்தில் ஏமாற்றம், அதை நேரம் வரும்போது தெரிவிப்பேன், என்று குறிப்பிட்டார். அதேபோல் நடிகர் ரஜினிகாந்த் நிர்வாகிகளிடம், சட்டசபை தேர்தலில் நாம் கண்டிப்பாக போட்டியிடுவோம். ஆனால் கண்டிப்பாக நான் முதல்வராக மாட்டேன். எனக்கு அந்த விருப்பம் இல்லை, என்று குறிப்பிட்டார். அவரின் இந்த அறிவிப்பு ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆலோசனை கூட்டம்
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நாளை மீண்டும் தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள மொத்தம் 38 ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கட்சி குறித்தும் சட்டசபை தேர்தல் குறித்தும் முக்கியமான விஷயங்களை பேச வேண்டும் என்று இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வாய்ப்பு உள்ளது
கடந்த முறை தனக்கு சின்ன ஏமாற்றம் என்று நடிகர் ரஜினிகாந்த் குறிப்பிட்டு இருந்தார். அந்த சின்ன ஏமாற்றம் எதுவென்று நாளை ரஜினிகாந்த் குறிப்பிடுவார் என்று கூறுகிறார்கள். நாளை ஆலோசனை கூட்டத்திற்கு பின் ரஜினிகாந்த் அந்த சின்ன ஏமாற்றம் எது என்று வெளிப்படையாக அறிவிப்பார் என்கிறார்கள். அதேபோல் நாளை கூட்டத்தில் மிக முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளது என்றும் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications