உதயநிதி ஸ்டாலினுக்கு போன் போட்ட ரஜினிகாந்த்.. துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ளதற்கு வாழ்த்து!
சென்னை: தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் பதவி வகித்து வரும் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்க வேண்டும் என்று திமுகவினரும், தமிழக அமைச்சர்களும் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். மேலும், தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்றும் பரவலாகப் பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில்,தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்து, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழக அமைச்சரவை மாற்றம் தொடர்பான கடிதத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்ததோடு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை தமிழக துணை முதல்வராகவும் அங்கீகரித்து நேற்று ஒப்புதல் அளித்திருந்தார்.
உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் திமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். துணை முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாது திரைத்துறையினர் பலரும் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், நடிகர் ரஜினிகாந்த், தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ள வாழ்த்து தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.
முன்னதாக நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமானன கமல்ஹாசன், "நீங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், தமிழக மக்கள் மீதும் உறுதிமொழி எடுத்துக் கொண்டீர்கள். அவற்றிற்கு நீங்கள் உண்மையாக சேவை செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன். வாழ்த்துகள்" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications