வழிவிட்ட ரஜினி.. ஹைலைட்டாகிறார் கமல்.. இனிதான் இருக்கு.. அதிரடி அரசியல் காட்சிகள்!
கமலின் அரசியல் அதிரடி இனி ஆரம்பமாகிறது
சென்னை: ரஜினிகாந்த் அரசியலுக்கு வர மாட்டேன் என்று முறைப்படி அறிவித்து விட்டார். இதனால் அனைவரின் பார்வையும் கமல்ஹாசன் மீது திரும்பியுள்ளது. மறுபக்கம் அவரது அரசியல் அணுகுமுறையும் மக்களிடையே பிரபலமாகியுள்ளது.
கமலின் அரசியலில் அணுகுமுறை பல்வேறு விமர்சனங்களையும், வரவேற்புகளையும், விவாதங்களையைம் தினந்தோறும் கிளப்பி விட்டுக் கொண்டே இருக்கிறது!
மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தன்னுடைய பிரச்சாத்தை படுசீரியஸாக தொடங்கிவிட்டார்.. கமலின் பிரச்சாரத்துக்கு மக்கள் கூட்டம் அலைமோதுவதை பார்க்க முடிகிறது.. அதேசமயம், ஒவ்வொரு பிரச்சாரத்திலும் கமலின் பேச்சுக்கள் மற்ற கட்சியினராலும் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.

2 விஷயங்கள்
அந்த வகையில் கமல் பேசிய 2 விஷயங்களை நாம் குறிப்பிட்டு சொல்லலாம்.. ஒன்று, கமல் அறிவித்திருக்கும் 7 திட்டங்கள், பொதுமக்களை ஈர்த்துள்ளது.. வழக்கமாக தேர்தல் சமயத்தில் இதுபோன்ற அறிவிப்புகள் வெளியாவதும், அது அவர்களது தேர்தல் அறிக்கையில் இடம்பெறுவதும் இயல்பான ஒன்றுதான்.. இருந்தாலும் இது நடைமுறையில் எந்த அளவுக்கு சாத்தியம் என்ற கேள்வியும் கமல் விஷயத்தில் எழுகிறது.

வீடுகள்
இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்குவது, தற்சார்பு கிராமங்கள் உருவாக்குவது, காகிதங்களே இல்லாமல் அனைத்தும் கணினிமயமாக்கப்படுவது அதாவது துரித நிர்வாகத் திட்டம், சேவை உரிமைச் சட்டம் கொண்டு வரும் திட்டம், எல்லா வீடுகளுக்கும் மிக அதிவேக இன்டர்நெட் இணைப்புடன்கூடிய கணினி வசதி திட்டம், பசுமைப் புரட்சித் திட்டம், ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு தொழில்களை உருவாக்கும் திட்டம் என்பன உட்பட 7 அம்சத் திட்டங்கள்தான் அவை.

அறிவிப்புகள்
மேலோட்டமாக பார்ப்பதற்கு இவை அனைத்துமே நல்ல அம்சங்கள்போலவும், மக்களுக்கு இன்றியமையாதது போலவும், நவீனமயமானது போலவும் தோன்றினாலும், இதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.. "ஏற்கனவே இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்று பல காலமாக இங்குள்ள கோரிக்கைதான்... அதேபோல, தற்சார்பு கிராமங்கள் போன்றவையும் காந்திய கொள்கைகளுள் ஒன்றுதான்.

திட்டங்கள்
அனைத்து பகுதிகளுக்கும் நெட் சேவையை வழங்குவது என்பதும் தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம்தான்.. பேப்பர் இல்லா அரசு அலுவலகங்கள் என்பது புதிது.. ஆனால் கமலின் இந்த திட்டங்கள் எல்லாம் அதிகமாக செலவாகும் திட்டங்களாகவே இருக்கின்றன.. தவிர, அரசுக்கு வரவுகளை பற்றி அவர் சொல்லவே இல்லை.. ஏற்கனவே தமிழ்நாடு கடனில் இருக்கிறது.. அதை மீட்டெடுக்க ஒருவழியை சொன்னால் நல்லா இருக்கும்" என்கின்றனர்.

அதிமுக
அடுத்ததாக, "மக்கள் நீதி மையம் கட்சியும் திராவிட கட்சிதான்" என்று கமல் சொன்னது அடுத்த விவாதத்தை கிளப்பி உள்ளது.. மய்யம் என்றாலே வலதும் இல்லை இடதும் இல்லை என்று கமல்தானே சொன்னார்? இப்போது எதற்காக இவர் திராவிட கட்சிகளுடன் இணைகிறார் என்ற கேள்விகளும் எழுகின்றன. மற்றொரு பக்கம் இவ்வளவு காலமாக இல்லாமல், திடுதிப்பென்று தேர்தல் நேரத்தில் வந்து எம்ஜிஆர் ஆட்சி என்கிறார், திராவிட கட்சி என்கிறார், இது சந்தர்ப்பவாத அரசியல்தானே என்றும் கேள்விகள் எழாமல் இல்லை.

எம்ஜிஆர்
அதேபோல, கலைஞர் கருணாநிதியும் எவ்வளவோ நலத்திட்டங்களை செய்துள்ளபோது, எதற்காக கமல், எம்ஜிஆரையே பிடித்து கொண்டிருக்கிறார்? என்ற சந்தேகமும் எழுகிறது.. இதற்கு காரணம், திமுகவில் அதிமுக அளவுக்கு பிரச்சனைகள் இல்லை, உட்கட்சி பூசல் இல்லை.. முக்கியமான ஆளுமை இல்லை.. ஜெ. இறந்ததில் இருந்தே ஆட்டம் கண்டு போயிருக்கும் அதிமுகவுக்கு குறி வைத்தே கமலின் பிரச்சாரமும், பேச்சும் இருப்பதாக கணிக்கப்படுகிறது.

விவாதங்கள்
இதில்தான் ரஜினி வந்து இணைந்தால் நன்றாக இருக்கும் என்று கமல் விரும்புகிறார்.. ஆனால் இப்போது ரஜினி பின்வாங்கி விட்டார். வரப் போவதில்லை என்று சொல்லி விட்டார். இதனால் கமல் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது... அத்தனையையும் கமல் ஒருவரே சந்திக்க போகிறார்.. அதனால் தமிழக அரசியலில் இனி அதிரடிகள் காத்திருக்கின்றன.. கமலின் பேச்சுக்கள் ஒவ்வொரு வகையிலும் விவாதத்தை கிளப்பினாலும், அவரது சில திட்டங்களும், அறிவிப்புகளும், முன்னெடுத்து செல்லும் அரசியலும் திராவிட கட்சிகளையே வியக்க வைத்து வருகின்றன என்பதையும் மறுக்க முடியாது!


Click it and Unblock the Notifications
