3 முறை வெளியே வந்த ரஜினிகாந்த்.. ரசிகர்களை பார்த்ததும் உற்சாகம்! பொங்கல் வாழ்த்துடன் சூப்பர் அப்டேட்
சென்னை: ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று இன்று 3 முறை தனது வீட்டுக்கு வெளியே வந்து தமது ரசிகர்களைச் சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த். மேலும், செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தான் நடிக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த சூப்பர் அப்டேட் ஒன்றையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு, தீபாவளி, ரஜினிகாந்த் பிறந்தநாள் உள்ளிட்ட நாட்களில் அவரது இல்லத்திற்கு முன்பாக அவரது ரசிகர்கள் கூடுவது வழக்கம். அன்றைய தினங்களில் நடிகர் ரஜினிகாந்த், வீட்டுக்கு வெளியே வந்து தனது ரசிகர்களைச் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பார். அந்த வகையில் இன்றைய தினம் தைப் பொங்கல் நாளன்று தனது வீட்டுக்கு முன்பாக திரண்டு இருந்த ரசிகர்களை சந்தித்து ரஜினிகாந்த் வாழ்த்துகளை தெரிவித்தார்.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இல்லத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி அவரிடம் வாழ்த்துக்களை பெறுவதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான ரசிகர்கள் காலை முதலே அவரது இல்லத்திற்கு முன்பாக குவிந்தனர். பின்னர் தனது இல்லத்தின் முன்பு வெளியே நின்ற ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் அவரது வீட்டில் இருந்து வெளியே வந்து ரசிகர்களுக்கு கை அசைத்து பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த்தை கண்டதும் ரசிகர்கள் 'தலைவா' என ஆரவாரம் செய்தனர்.
ரசிகர்கள் வருகை அதிகமாக இருந்ததால் நடிகர் ரஜினிகாந்த் இல்லத்தின் முன்பு போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தினர். ரஜினிகாந்த் முதலில் கையசைத்து ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, பின்னர் கதவை திறந்துகொண்டு வெளியில் வந்து ரசிகர்களைச் சந்தித்தார். ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
ரஜினிகாந்த் முதல் முறை வெளியே வந்த போது ரசிகர்கள் அவரை சரியாக பார்க்க முடியவில்லை என ரசிகர்கள் கூறினர். அதனை ஏற்று இரண்டாம் முறையாக தனது இல்லத்தில் இருந்து வெளியே வந்து ரசிகர்களை சந்தித்தார். மீண்டும் ரசிகர்கள் 'உங்களை பார்க்க வேண்டும் தலைவா' என தொடர்ந்து கூச்சலிட்டனர். அதனைத் தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் தனது இல்லத்தில் இருந்து வெளியே வந்து நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களைச் சந்தித்தார்.
செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் கூறுகையில், "அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள். குறிப்பாக இந்த பொங்கல் விவசாயிகளுக்கான பொங்கல். விவசாயிகள் நமது நாட்டின் முதுகெலும்பு. அவர்கள் சந்தோஷமாக மகிழ்ச்சியாக இருந்தால் தான் மற்றவர்களும் சந்தோஷமாக இருக்க முடியும்" எனத் தெரிவித்தார்.
மேலும் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நீங்கள் நடிக்கும் தலைவர் 173 படம் குறித்து சொல்லுங்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த், "இயக்குநர் சிபி சக்கரவர்த்தியோடு நடிக்கும் திரைப்படம் ஏப்ரலில் தொடங்கும். அந்த திரைப்படம் அனைவருக்கும் பொழுதுபோக்கு தரக்கூடிய கமர்ஷியல் படமாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications