படங்களில் ரஜினி! அரசியலில் கிட்டத்தட்ட எம்ஜிஆர்! கேப்டன் விஜயகாந்த் சாதித்ததும் சந்தித்த சறுக்கல்களும்
சென்னை: எம்.ஜி.ஆருக்கு பிறகு அரசியல் மற்றும் சினிமா என இரண்டிலும் சாதித்துக் காட்டிய ஒரே நடிகராக விஜயகாந்த் இருக்கிறது. சினிமாவில் டாப் இடத்திற்குச் சென்ற விஜயகாந்த், தேமுதிக என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி அதிலும் சாதித்துக் காட்டினார்.
தமிழ் சினிமாவில் விஜயகாந்த் செய்த சாதனைகள் என்பது ரஜினிகாந்த்தின் சாதனைகளுக்கு நிகரானது. அதேபோல அரசியல் வாழ்க்கையில் அவரது வெற்றி எம்ஜிஆர் போல இருந்ததாக அவரது தொண்டர்கள் கூறுகின்றனர்.

தமிழ்நாட்டில் உச்ச நட்சத்திரங்களுக்கு எப்போதும் புரட்சித் தலைவர், நடிகர் திலகம் என்ற அடைமொழி வழங்கப்படும். அதேபோல விஜயகாந்த்தையும் அவரது ரசிகர்கள் கேப்டன் என்றே அழைத்தார்கள்.
விஜயகாந்த்:தமிழ்நாட்டை பொறுத்தவரை சினிமாவும் அரசியலும் எப்போதும் பின்ணி பிணைந்தே இருந்துள்ளது. ஆனால், சினிமாவில் சாதித்த அனைவராலும் அரசியலும் சாதித்து விட முடியாது. எம்ஜிஆர் இதை வெற்றிகரமாகச் செய்திருந்தார். எம்ஜிஆருக்கு பிறகு சினிமாவில் தனக்குக் கிடைத்த புகழை அரசியல் வாக்கு வங்கியாக மாற்றிய ஒரே நபர் என்றால் அது விஜயகாந்த் தான்.. ஜெயலலிதாவும் அரசியல் உச்சத்தை தொட்டு இருந்தார் என்ற போதிலும் அவருக்கு ஆரம்பக் காலத்தில் உதவிக்கு எம்ஜிஆர் இருந்தார்
இடைப்பட்ட காலத்தில் பல நடிகர்கள் அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள போதிலும், அவர்களால் பெரியளவில் வெற்றி பெற முடியவில்லை. சிவாஜி கணேசன் தொடங்கி கார்த்தி, கமல் என நாம் பலரை உதாரணமாகச் சொல்ல முடியும்.
படங்கள்: விஜயகாந்த் தமிழ் சினிமாவில் 150+ படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக போலீஸ் அதிகாரியாக அவர் வரும் பெரும்பாலான படங்கள் மெகா ஹிட்.. அதில் 20+ படங்களில் அவர் போலீஸ் அதிகாரியாக மட்டும் நடித்துள்ளார். அவர் நடித்த பெரும்பாலான படங்களில் நேர்மை, ஊழல் எதிர்ப்பு ஆகியவை முக்கியத்துவம் பெறும். இது ஏழைகள் மத்தியில் அவருக்கான அரசியல் ஆதரவை அதிகரித்துள்ளது.
தொடக்கத்தில் அவரது நண்பர் ராவுத்தர் உள்ளிட்டோர் அவருக்கு உதவியாக இருந்தனர். இருப்பினும், பின்னாட்களில் அவரது மனைவி பிரேமலதா மற்றும் எல் கே சுதேஷ் ஆகியோர் திரைப்படங்கள் தொடர்ந்து அனைத்து விஷயங்களிலும் முடிவு செய்யத் தொடங்கினர். விஜயகாந்த்திற்கு நெருக்கமான மற்றும் நம்பிக்கைக்குரிய நபர்கள் அவரிடம் இருந்து விலக்கி வைக்கப்பட்டது இதற்குப் பின்னர் தான் என்று கூறுவார்கள். ராவுத்தர், ராமு வசந்தன் என நாம் பலரை உதாரணமாகச் சொல்லலாம்.
ஹிட் அடித்த படங்கள்: 1980களில் இருந்து அவரது படங்கள் தொடர்ச்சியாக வெளியாகி வந்தது. அவரது படங்கள் நகர்ப்புறங்களைக் காட்டிலும் கிராமப்புறங்களில் ஹிட் அடித்தது. குறிப்பாக பி மற்றும் சி சென்டர்களில் அவர் ராஜாவாகவே வலம் வந்தார். 'சின்ன கவுண்டர்' படத்தை நாம் உதாரணமாகச் சொல்லலாம். கிராமப்புறங்களில் அந்த படம் ஓராண்டிற்கு மேல் ஓடியது. அம்மன் கோயில் கிழக்காலே, செந்தூர பூவே, வைதேகி காத்திருந்தாள் என்று நாம் பல படங்களை உதாரணமாகச் சொல்லலாம்.
இதுபோன்ற படங்கள் ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் இடையே அவரது வாக்கு வங்கியை அதிகரிக்க உதவியது. 1991ஆம் ஆண்டில் அவர் நடித்த கேப்டன் பிரபாகரன் திரைப்படம் மிகப் பெரிய ஹிட் அடித்தது. இதுதான் அவருக்கு கேப்டன் என்ற பெயரை பெற்றுத் தந்தது. இதுபோன்ற படங்கள் பின்னாட்களில் கிராமப்புறங்களில் அவருக்கு வாக்குகளைப் பெற்றுத் தந்தது.
புது கட்சி தொடக்கம்: 2005இல் விஜயகாந்த் பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட மூத்த அரசியல்வாதிகள் உதவியுடன் தேமுதிக என்ற கட்சியைத் தோற்றுவித்தார். எம்ஜிஆர் தனது பிரச்சாரத்திற்குப் பயன்படுத்திய நீல நிற வேனில் தான் விஜயகாந்த் பேரணிக்கு வந்தார். தேமுதிகவின் தொடக்க விழாவுக்குக் கூடி பிரம்மாண்ட கூட்டம் அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் இருந்தது. கேப்டன் விஜயகாந்த்தை தேமுதிக தொண்டர்கள் "கருப்பு எம்ஜிஆர்" என்றும் கூட அழைத்தனர்.
2006 சட்டமன்றத் தேர்தல் தான் தேமுதிக முதலில் எதிர்கொண்ட தேர்தலாகும். அதில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட தேமுதிக வெறும் 1 இடத்தில் மட்டுமே வென்றது. அந்தத் தேர்தலில் விஜயகாந்த் மட்டுமே வெற்றி பெற்றாலும், 8% வாக்குகளை தேமுதிக பெற்றது. அதேபோல 2009 லோக்சபா தேர்தலில் தேமுதிக 10.3% வாக்குகளைப் பெற்று, வாக்கு வங்கி அடிப்படையில் தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது.
எதிர்க்கட்சி தலைவர்: 2011 சட்டசபைத் தேர்தல் தான் தேமுதிக உச்சம் தொட்டது. அந்தத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட தேமுதிக, 41 இடங்களில் போட்டியிட்டு 29 இடங்களை வென்றது. மேலும், எதிர்க்கட்சி தலைவர் என்ற பொறுப்பையும் பெற்றார். ஆனால், அதன் பிறகு விஜயகாந்த்திற்கு வெற்றி முகம் இல்லை. 2014இல் அவர் லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தார். இருப்பினும். அதில் அவரால் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியவில்லை.
2016 சட்டசபைத் தேர்தலுக்கு இடதுசாரிகளுடன், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து மக்கள் நலக்கூட்டணியை அவர் உருவாக்கினார். இருப்பினும், அதிலும் அவரால் ஒரு இடத்திலும் வெல்ல முடியவில்லை. தேமுதிக வாக்கு வங்கியும் 2.4%ஆக குறைந்தது. 2019 லோக்சபா தேர்தல், 2021 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல்களில் தேமுதிக வாக்கு வங்கி மேலும் மேலும் குறைந்தது. இந்த இரு தேர்தல்களில் முறையே 2.16% and 0.43% வாக்குகளை மட்டுமே தேமுதிக பெற்றது.
சினிமாவில் அவர் ரஜினி ஸ்டைலை வைத்திருந்த நிலையில், அரசியல் களத்தில் எம்ஜிஆர் ஸ்டைல் அரசியலைப் பின்பற்றினார். இருப்பினும், உடல்நிலை உள்ளிட்ட சில காரணங்களால் அவரால் சினிமாவில் தொட்ட உயரத்தை அரசியலில் தொட முடியவில்லை.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications