"அவர்" இல்லாவிட்டால் என்ன.. திமுகவை நாங்களே காலி செய்வோம்.. போட்டு தாக்கும் அர்ஜுன் சம்பத்
ரஜினியின் ஆன்மீக அரசியலை நாங்கள் முன்னெடுப்போம் என்று அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்
சென்னை: "ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்றாலும் ஆன்மீக அரசியலை முன்னெடுத்து திமுகவை தோற்கடிப்போம்" என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.
ரஜினிதான் அடுத்த முதல்வர் என்று சொன்னவர்களில் மிக முக்கியமானவர் அர்ஜுன் சம்பத்.. ரஜினியே சும்மா இருந்தாலும், அடிக்கடி பேட்டிகளை தந்து அரசியலுக்கு அவரை வரும்படி அழைத்து கொண்டே இருந்தவர்.
"பற்றற்ற தன்மைதான் ஆன்மீக அரசியல்.. ரஜினியின் ஆன்மீக அரசியல் எனக்கு ரொம்பவும் பிடித்து போய்விட்டது.. நிச்சயமா.. ஆன்மீக அரசியலை சேர்ந்து செய்வோம்... அவருக்கு பக்கபலமா இந்து மக்கள் கட்சி துணை இருக்கும்... ஒரு மாற்றத்தை தமிழகத்தில் உண்டு பண்ணுவோம்" என்று நமக்கு அளித்த ஒரு பேட்டியில் அர்ஜுன் சம்பத் ஏற்கனவே தெரிவித்திருக்கிறார்.

பேட்டி
இந்நிலையில், ரஜினி தன் முடிவில் பின்வாங்கியதை அடுத்து அர்ஜுன் சம்பத் ஒரு பேட்டி தந்துள்ளார்.. இந்து மக்கள் கட்சி சார்பில் பொள்ளாச்சியில் வேல் வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது... இதில் கலந்து கொண்ட அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் பேசியபோது சொன்னதாவது:

அரசியல் கட்சி
"ரஜினியின் முடிவை இந்து மக்கள் கட்சி வரவேற்கிறது... ரஜினி அரசியல் கட்சி துவங்கும் அறிவிப்பு திமுகவை தோற்கடிக்கதான் என்றும் அதற்காகதான் ரஜினி, கமல் போன்றவர்களை அரசியல் கட்சிகள் துவங்க வைக்கிறார்கள் என்றும் ஸ்டாலின் வெளிப்படையாகவே பேசினார்.. அதுமட்டுமல்ல, ரஜினி அரசியல் கட்சி ஆரம்பித்தால் அவரது வாக்குகள் பாஜகவுக்கு சென்றால் அதிமுக தோல்வியடையும் என்று நினைத்தார்கள்.

ரஜினி கொள்கை
திராவிட அரசியலின் மோசமான நிலைமையை மக்கள் மனதில் ரஜினி பதிய வைத்துள்ளார்... ரஜினியின் கொள்கைகளை முன்னிறுத்தி திமுகவை நாங்கள் தோற்கடிப்போம்... 234 தொகுதிகளில் ரஜினியின் ஆசியோடு ஆன்மீக அரசியலை முன்னெடுத்து திராவிட அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.. திமுகவின் கிராம சபை கூட்டம், ஸ்டாலினின் அரசியல் நடவடிக்கை ஏற்கனவே கட்சி சார்பற்ற பல நிறுவனங்களை ஆக்கிரமித்து வைத்துள்ளது.

கிராம சபை
கிராம சபை என்பது கட்சி சார்பற்றது... அங்கு எதுக்காக அரசியல் செய்ய வேண்டும்... கிராமசபை, கூட்டுறவு சங்கங்கள் கட்சி சார்பற்று இருக்க வேண்டும் என அனைவரும் நினைக்கிறார்கள். திமுகவின் இந்த அரசியல் நடவடிக்கை ஜனநாயக அமைப்புகளையும் நாற்றங்கால்களையும் சிதைக்கும் வேலை" என்று கூறியுள்ளார். ரஜினியே அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கிவிட்ட நிலையில், அவரது கொள்கையை வைத்து, திமுகவையே காலி செய்வோம் என்று அர்ஜுன் சம்பத் பேசியுள்ளது பெரும் பரபரப்பை தந்து வருகிறது.


Click it and Unblock the Notifications
