அரசியலுக்கு வர முயன்ற ரஜினியை மிரட்டியதே திமுக தான்.. ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர முயன்ற போது அவரை திமுக குடும்பம் மிரட்டியது என்று தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டியுள்ளார். ரஜினிகாந்தை விமர்சிக்கவில்லை, ஆனால் விஜய்யிடம் அந்த வலிமை இருக்கிறது என்றும், தனிப்பட்ட முறையில் விஜய் மீது விமர்சனம் வந்த போதும் அஞ்சவில்லை என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக கூறி மாவட்டத் தலைநகரங்களில் தவெக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதில் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், எம்ஜிஆருக்கு பின் ஒரு பிரபலமான நடிகராக இருந்து அரசியலுக்கு வர நினைத்தவர் ரஜினிகாந்த்.

தமிழக அரசியலுக்கு வந்து சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என்று விரும்பியவர். எல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்தவர். ஆனால் அதே திமுக குடும்பம் ரஜினிகாந்த்க்கு பல மிரட்டல்களை கொடுத்து அரசியலுக்கு வர விடாமல் பார்த்து கொண்டனர். இன்று என்ன ஆனது.. கடைசியில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பிலேயே நடிக்க போய்விட்டார்.
ரஜினிகாந்த் மீது எந்த விமர்சனமும் கிடையாது. ஆனால் அந்த மனவலிமை.. விஜய்யிடம் இருக்கிறது.. நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்.. கரூர் சம்பவத்திற்கு பின்னரும் நாங்கள் வெளியில் வந்துவிட்டோம்.. தனிப்பட்ட விமர்சனங்கள் முன் வைத்த போது வீட்டில் அமைதியாக உட்காரவில்லை பயந்து கொண்டு.. மகளிர் தினத்தன்று 12 வாக்குறுதிகளை வெளியிட்டார்.
அதேபோல் கரூரில் விஜய் நடத்திய பரப்புரை கூட்டத்தின் போது மட்டும் செருப்பு வீசப்பட்டது ஏன்? மற்ற ஊர்களில் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை.. திருவாரூரில் விஜய்க்கு வந்த கூட்டத்தை பார்த்து திமுகவுக்கு அச்சம்.. எனக்கு மட்டும் ஏன் சம்மன் என்று செந்தில் பாலாஜி கேட்கிறார். அவர்தான் முதல் குற்றவாளி என்று தெரிவித்துள்ளார்.
ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு பல்வேறு தரப்பினர் மத்தியிலும் விமர்சனத்தை பெற்று வருகிறது. ஏனென்றால் அரசியலுக்கு வருவதாக முடிவு எடுத்த போதும், ரஜினிகாந்த் முரசொலி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதேபோல் அண்ணாத்த படத்தை விநியோகம் செய்ததும் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் தான். அதேபோல் முதல்வர் ஸ்டாலினுடன் தொடர்ச்சியாக ரஜினிகாந்த் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications