செய்தி உண்மையோ, பொய்யோ.. ரஜினிக்கு கண்டிப்பாக டிவி சேனல் தேவைதான்..!
ரஜினி சேனல் ஆரம்பிக்க போவதாக வதந்திகள் பரவுகின்றன.
Recommended Video

சென்னை: இவ்வளவு காலம் இல்லாமல் இப்போது ரஜினி ஒரு சேனலை தொடங்குவதாக செய்திகள் உலா வருகின்றன.
இது உண்மையா? பொய்யா? என தெரியவில்லை. இது சம்பந்தமாக இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வமான தகவல்கள் மன்றத்தின் தரப்பிலோ, ரஜினி சார்பாகவோ வரவில்லை.
பத்திரிகையாளர்களிடம் இந்த சேனல் சம்பந்தமாக விளக்கமும், மறுப்பும் பகிரங்கமாக தெரிவிக்கப்படவில்லை.

ரியாக்ஷன்ஸ்
ஆனால் ரஜினி சேனல் ஆரம்பித்த தகவல் பரவிய உடனேயே அதை பற்றின கருத்துக்கள் கூடவே எழ ஆரம்பித்துவிட்டன. அந்த கருத்துக்கள்தான் இவை. நல்லதோ, கெட்டதோ, ஆனால் சமீப காலமாகவே அரசியல் நிகழ்வுகளுக்கு எல்லாம் ரியாக்ஷன் காண்பித்து வருகிறார் ரஜினி.

பாஜகவின் பிம்பம்
பாஜக தரப்பு குறித்து இவர் எத்தனை விதமான பேட்டி கொடுத்தாலும் பாஜகவின் பிம்பம் என்பது உடையாமல்தான் இன்னமும் உள்ளது. அந்த பிம்பத்தை தகர்க்க ரஜினி பெரிய அளவில் எதையும் செய்யவில்லை, சொல்லவும் இல்லை.

தமிழருவி மணியன்
கட்சி ஆரம்பிக்க போகிறேன் என்று ரஜினி சொல்லி.. இதோ 31ம் தேதி வந்தால் ஒரு வருஷம் ஆகப் போகிறது. ஆனால் வெறும் அறிவிப்புதான் வந்தது, ரஜினி கட்சி தொடங்க மாட்டார் என்றே பலரும் பேசினர். ஆனால் தமிழருவி மணியன் போன்றோர் மட்டும் ரஜினி கட்சி மீது அபார நம்பிக்கை வைத்து, விரைவில் கட்சி ஆரம்பிப்பார் என்று சொன்னார்கள்.

ரசிகர்கள் ஆசை
அரசியல் கட்சி தொடங்கி உள்ள, மற்றும் தொடங்க போகும் பலருக்கும் விதையாகவும், வேராகவும், மூலமாகவும் இருப்பது அவர்களின் சொந்த சேனல்கள்தான். எனவே ரஜினிக்கும் சொந்தமாக சேனல் தேவை என்ற எண்ணம் அவர்களது ரசிகர்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கிறது.

ஆயத்த பணிகள்
இரண்டாவதாக, கட்சி எப்போது ஆரம்பிக்க போகிறீர்கள் என்று ரஜினியிடம் செய்தியாளர்கள் அடிக்கடி கேட்டு கொண்டே இருந்தார்கள். அப்போதெல்லாம் ரஜினி சொன்ன பதில், "உங்களுக்காக எல்லாம் நான் அவசரப்பட்டு கட்சி ஆரம்பிக்க மாட்டேன். அதற்கான ஆயத்த பணிகளை முடிச்சுட்டுதான் கட்சி ஆரம்பிப்பேன் என்றார்.

யார் நிர்வகிப்பது?
அதற்கேற்றார்போல், ரஜினி மக்கள் மன்றம் உருவானது. உறுப்பினர்கள் சேர்க்கை ஆரம்பமானது... புதிய ஆப் தொடங்கப்பட்டது. மக்கள் மன்றமும் விரைந்து முன்னேறியது. இப்போது அடுத்தக்கட்டமாக சேனல் என்ற பேச்சு கிளம்பியுள்ளது. இது வதந்தியா அல்லது உண்மையா என்று தெரியவில்லை. ஒருவேளை ஆரம்பிப்பதாக இருந்தால் அதை நிர்வகிப்பது ரஜினி மன்றமாக இருக்குமா அல்லது வேறு யாரேனும் இருப்பார்களா என்பதும் தெரியவில்லை.

கேப்டன் டிவி
ரஜினி தனியாக சேனல் ஆரம்பித்துவிட்டால், அவர் சம்பந்தப்பட்ட செய்திகளை மற்ற சேனல்கள் ஒளிபரப்புமா என தெரியவில்லை. காரணம் விஜயகாந்த் கேப்டன் டிவி ஆரம்பித்த பிறகு மற்ற சேனல்களில் அவரது செய்திகள் வெகுவாக குறைந்து போய் விட்டன. இப்போது கேப்டன் டிவியையே தேடும் அளவுக்குத்தான் நிலைமை உள்ளது.

வதந்தி எதற்கு?
எப்படி பார்த்தாலும் ரஜினி சேனல் ஆரம்பித்தால் அது நிச்சயம் அவருக்கும், அவரது மன்றத்தினருக்கும் உதவியாகத்தான் இருக்கும். ரஜினி குறித்து நிறைய செய்திகள், வதந்திகள்.. அதில் பத்தோடு பதினொன்றாக இந்த சேனல் மேட்டரும் இணையுமா என்று தெரியவில்லை.












Click it and Unblock the Notifications