4, 5 பாலய்யா படம் பார்த்த மாதிரி..காலைல இருந்து சட்டசபை லைவ் பார்த்து Hangover! ராஜு முருகன் கலாய்!
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே நடைபெற்ற காரசாரமான விவாதம் அரசியல் வட்டாரங்களில் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில், அந்த விவாதத்தை நகைச்சுவையான முறையில் விமர்சித்துள்ளார் இயக்குநர் ராஜு முருகன்.
தமிழக சட்டப்பேரவையின் தற்போதைய கூட்டத்தொடரில் ஆளுங்கட்சியான தவெகவுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடுமையான வார்த்தைப் போர் நடைபெற்றது. குறிப்பாக, ஊழல் குற்றச்சாட்டுகள், சமூகநீதி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவையில் கடும் விவாதங்கள் நடந்தன.
இந்த சூழலில் முதலமைச்சர் விஜய் நீண்ட நேரம் உரையாற்றி எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்தார். தனது உரையில், மக்கள் ஆதரவால்தான் தற்போதைய அரசு அமைந்துள்ளது என்றும், ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை
மேலும், சமூகநீதி குறித்து பேசுபவர்கள் தங்களது ஆட்சிக் காலத்தில் பட்டியலின சமூகத்தினருக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தனர் என்று கேள்வி எழுப்பிய அவர், தற்போதைய அமைச்சரவையில் எட்டு பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்களும், நான்கு பெண் அமைச்சர்களும் இடம்பெற்றிருப்பதாக குறிப்பிட்டார். அதேபோல், அரசியல் விமர்சனங்கள் மற்றும் நையாண்டிகள் மட்டுமே செய்து வருபவர்கள் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை முன்வைக்க வேண்டும் என்றும், மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் எந்த கருத்தையும் அரசு ஏற்றுக்கொள்ள தயார் என்றும் கூறினார்.
விஜய்
முதலமைச்சரின் உரையின்போது அவையில் பலமுறை பரபரப்பு ஏற்பட்டது. சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்ததோடு, பின்னர் வெளிநடப்பும் செய்தனர். சட்டப்பேரவை நிகழ்வுகள் தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் நேரலையாக ஒளிபரப்பட்ட நிலையில், விஜய்யின் பேச்சு வரவேற்பையும், விமர்சனத்தை பெற்றது.
சட்டசபை விவாதங்கள்
சட்டசபை விவாதங்கள் மிகவும் நாடகத்தன்மையுடனும், அதிரடி காட்சிகள் நிறைந்த திரைப்படங்களைப் போலவும் இருந்ததாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தனது பேச்சை நிறைவு செய்த முதல்வர் விஜய், ஸ்டாலின் காட்டிய சைகையை (Action) சட்டமன்றத்திற்குள் செய்து காட்டி அவையையே அதிர வைத்தார்.
மு.க. ஸ்டாலின்
2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக திமுக மற்றும் காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் கடுமையான இழுபறி நீடித்து வந்த நிலையில், இறுதியாக உடன்பாடு எட்டப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போது அறிவாலயத்திலிருந்து காரில் ஏறிப் புறப்பட்ட மு.க. ஸ்டாலின், செய்தியாளர்களை நோக்கித் தனது கையால் "எல்லாம் முடிந்துவிட்டது, ஆல் பினிஷ்" என குறிப்பிடும் வகையில் சைகை காட்டியிருந்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் நீண்ட நாட்கள் ட்ரெண்டாக இருந்தது.
ராஜு முருகன்
இந்நிலையில், இன்று சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளுக்குப் பதிலளித்து பேசிய முதல்வர் விஜய், அதே "ஆல் பினிஷ்" ஆக்ஷனை காட்டினார். இந்நிலையில் தான் அதனை வைத்து நகைச்சுவையான முறையில் விமர்சித்துள்ளார் இயக்குநர் ராஜு முருகன். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்," காலைல இருந்து சட்டப்பேரவை லைவ் பார்த்து 4, 5 பாலய்யா படம் பார்த்த மாதிரி ஹேங் ஓவர்ல இருந்தேன். இந்த அருமையாக நிகழ்ச்சிக்கு கூப்பிட்டு அந்த ஹேங் ஓவர்ல இருந்து வெளியே கூட்டிட்டு வந்ததுக்கு நன்றி" என பேசியுள்ளார்.














Click it and Unblock the Notifications