ஜிகே வாசனுக்கு நோ.. அன்புமணி, தம்பிதுரையை ராஜ்ய சபா அனுப்பும் அதிமுக.. எடப்பாடி பழனிசாமி முடிவு?
சென்னை: என்டிஏ கூட்டணியில் அன்புமணி மற்றும் தம்பிதுரை ஆகியோருக்கு ராஜ்ய சபா சீட் வழங்க அதிமுக முடிவு எடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தமாகா தலைவர் ஜிகே வாசனுக்கு சீட் வழங்குமாறு பாஜக கோரிக்கை வைத்திருந்த சூழலில், அதனை எடப்பாடி பழனிசாமி நிராகரித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட 10 மாநிலங்களைச் சேர்ந்த 37 ராஜ்ய சபா இடங்களுக்கு தேர்தல் நடக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் பிப்ரவரி 26ஆம் தேதி தொடங்கியது. ராஜ்ய சபா தேர்தல் மார்ச் 16ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுத்தாக்கலுக்கு மார்ச் 5ஆம் தேதியே கடைசி நாளாகும்.

இதன்படி தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் நடக்க உள்ளது. திருச்சி சிவா, கனிமொழி சோமு, என்ஆர் இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், ஜிகே வாசன், தம்பிதுரை ஆகியோரின் பதவிக் காலம் நிறைவடைகிறது. இதில் திமுக தரப்பில் திருச்சி சிவா மற்றும் என்ஆர் இளங்கோ மீண்டும் ராஜ்ய சபா எம்பிக்களாக வாய்ப்பை பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.
அதேபோல் ஒரு ராஜ்ய சபா சீட்டை காங்கிரஸ் கட்சிக்கும், மற்றொரு ராஜ்ய சபா சீட்டை தேமுதிகவுக்கும் ஒதுக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல் அதிமுகவை பொறுத்தவரை 2 ராஜ்ய சபா சீட்டில் யார் யாருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்ற கேள்வி எழுந்தது. ஏனென்றால் தமாகா தலைவர் ஜிகே வாசன், பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் ராஜ்ய சபா சீட்டை பெற தீவிரமாக இருக்கின்றனர்.
மறுபுறம் டெல்லியில் அதிமுகவுக்கு அடையாளம் காக்க வேண்டிய நிலையும் இருக்கிறது. இதனால் ஒரு சீட்டை அதிமுகவுக்கும், ஒரு சீட்டை கூட்டணிக்கு கொடுக்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல் பாஜக தரப்பில் தமாகா தலைவர் ஜிகே வாசனுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால் பாஜகவின் கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி நிராகரித்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் அதிமுக தரப்பில் தம்பிதுரையையும், பாமக தலைவர் அன்புமணியையும் ராஜ்ய சபாவுக்கு அனுப்ப அதிமுக முடிவு செய்துள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். இதற்கான அறிவிப்பு நாளை வெளியாகும் என்று கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications