எம்.பி. ஆகிறார்கள் வைகோ, அன்புமணி... அதிமுக, திமுகவில் அடுத்தடுத்த திருப்பம்
Recommended Video
சென்னை: அடுத்த மாதம் நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தலில் வைகோ மற்றும் அன்புமணி எம்.பி.யாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்கிடையே, காங்கிரஸ்க்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ஒதுக்குமாறு திமுகவிடம் கேட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், அதிமுக - பாஜக கூட்டணியில் இருந்த பாமக, போட்டியிட்ட 7 தொகுதிகளில் தோல்வியை தழுவியது. அதே நேரம், திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு தொகுதியில் வெற்றி வாகை சூடியது. 2014 தேர்தலின் போது, தனித்து வெற்றி கண்ட பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணிக்கு, இந்த தேர்தல் சறுக்கலை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், மக்களவைத் தேர்தலின் போது பா.ம.க.வுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டது. இதன்படி அன்புமணி ராமதாஸ் எம்.பி.யாகிறார். அவர் ஏற்கனவே 2004 முதல் 2010 வரை எம்.பி.யாக இருந்தார்.
அதே போல், தேர்தல் கூட்டணி ஒப்பந்தப்படி ம.தி.மு.க.வுக்கு ஒரு மாநிலங்களவை தொகுதியை தி.மு.க. ஒதுக்கி இருக்கிறது. அதன்படி அந்த கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்படுகிறார். தி.மு.க.வில் 3 உறுப்பினர்கள் தேர்வுக்கு பிறகு 8 எம்.எல்.ஏ.க்கள் உபரியாக இருப்பார்கள்.
அன்புமணி ராமதாஸ் தவிர, அ.தி.மு.க.வில் இருந்து மற்ற 2 உறுப்பினராக யார்? தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. தி.மு.க.வில் உள்ள எஞ்சிய 2 இடத்தில் ஒரு தொகுதியை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்காக காங்கிரஸ் கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே, கன்னியாகுமரி தொகுதியில் நின்று தோல்வியடைந்த முன்னாள் இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு பாஜக மேலிடம் டெல்லி வர அழைப்பு விடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications
