"என் வழி தனி வழி”.. தேதி குறித்த ஸ்ரீகாந்தி.. புதிய அரசியல் இயக்கம் தொடங்கும் ராமதாஸ் மகள்!
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸின் மகள் ஸ்ரீகாந்தி, புதிய அரசியல் இயக்கத்தை தொடங்க உள்ளதாக தகவல்கள் பரபரக்கின்றன. வரும் டிசம்பர் 6 ஆம் தேதி புதிய இயக்கத்தை ஸ்ரீகாந்தி தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே ஏற்பட்ட உட்கட்சி மோதலின் போது, ராமதாஸ், அன்புமணியை பாமக தலைவர் பதவியில் இருந்து நீக்கினார். அன்புமணியின் ஆதரவாளர்களை கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கினார்.

தனது மகள் ஸ்ரீகாந்தியை, கட்சியின் செயல் தலைவராக நியமித்தார் ராமதாஸ். தனது ஆதரவாளர்களை பொறுப்பாளர்களாக அறிவித்தார். பின்னர் அன்புமணி தரப்பு சட்டப் போராட்டங்களின் மூலம் கட்சியின் அதிகாரத்தைக் கைப்பற்றியது.
எனினும், விட்டுக்கொடுக்காமல் அன்புமணிக்கு எதிராக சண்டை செய்து வந்த ராமதாஸ், கடந்த சட்டசபை தேர்தலில் சசிகலா உடன் கூட்டணி அமைத்து தனது தரப்பில் வேட்பாளர்களை நிறுத்தினார். அவர்கள் குறைந்த வாக்குகளையே பெற்றனர்.
தேர்தலுக்குப் பிறகு, அன்புமணி, ராமதாஸை சென்று சந்தித்ததைத் தொடர்ந்து, தந்தை மகன் இடையேயான பூசல் முடிவுக்கு வந்தது. ராமதாஸ் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதுமட்டுமல்லாமல், தன்னைப் பார்க்க வருகிறவர்கள் அரசியல் பற்றி பேச வேண்டாம் என்று அறிவித்தார்.
இது பாமக கட்சியினரிடையே வரவேற்பை பெற்றாலும், இக்கட்டான நேரங்களில் ராமதாஸுக்கு ஆதரவாக இருந்த நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியையும் ஏற்படுத்தியது. ராமதாஸ் அணியில் இருந்த பலர் அன்புமணியின் தலைமையை ஏற்க தயாராக இல்லை என்று கூறினர்.
இந்நிலையில், ராமதாஸ் விட்டுச்சென்ற சமூகநீதிப் பாதையைத் தொடர்வதாகக் கூறி, ஸ்ரீகாந்தி தனது ஆதரவாளர்களுடன் புதிய அரசியல் பயணத்திற்கான ஆலோசனைகளை நடத்தி வருகிறார். இதன் மூலம், ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்தி தனி அரசியல் பாதையைத் தொடர முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.
சில மாதங்களுக்கு முன்பு, புதுச்சேரி முதலமைச்சரும், என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமியை தனது மகன் முகுந்தனுடன் சேர்ந்து சந்தித்தார் ஸ்ரீகாந்தி. இதனால், அவர்கள் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணையப்போவதாக கூறப்பட்டது.
ஆனால், தற்போது, ஸ்ரீகாந்தி, புதிய அரசியல் இயக்கத்தை தொடங்க உள்ளதாக தகவல்கள் பரபரக்கின்றன. வரும் டிசம்பர் 6 ஆம் தேதி புதிய இயக்கத்தை ஸ்ரீகாந்தி சென்னையில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஸ்ரீகாந்தியின் புதிய இயக்கம், அன்புமணி தரப்புக்கு நெருக்கடி கொடுக்கும் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
"சமத்துவம், சமூகநீதி, சுயமரியாதை ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்டு, மக்களின் நலன், உரிமைகள் மற்றும் எதிர்காலத் தலைமுறையின் முன்னேற்றத்தை இலட்சியமாகக் கொண்டு ஒரு புதிய அரசியல் பயணம் தொடங்குகிறது." என ஸ்ரீகாந்தியின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
