"எப்புட்றா.." வெறும் 15 ரூபாய்க்கு பெட்ரோல்.. அதுவும் வெறும் 40 நாட்களில்.. நிச்சயம் முடியுமாம்.!
சென்னை: மூலிகை பெட்ரோலை இன்னும் 40 நாட்களில் ஒரு லிட்டருக்கு தன்னால் 15 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடியும் என்று ராமர் பிள்ளை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை கடந்த சில மாதங்களாகவே எந்தவொரு ஏற்றம் இறக்கம் இல்லாமலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ, 102.66க்கு விற்கப்படுகிறது.
அதேபோல டீசல் ஒரு லிட்டர் சென்னையில் 94.26 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நீண்ட காலமாக விலையில் மாற்றம் இல்லை என்ற போதிலும், இதுவே அதிகமாக உள்ளதாகவே பலரும் விமர்சித்து வருகின்றனர்.
ராமர் பிள்ளை: இதனால் இப்போதே புதிதாக வாகனம் வாங்குவோர் மெல்ல மின்சார வாகனங்கள் பக்கம் சென்றுவிட்டனர். இந்தச் சூழலில் வெறும் 15 ரூபாய்க்கு பெட்ரோல் கிடைத்தால் எப்படி இருக்கும்.. இதெல்லாம் நடக்கற காரியமா என நீங்கள் கேட்கலாம். ஆனால், தன்னால் இந்த விலைவாசியிலும் 15 ரூபாய்க்கு பெட்ரோலை வழங்க முடியும் என்கிறார் ராமர் பிள்ளை. மேலும், அது எப்படி என்றும் விளக்கியுள்ளார்.
1990களில் மூலிகை பெட்ரோல் மூலம் தன்னால் மிகக் குறைந்த விலைக்கு பெட்ரோலை தர முடியும் என்று சொல்லிப் பரபரப்பைக் கிளப்பியவர் ராமர் பிள்ளை. இந்த விவகாரத்தில் சிபிஐ கூட இவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து இருந்தது. அதன் பின்னர் சில காலம் அமைதியாக இருந்த இவர், இப்போது மீண்டும் வந்துள்ளார். தன்னால் வெறும் 15 ரூபாய்க்கு பெட்ரோலை தர முடியும் என இப்போது கூறியுள்ளார்,
சிபிஐ: இன்றைய தினம் ராமர் பிள்ளை, அவரது சட்ட ஆலோசகர் சொக்குசாமி ஆகியோர் ஒன்றாக இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது சொக்குசாமி பேசுகையில், "கடந்த 2000ஆம் ஆண்டு ராமர் பிள்ளை கண்டுபிடித்தது மூலிகை பெட்ரோல் இல்லை வேதிப் பொருட்களைக் கொண்டு போலியாகத் தயாரிக்கப்பட்டது என்று சொல்லி சிபிஐ மோசடி வழக்கைப் பதிவு செய்தனர்.
இது தொடர்பான வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்த நிலையில், ராமர் பிள்ளைக்கு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தது. இதை எதிர்த்து நாங்கள் மேல்முறையீடு செய்தோம். அந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கூடுதல் அமர்வு நீதிமன்றம் ராமர் பிள்ளையை விடுதலை செய்ய உத்தரவிட்டது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது" என்றார்.

இதையடுத்து பேசிய ராமர் பிள்ளை, "நான் 1999இல் இந்த மூலிகை பெட்ரோலை கண்டுபிடித்தேன். இதற்கு முறையான அனுமதி பெற்று, ஆலை தொடங்கினோம். ஒவ்வொரு ரூபாய்க்கும் தனியாக வரி செலுத்தியே மூலிகை பெட்ரோலை விற்று வந்தோம். ஆனால், திடீரென ஒரு நாள்.. அது மூலிகை பெட்ரோல் அல்ல, போலி பெட்ரோல் என்று என் மீது வழக்கு தொடர்ந்தனர். என் மீதான வழக்குகள் அனைத்தும் போலியானது என்பதை நான் நிரூபித்துவிட்டேன்.
வெறும் 15 ரூபாய்க்கு பெட்ரோல்: மீண்டும், இப்போது விருதுநகர் மாவட்டத்தில் பெரிய மூலிகை பெட்ரோல் மையத்தைத் தொடங்க உள்ளோம்.. இதன் மூலம் மூலிகை பெட்ரோலை என்னால் லிட்டருக்கு ரூ.15க்கு வழங்க முடியும்.. விலை மட்டும் குறைவு இல்லை.. புகை இல்லாமலும் இது இருக்கும்.. எனது கண்டுபிடிப்பை நான் தொழிலதிபர்களுக்கே நிரூபித்துள்ளேன். அவர்கள் தான் இப்போது ஆலையைத் தொடங்க முன்வந்துள்ளனர்.
அடுத்து வெறும் 40 நாட்களில் என்னால் இந்த ஆலையைத் தொடங்க உள்ளோம். இனிமேல் எனது கண்டுபிடிப்புக்கு எந்த பிரச்சினையும் வராது. 40 நாட்களில் ஆலையைத் தொடங்கி, வெறும் 15 ரூபாய்க்கு என்னால் மூலிகை பெட்ரோலை வழங்க முடியும்" என்றார்.












Click it and Unblock the Notifications