மண்ணாங்கட்டி சட்டம்! ராம்சார் நிலம் பெயரில் 1 கி.மீ பஃபர் ஜோன்.. பட்டா தந்துட்டு இப்போ இதுவா: ஹென்றி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றி 1 கி.மீ பஃபர் ஜோன் அறிவிப்பால் லட்சக்கணக்கான மக்களின் நில உரிமையும் சொத்து மதிப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. பட்டா, மின் இணைப்பு என அனைத்தும் அரசு வழங்கிய பின் திடீரென கட்டுப்பாடுகளை விதிப்பது எளிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்பதால், இந்த கட்டுப்பாடுகளை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக அரசுக்கு, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவருமான டாக்டர் ஹென்றி கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி தந்துள்ள ரியல் எஸ்டேட் துறை ஆலோசகர் டாக்டர் ஏ. ஹென்றி, "ஈரானில் ராம்சார் நகரில் நடைபெற்ற 1971 பிப்ரவரி 1 மாநாட்டின் போதுதான், உலக அளவில் ஈரநிலங்களைப் பாதுகாப்பதற்கான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நகரின் பெயரிலேயே சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்கள் "ராம்சார் தளங்கள்" என்று அழைக்கப்படுகின்றன.

Ramsar Site Buffer Zone

ராம்சார் தளங்கள் என்றால் என்ன

ஈரநிலங்களைப் பாதுகாப்பதற்காக உலக அளவில் 172 நாடுகள் இணைந்து யுனெஸ்கோ வழிகாட்டுதலின் கீழ் உருவாக்கப்பட்டதுதான் இந்த ராம்சார் உடன்படிக்கை . உலக அளவில் மொத்தம் 2,529 தளங்கள் ராம்சார் இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் உத்தரப் பிரதேசம் உட்பட மொத்தம் 100 இடங்கள் இதன்கீழ் அடையாளம் காணப்பட்டுள்ளன..

இந்தியாவிலேயே அதிக அளவாக தமிழகத்தில் தான் 20 ஈரநிலங்கள் அமைந்துள்ளன.. இந்தியாவில் பெருநகரங்களை ஒட்டி மகாராஷ்டிராவின் மும்பை மற்றும் மேற்கு வங்கத்தின் கொல்கத்தா ஆகிய இடங்களில் ராம்சார் தளங்கள் உள்ளன. இருந்தாலும், இந்தியாவில் பெருநகரத்தை ஒட்டி, பெருநகராட்சி எல்லைக்குள்ளேயே அமையப்பெற்றுள்ள ஒரே ராம்சார் தளம் (Ramsar site) இந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மட்டுமே.

2வது முதன்மை திட்டம்

1971ல் உருவான ராம்சார் உடன்படிக்கையில் இந்தியா உடனடியாக இணையவில்லை.. 1981 பிப்ரவரி 1 அன்றுதான் இந்த ஒப்பந்தத்தில் இணைந்து, 1982 பிப்ரவரி 1 முதல் ஈரநிலங்களைப் பாதுகாக்கும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. அப்போதைய மெட்ராஸ் மெட்ரோபாலிட்டன் டெவலப்மென்ட் அத்தாரிட்டி (MMDA - தற்போது CMDA) 1976 முதல் 1996 வரை இந்த நிலங்களை வகைப்படுத்தும் பணிகளை மேற்கொண்டது. பிறகு 2008-ம் ஆண்டில் "2வது முதன்மைத் திட்டம்" (Second Master Plan) கொண்டுவரப்பட்டது.

தொடக்கத்தில் 6,000 ஹெக்டேர் பரப்பளவாக இருந்த இந்த சதுப்பு நிலம், பெருங்காற்று, பெருமழை, வெள்ளம் மற்றும் சுனாமி போன்ற ஆழிப்பேரலை வந்தாலும் நீரை உறிஞ்சி மக்களைக் காக்கும் வல்லமை கொண்ட நன்னீர் நிலமாகும். இத்தகைய சிறப்புமிக்க நிலம் 75 ஏக்கரில் தொடங்கி, தற்போது 375 ஏக்கர் வரை குப்பைக் கழிவுகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஈர நிலம் பாதுகாப்பு

2022ல் இது வனத்துறையின் கட்டுப்பாட்டுக்கு வந்தபோது, இதில் 550 ஹெக்டேர் நிலம் மட்டுமே அடையாளப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 1,248 ஹெக்டேரில் மீதமுள்ள 698 ஹெக்டேர் நிலம் அறிவியல் மற்றும் புவியியல் ரீதியாக இன்னும் சரியாக அடையாளப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படாமல் நில அளவை செய்யப்பட வேண்டிய நிலையில் உள்ளது.

தொடக்கத்தில் 6,000 ஹெக்டேராக இருந்த சதுப்பு நிலம், காலப்போக்கில் சுருங்கி வேளச்சேரி, பள்ளிக்கரணை, மேடவாக்கம், ஜல்லடியன்பேட்டை, பெரும்பாக்கம், செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம், ஈஞ்சம்பாக்கம் மற்றும் பெருங்குடி வரை பரவி உள்ளது. கிண்டி மற்றும் மத்திய கைலாஷ் பகுதியிலிருந்து பார்க்கும்போது, இப்பகுதியில் மத்திய, மாநில அரசுகளின் நிறுவனங்களும், சாப்ட்வேர் நிறுவனங்களும் அமைக்கப்பட்ட பிறகு, நீர் வழித்தடங்கள் மறைக்கப்பட்டுப் பெருமளவில் கட்டிடங்கள் கட்டப்பட்டதால் பெரிய பிரச்சனைகள் எழுந்துள்ளன.

விழித்துக்கொண்ட சிஎம்டிஏ

2022ல் இது ராம்சார் நிலமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2025 செப்டம்பரில் சிஎம்டிஏ விழித்துக் கொண்டு, அக்டோபரில் 1 கிலோமீட்டர் சுற்றளவை ராம்சார் செல்வாக்கு மண்டலமாக (Influencer Area / Buffer Zone) அடையாளம் கண்டுள்ளது. 1976-ல் முதல் மாஸ்டர் பிளான் அல்லது 2008-இல் இரண்டாவது மாஸ்டர் பிளான் போதே இதைத் தடுத்து நிறுத்தியிருந்தால் குடியிருப்புகள் வந்திருக்காது.

ஆனால், இப்போது திடீரென 1 கி.மீ பஃபர் ஜோன் என அறிவித்ததால், அங்கு வாழும் பூர்வீகக் குடிகள் மற்றும் பொதுமக்கள் தங்களின் நில மதிப்பை இழந்து, அவசரத் தேவைகளுக்குக் கூட நிலத்தை விற்க முடியாமல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

பட்டா, மின் இணைப்பு, வீட்டு வரி ரசீது

பஃபர் ஜோன் என அறிவிக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அரசு தான் பட்டா வழங்கியுள்ளது. மேலும், அங்கே வீடுகள் கட்டுவதற்கான அனுமதி, மின் இணைப்பு, வீட்டு வரி ரசீது, குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் ஆகியவை வழங்கப்பட்டு, வங்கிகள் மூலமாக கடன்களும் வழங்கப்பட்டுள்ளன. தற்போது திடீரென இந்த நிலங்களை "இன்ஃப்ளுயன்ஸர் ஏரியா" மற்றும் "பஃபரிங் ஜோன்'" என நிர்ணயம் செய்துள்ளதால், அங்குள்ள பொதுமக்கள் தங்களது நிலத்தின் மதிப்பை இழந்து, அவசரத் தேவைகளுக்கு நிலத்தை விற்கவோ வாங்கவோ முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

சென்னையை நோக்கி புலம்பெயர்ந்து வரும் மக்களின் இல்லக் கனவுகளை நிறைவேற்றுவதற்காக அப்பகுதியில் சுமார் 20% அளவிற்கே ரியல் எஸ்டேட் வளர்ச்சி நடந்து வருகிறது. மீதமுள்ள 80% பகுதியில் பூர்வீகக் குடிகளும், பாட்டாளி வர்க்க மக்களுமே வசிக்கிறார்கள் என்பதால் அரசு இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

லண்டன், சிட்னி, துபாய் மற்றும் இந்தியாவின் மும்பை, மேற்கு வங்கம் போன்ற பல பெருநகரங்களில் "ஜீரோ பஃபரிங் ஏரியா" நடைமுறையில் உள்ளது. அதுபோல அரசு தனது ராம்சார் நிலத்தை அடையாளப்படுத்தி, சுற்றுச்சுவர் அமைத்துப் பாதுகாத்துக் கொள்ளட்டும்.

நில உரிமை என்பது மக்களின் அடிப்படை உரிமை

எளிய மக்கள் சிறுகச் சிறுகச் சேமித்து வாங்கிய இடங்களின் மதிப்பை கேள்விக்குறியாக்குவதும், இல்லக் கனவுகளைக் கலைய வைப்பதும் வேதனையளிக்கிறது. 1 கிலோமீட்டர் பஃபர் ஜோன் கெடுபிடியால் அவசரத் தேவைகளுக்குக்கூட நிலத்தை விற்கவோ, வங்கிகளில் கடன் பெறவோ முடியாமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நில உரிமை என்பது மக்களின் அடிப்படை உரிமை என்பதால், அதை பாதுகாக்க அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளோம்.. தேசிய பசுமை தீர்ப்பாயம் (NGT) மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் கருத்துக்களைக் கேட்டு, ராம்சார் நிலங்களைச் சுற்றி வேலி அல்லது சுவர் அமைத்துப் பாதுகாத்துக் கொள்வதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

மண்ணாங்கட்டி சட்டம்

ராம்சார் நிலத்தைச் சுற்றி 1 கிலோமீட்டர் சுற்றளவை பஃபர் ஜோனாக அறிவித்தால், லட்சக்கணக்கான பட்டாதாரர்களும் சுமார் 5 முதல் 10 லட்சம் பொதுமக்களும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.

மக்களுக்காகத்தான் அரசே தவிர, அரசுக்காக மக்கள் இல்லை என்பதை உணர்ந்து தந்தை பெரியார் ஒருமுறை, "என்னய்யா சட்டம், மக்களுக்கு உதவாத மண்ணாங்கட்டி சட்டம்" என்று கூறியிருந்தார். அதுபோல மண்ணாங்கட்டி சட்டங்களை எல்லாம் அரசு நடைமுறைப்படுத்துவதைத் தடுத்து நிறுத்தி, மக்கள் நலனில் அக்கறை செலுத்தி, நம்பி வாக்களித்த மக்களுக்கு நன்மைகளைச் செய்ய வேண்டும்" என்று தமிழக அரசுக்கு டாக்டர் ஹென்றி கோரிக்கை விடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+