ஜனநாயகன்! தியேட்டர்களில் அமைச்சர்கள் விடும் கண்ணீருக்கு குற்றால அருவியே தோற்கும் போலயே! உதயகுமார்
சென்னை: ஜனநாயகன் ஓடும் தியேட்டர்களில் குற்றால அருவி தண்ணீர் கொட்டியது, தமிழகத்தில் அறிவிக்கப்படாத அரசு விடுமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது என தவெக அமைச்சர்களை, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: முதல்வர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் நேற்று வெளியானது. இதனால் தமிழகத்தில் நாம் நினைத்தது போல் அறிவிக்கப்படாத அரசு விடுமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகமே திருவிழா கோலமாக இருக்க வேண்டும் என அமைச்சர் ஆனந்த் உத்தரவிட்டிருந்தார். ஆனால் விஜய் ரசிகர்களோ தமிழகத்தை அலங்கோலப்படுத்திவிட்டார்கள். வார நாட்களில் தவறாமல் கோட்டைக்கு வரும் முதலமைச்சர் விஜய், நேற்று வரவில்லை.
மன்னர் எவ்வழியோ மக்களும் அவ்வழியே என்று, அமைச்சர்களும் ஆளும் கட்சி எம்எல்ஏக்களும் மக்கள் பணியை தள்ளிவைத்துவிட்டு ஜனநாயகன் பட ரிலீஸுக்கு ரீல்ஸ் போட தியேட்டர்களுக்கு சென்றுவிட்டனர். இதுதான் தவெக அரசின் தலையாய பணியாக நேற்று தமிழகம் கண்டு களித்தது.
ஜனநாயக படம் ரிலீஸுக்கு ரீல்ஸ் போட தியேட்டருக்கு போய்விட்டார்கள், நமது ஜனநாயக காவலர்கள். அதுமட்டுமா, அங்கு தியேட்டரில் குற்றால அருவியிலே தண்ணீர் கொட்டியது. என்னவென்று திரும்பி பார்த்தால் தமிழக அமைச்சர்களின் கண்களில் கண்ணீர் கொட்டிய அந்த காட்சி நடந்தது. நம் நெஞ்சை துடிதுடிக்க வைத்துவிட்டது. பதற வைத்துவிட்டது.
காவிரியில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியவில்லையே! அதனால் வந்த கண்ணீரோ! கர்நாடகா தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கிறதே அதனால் வந்த கண்ணீரோ! நீட் தேர்வை ரத்து செய்ய முடியாமல் போராடிக் கொண்டிருக்கிறார்களே மாணவர்கள், அதனால் வந்த தண்ணீரோ! மேகதாது அணை கட்ட முயலும் கர்நாடகாவை தடுப்பது எப்படி என்பதால் ஏற்பட்ட கண்ணீரோ!
அரசு மருத்துவமனையில் ஒரு நோயாளியின் விரலை எலி கடித்துக் கொண்டு போனதே அதனால் வந்த கண்ணீரா! தமிழகத்தில் லாக்கப் மரணங்கள் உலுக்கியதே, இதை தடுக்க முடியவில்லையே என்பதால் வந்த கண்ணீரோ! பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியவில்லையே என்ற ஏக்கத்தினால் ஏற்படும் கண்ணீரா? போதை பொருள் நடமாட்டத்தை தடுக்க முடியவில்லையே என்ற கடமை உணர்வினால் வந்த கண்ணீரா!
இத்தனை பிரச்சினைகளை பார்த்த நம் தமிழக அமைச்சர்களுக்கு ஜனநாயகன் படம் பார்த்த போது வந்த கண்ணீர், குற்றால அருவியே போட்டி போட முடியாது என ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.
விஜய் நடித்த கடைசி படமான ஜனநாயகன் திரைப்படம் நேற்று வெளியானது. இந்த படத்தை நேற்றைய தினம் அமைச்சர்கள் எல்லாம் பார்த்து ரசித்தனர். பின்னர் கடைசி நேரத்தில் டைட்டில் கார்டில் பிரியமுடன் விஜய் என குறிப்பிட்டு அவர் ஏற்கெனவே நடித்த படங்களின் காட்சிகளை தொகுத்து போட்டியிருந்ததால் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், ரசிகர்கள் கண்ணீர் விட்டனர்.
இதை பலரும் டிரோல் செய்து வருகிறார்கள். கரூரில் 41 பேர் மரணமடைந்த போது இவர்களின் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வராத போது இனி விஜய்யின் படத்தை பார்க்க முடியாது என்பதால் கண்ணீர் வருகிறதே! இவர்களுக்கா ஓட்டு போட்டு தேர்வு செய்தீர்கள் என்ற கேள்வியை பலரும் எழுப்புகிறார்கள்.


Click it and Unblock the Notifications
