ரியல் எஸ்டேட்.. கட்டுமான புகார்கள் குறித்து புதிய உத்தரவு.. ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் அதிரடி
சென்னை: ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் புதிய உத்தரவு ஒன்றினை தற்போது பிறப்பித்துள்ளது.. அதன்படி, கட்டுமான திட்ட புகார்களுக்கு, புதிய கட்டுப்பாடுகளையும், ஆணையம் விதித்திருக்கிறது. என்ன அது?
வீட்டுமனை திட்டங்களில் ஏற்படும் சர்ச்சைகளை தீர்ப்பதற்காகவும், விதிகளை உருவாக்குவதற்காகவும், கட்டிட மனை விற்பனை (முறைப்படுத்தல் மற்றும் மேம்படுத்தல்) சட்டம்-2016 என்ற நடைமுறையை மத்திய அரசு உருவாக்கியிருந்தது.

அரசாணை: அதன் அடிப்படையில், தமிழக அரசு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசாணை எண்.112, நாள் 22.6.2017 மூலம் தமிழ்நாடு கட்டிட, மனை விற்பனை (முறைப்படுத்தல் மற்றும் மேம்படுத்தல்) விதிகள் 2017-க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, அமைக்கப்பட்ட "தமிழ்நாடு கட்டிட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம்" (Tamil Nadu Real Estate Regulatory Authority TNRERA) செயல்பட்டு வருகிறது.
2016ல், இந்த ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் நிறைவேற்றப்பட்டதையடுத்து, ரியல் எஸ்டேட் திட்டங்களை பதியவும், புகார்களை விசாரிக்கவும், மாநில ஆணையங்கள், மேல் முறையீட்டுக்கான தீர்ப்பாயம் போன்றவை ஏற்படுத்தப்பட்டன. அதன்படி, 5,381 சதுர அடி அல்லது 8 வீடு மனைகள் இருந்தால், அந்த திட்டத்தை ரியல் எஸ்டேட் சட்டப்படி பதிவு செய்வது கட்டாயமாகும்..
ஒழுங்குமுறை குழுமம்: வீடு அல்லது மனை வாங்குவோர், கட்டுநரின் பெயர், முகவரி, வங்கி தகவல்கள், நிறுவனத்தின் பெயர், இப்போதைய நிலை, எப்போது முடிவடையும்? போன்ற தகவல்களை எல்லாம் www.tnr-e-ra.in என்ற வெப்சைட்டின் மூலம் உறுதி செய்து கொள்ளலாம். எனவே, "ரெரா" சட்டத்தில் பதிவு செய்யப்படாத சொத்துக்களை வாங்கும் நிலையில், ஏதாவது சிக்கல்கள் வந்தால், ஒழுங்குமுறை குழுமத்தில் புகார் அளிக்க முடியாது..
வரையறைக்கு உட்பட்ட திட்டங்கள் பதிவு செய்யப்படாவிட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது புகார் அளிக்கலாம்.. ஆனால், சமீபத்தில் பரப்பளவு சம்பந்தமாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், ரியல் எஸ்டேட் ஆணையத்துக்கு சில வழிகாட்டுதல்களை சென்னை ஹைகோர்ட் பிறப்பித்திருந்தது.. அதன் அடிப்படையில், கட்டுமான திட்ட புகார்களுக்கு, புதிய கட்டுப்பாடுகளை தற்போது ஆணையம் பிறப்பித்துள்ளது.
புது அதிரடி: இதில், "குடியிருப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும் நிலத்தின் பரப்பளவு, 5,381 சதுர அடி, அதற்கு மேல் இருக்க வேண்டும் அல்லது அந்த திட்டத்தில், 8 வீடு, மனைகள் அதற்கு மேலும் இருக்கும் திட்டங்களின் பதிவு தொடர்பான புகார்கள் மட்டுமே விசாரணைக்கு ஏற்கப்படும். இந்த வரையறை, ஒரு திட்டத்தின் அனைத்து கட்டிடங்களுக்கும் சேர்த்துதான் கணக்கிடப்படும்" என்று ரியல் எஸ்டேட் ஆணையம் அறிவித்துள்ளது.
இதன்காரணமாக, கட்டுமான பரப்பளவு அடிப்படையில் குறிப்பிட்ட திட்டங்களை பதிவு செய்ய கட்டாயப்படுத்த முடியாது என்பதுடன், பதிவு செய்யவில்லை என்பதற்காக, அபராதமும் விதிக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாம்.


Click it and Unblock the Notifications
