75 வருட பர்னிச்சர்களை உடைத்த விஜய்? வரலாறு காணாத வாக்குப் பதிவு! ’இவை’ தான் உண்மை காரணமா? ஒரு அலசல்!
சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026 முடிவடைந்தாலும், அதனைச் சுற்றியுள்ள அரசியல் பரபரப்பு இன்னும் குறையவில்லை. குறிப்பாக இந்த முறை பதிவான அதிக வாக்குப்பதிவு சதவீதம் தான் தற்போது அரசியல் வட்டாரங்களில் அதிகமாக பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது. தேர்தல் நாளில் பதிவான வாக்கு சதவீதம் 85 சதவீதத்தைத் தாண்டியிருப்பது, கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவாக பார்க்கப்படுகிறது.
இதனால், இந்த அதிக வாக்குப்பதிவு என்ன சொல்லுகிறது? அதன் பின்னணியில் என்ன காரணங்கள் இருக்கின்றன? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. குறிப்பாக இந்த அதிக வாக்குப்பதிவுக்கு மூன்று முக்கிய காரணங்கள் பேசப்படுகின்றன.

அதில் முதன்மையானது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் எனப்படும் SIR நடவடிக்கை. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் இந்த விரிவான திருத்தப் பணிகள் நடைபெற்றன.
85% வாக்குப்பதிவு
இதில் இறந்தவர்கள், ஒரே நபர் பல இடங்களில் பெயர் வைத்திருந்தவர்கள், முகவரியில் இல்லாதவர்கள் உள்ளிட்ட பலர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். மொத்தமாக சுமார் 97 லட்சத்துக்கும் மேற்பட்ட பெயர்கள் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் சிலர் மீண்டும் விண்ணப்பித்து சேர்க்கப்பட்டாலும், கணிசமான அளவு பெயர்கள் பட்டியலில் இருந்து நீங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கை காரணமாக வாக்காளர் பட்டியல் சுத்தமாகி, உண்மையான வாக்காளர்கள் மட்டுமே பட்டியலில் இருந்ததால், வாக்குப்பதிவு சதவீதம் இயல்பாகவே உயர்ந்திருக்கலாம் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதேபோன்ற நிலைமை மற்ற மாநிலங்களிலும் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
இளைஞர்களின் அதிக ஆர்வம்
இரண்டாவது முக்கிய காரணமாக இளைஞர்களின் அதிக ஆர்வம் பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் சுமார் 5 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்களில், ஒரு பெரிய பகுதி இளம் வாக்காளர்களாக இருந்தனர். குறிப்பாக முதன்முறையாக வாக்களிக்கும் இளைஞர்கள் எண்ணிக்கையும் கணிசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த முறை புதிய அரசியல் மாற்றங்கள் மற்றும் புதிய கட்சிகள் களமிறங்கியதும், இளைஞர்களை அதிகமாக வாக்குச்சாவடிக்கு வரச் செய்ததாக அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.
தமிழக வெற்றி கழகம்
இந்த சூழலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் அரசியல் களத்தில் முதன்முறையாக களம் கண்டதும் இளைஞர்களிடையே புதிய ஆர்வத்தை உருவாக்கியதாக கூறப்படுகிறது. அரசியல் அனுபவம் இல்லாதவர்களும் கூட "வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும்" என்ற எண்ணத்தில் வாக்களிக்க வந்ததாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். சினிமா மூலம் பிரபலமான ஒருவர் அரசியலுக்கு வந்திருப்பது, குறிப்பாக இளம் தலைமுறையை ஈர்த்ததாக மதிப்பிடப்படுகிறது.
திமுக பிரச்சாரம்
அதே நேரத்தில், இளைஞர்களை ஈர்க்கும் முயற்சியில் உதயநிதி ஸ்டாலின் போன்ற இளம் முகங்களை முன்வைத்து திமுக பிரச்சாரம் செய்ததும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது. இதற்கு மாறாக, புதிய தலைமுறை முகங்கள் குறைவாக இருந்தது அதிமுக மீது சில இளைஞர்களின் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கலாம் என்ற கருத்துகளும் வெளியாகியுள்ளன.
பெண்கள் வாக்காளர்
மூன்றாவது மற்றும் மிகவும் முக்கியமான காரணமாக பெண்கள் வாக்காளர்களின் அதிக பங்கேற்பு குறிப்பிடப்படுகிறது. இந்த தேர்தலில் பெண் வாக்காளர்களின் வாக்குப்பதிவு சதவீதம், ஆண் வாக்காளர்களை விட அதிகமாக இருந்ததாக அதிகாரப்பூர்வ தரவுகள் காட்டுகின்றன. பெண்களை குறிவைத்து பல்வேறு கட்சிகள் வெளியிட்ட வாக்குறுதிகள் இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
மகளிர் உரிமைத் தொகை
பெண்களுக்கு மாதாந்திர நிதியுதவி, வீட்டு உபயோகப் பொருட்கள் வழங்குதல் போன்ற பல அறிவிப்புகள் தேர்தல் அறிக்கைகளில் இடம்பெற்றன. திமுக மகளிர் உரிமைத் தொகை மற்றும் கூடுதல் உதவிகள் குறித்து வாக்குறுதி அளித்தது. மறுபுறம் அதிமுக பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2000 வழங்கும் திட்டங்களை அறிவித்தது. அதேபோல் தமிழக வெற்றி கழகம் பெண்களுக்கு அதிக தொகை வழங்கும் திட்டங்களை முன்வைத்தது. இத்தகைய அறிவிப்புகள் பெண்கள் மத்தியில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
எந்த கட்சிக்கு சாதகம்?
மொத்தத்தில் பார்க்கும்போது, இந்த முறை பதிவான அதிக வாக்குப்பதிவு என்பது ஒரே ஒரு காரணத்தால் உருவானது அல்ல. வாக்காளர் பட்டியல் சீரமைப்பு, இளைஞர்களின் புதிய அரசியல் ஆர்வம், பெண்களை குறிவைத்து அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ஆகிய மூன்றும் சேர்ந்து இந்த உயர்ந்த வாக்குப்பதிவை உருவாக்கியிருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.இப்போது அனைவரும் எதிர்பார்ப்பது ஒன்று தான். இந்த அதிக வாக்குப்பதிவு எந்த கட்சிக்கு சாதகமாக மாறும்? என்பது தான். அதற்கான விடை 4ஆம் தேதி தெரிந்து விடும்.














Click it and Unblock the Notifications