இந்த 4 நாட்கள் இந்த ரூட்ல யாரும் போயிடாதீங்க.. சென்னையின் மேஜர் ஏரியாவில் போக்குவரத்து மாற்றம்!
சென்னை: சென்னை காமராஜர் சாலையில் குடியரசு தின விழாவுக்கான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுவதால் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 21, 23 ஆகிய தேதிகளிலும், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரும் 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்றும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நாட்களில் காமராஜர் சாலையில், காந்தி சிலை முதல் போர் நினைவுச் சின்னம் வரை காலை 6 முதல் நிகழ்ச்சி முடியும் வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.
குடியரசு தின விழா கொண்டாட்டம் வரும் 26 ஆம் தேதி சென்னை காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகில் நடைபெற உள்ளது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை இன்று நடைபெற்றது. 21, 23 ஆகிய தேதிகளிலும் ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதால் மெரினா கடற்கரை பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அடையாறு பகுதியிலிருந்து காமராஜர் சாலையில் பிராட்வே நோக்கி செல்லும் சரக்கு மற்றும் வணிக வாகனங்கள் கிரின்வேஸ் சாலை சந்திப்பிலிருந்து ஆர்.கே.மடம் சாலை, திருவேங்கடம் சாலை, தேவநாதன் சாலை, செயின்ட் மேரிஸ் சாலை, ராமகிருஷ்ணா மடம் சாலை, வெங்கடேச அக்ரகாரம் தெரு.ரங்கா சாலை, கிழக்கு அபிராமபுரம் முதல் தெரு, லஸ் அவென்யு அமிர்தான்சன் சந்திப்பு, பி.எஸ். சிவசாமி சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, மியூசிக் அகாதெமி, டி.டி.கே. சாலை, கௌடியா மட் சாலை, ராயபேட்டை மருத்துவமனை, ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஜெனரல் பேட்டர்ஸ் சாலை, அண்ணாசாலை வழியாக பிராட்வே சென்றடையலாம்.
அடையாறு பகுதியிலிருந்து காமராஜர் சாலையில் பிராட்வே நோக்கி செல்லும் பிற வாகனங்கள், (மாநகர பேருந்துகள் உள்பட) காந்தி சிலை சந்திப்பில் ராதாகிருஷ்ணன் சாலை நோக்கி திருப்பப்பட்டு, ராயபேட்டை 1 பாயிண்ட், நீல்கிரீஸ், மியூசிக் அகாதெமி, டி.டி.கே. சாலை, கொளடியா மட் சாலை, ராயபேட்டை மருத்துவமனை, ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஜெனரல் பேட்டர்ஸ் சாலை, அண்ணா சாலை வழியாக பிராட்வே சென்றடையலாம்.
மயிலாப்பூர் பகுதியிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் ராயப்பேட்டை நெடுஞ்சாலை வந்து ராயபேட்டை 1 பாயிண்ட்டில், இதர வாகனங்கள் இடதுபுறமாகவோ அல்லது வலதுபுறமாகவோ திரும்பி தங்களின் இலக்கை அடையலாம். மாநகர பேருந்துகள் இடதுபுறமாக திரும்பி டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, நீல்கிரீஸ், மியூசிக் அகாதெமி, டி.டி.கே.சாலை.கொளடியா மடம் சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராயப்பேட்டை மணிக்கூண்டு வழியாக பிராட்வே சென்றடையலாம்.
டாக்டர் நடேசன் சாலை மற்றும் அவ்வை சண்முகம் சாலை சந்திப்பு வழியாக காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் ஐஸ் ஹவுஸ் சந்திப்பு நோக்கி திருப்பிவிடப்படும். டாக்டர்.பெசன்ட் சாலையிலிருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் பெசன்ட் சாலை ரவுண்டானாவில் ஐஸ் அவுஸ் நோக்கி திருப்பிவிடப்படும். காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் பாரதிசாலை மற்றும் பெல்ஸ் சாலை சந்திப்பில் பெல்ஸ் சாலை நோக்கி திருப்பிவிடப்படும். வாலாஜா சாலை மற்றும் பெல்ஸ் சாலை சந்திப்பில் உழைப்பாளர் சிலை நோக்கி வரும் வாகனங்கள் பெல்ஸ் சாலை வழியாக திருப்பிவிடப்படும்.
அண்ணா சதுக்கம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் தற்காலிகமாக சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையம் அருகில் மாற்றப்படும். பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை மற்றும் காமராஜர் சாலை வழியாக அடையாறு நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் ரிசர்வ் வங்கி சுரங்கப் பாதையில் செல்லாமல் வடக்கு துறைமுக சாலை வழியாக ராஜா அண்ணாமலை மன்றம், வாலாஜா பாயிண்ட், அண்ணாசாலை, ஜி.பி.சாலை, ராயபேட்டை மணி கூண்டு, வெஸ்ட் காட் சாலை, ஜி.ஆர்.எச். சாலை, அஜந்தா சந்திப்பு இடதுபுறம் திரும்பி லாயிட்ஸ் சாலை (வி.பி.ராமன் சாலை), ஜஸ்டிஸ் ஜம்புலிங்கம் தெரு இடதுபுறம் அல்லது வலதுபுறம் திரும்பி டாக்டர்.ராதாகிருஷ்ணன் சாலை வழியாக தங்கள் இலக்கை சென்றடையலாம்.
அண்ணாசாலை மற்றும் கொடிமர இல்ல சாலை (வாலாஜா பாய்ண்ட்) சந்திப்பிலிருந்து போர் நினைவுச் சின்னம் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு வாகன ஒட்டிகள் ஒத்துழைப்பு தரவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications