Robo Shankar: முகம் கருப்பா இருக்கே.. ஒன்னும் இல்லைன்னு சொன்னார்.. இப்படி ஆகும்னு எதிர்பார்க்கல.. நடிகர் சிங்கம்புலி
சென்னை: "முகம் ரொம்ப கருப்பா இருக்கே" என ரோபோ சங்கரிடம் கேட்டேன். அவர், "அது ஒன்னும் இல்லை... மருந்து சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன், சரியாகிடும்" என்று சொன்னார். ஆனால் இப்படி ஆகும் என்று நான் நினைக்கவே இல்லை என்று நகைச்சுவை நடிகர் சிங்கம்புலி கூறினார். மேலும் விஜய்யின் புலி, தி லயன் கிங் உள்ளிட்ட படங்களில் அவருடன் இணைந்து பணியாற்றியது குறித்தும் அவர் பேசியுள்ளார்.
நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் இன்று இரவு காலமானார். 46 வயதான ரோபோ சங்கருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைபாடு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலையில் அவரது உடல் நிலை மோசமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

நடிகர் சிங்கம்புலி உருக்கம்
கல்லீரல் மற்றும் சிறுநீரகக் குறைபாடு காரணமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், இரவு 8.30 மணியளவில் அவர் உயிரிழந்ததாக டாக்டர்கள் அறிவித்துள்ளனர். ரோபோ சங்கரின் மறைவு அவரது குடும்பத்தினர், நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் நீங்கா துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திடீரென உடல்நலக் குறைபாடு ஏற்பட்டு ரோபோ சங்கர் உயிரிழந்ததை பலரும் ஏற்க முடியவில்லை. ரோபோ சங்கருடன் தி லயன் கிங், புலி படங்களில் இணைந்து பணியாற்றியுள்ள நகைச்சுவை நடிகர் சிங்கம்புலி, அவரது மறைவு ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று கூறியுள்ளார். இது தொடர்பாக ஃபிலிமிபீட் (Filmibeat)-க்கு சிங்கம்புலி கூறியதாவது:
"ரொம்ப கஷ்டமாக இருக்கு..."
"ரொம்ப ஷாக்கிங்கா இருக்கு. நான் கோவையில் ஷூட்டிங்கில் இருக்கிறேன். எனக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி போன் பண்ணினார். நான் ஷூட்டிங்கில் இருந்ததால் பிறகு பேசுகிறேன் என்று சொன்னேன். அதுக்குப்பிறகு இப்போ திடீரென்று இப்படி சொல்லுறாங்க. என்ன உடல்நிலை பிராப்ளம்? ஏன் இப்படி ஆச்சுன்னே எனக்கு தெரியல.
எதுவுமே புரியல. அவர் அவ்வளவு தூரம் ஒர்க்அவுட் பண்ணுவார். உடம்பு நல்லா பாத்துக்கொள்வார். நாமளே அவர் உடல்நிலையை பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு மேன்டெயின் பண்ணுவார். தி லயன் கிங் என்ற படத்தில் நானும் ரோபோ சங்கரும் தான் வாய்ஸ் கொடுப்போம். ரொம்ப சூப்பரா பண்ணியிருப்பார். இதையெல்லாம் நினைக்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு."
"இடையிடையே மருந்து சாப்பிட்டார்..."
"குழந்தை, மனைவி எல்லாரும் எப்போதும் மகிழ்ச்சியா இருப்பாங்க. ரியாலிட்டி ஷோவில் சூப்பரா பண்ணுவாரு. நல்ல டான்சர், நல்ல பெர்ஃபார்மர், நல்ல மிமிக்ரி ஆர்டிஸ்ட். என்னால இத ஏற்றுக்கொள்ளவே முடியல.
ஒரு ரியாலிட்டி ஷோவில் நானும் ரோபோ சங்கரும் பேசிக்கொண்டிருந்தபோது இடையிடையே மருந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். அவருடைய குடும்பத்தினர் மருந்து கொடுத்தாங்க. 'என்னாச்சு, ஏன் மருந்து?' என்று கேட்டேன். அதற்கு, 'இந்த மாதிரி இருக்கு, இப்போ எல்லாம் சரியாகிடும்' என்று சொன்னார்."
"முகம் கருப்பா இருக்கே..."
"அப்புறம் சில நாட்கள் கழித்து, 'உங்க முகம் முன்னாடியை விட கொஞ்சம் கருப்பா இருக்கே' என்று கேட்டேன். அதற்கு அவர், 'அது ஒன்னும் இல்லைன்னே... மருந்து சாப்பிட சாப்பிட சரியாகிடும்' என்று சொன்னார். ஆனால் இவ்வளவு தூரத்துக்கு... சாவும் அளவுக்கு ஆகும்னு நான் நினைக்கவே இல்ல. இப்போ தான் மகள், பேரன் என ரொம்ப மகிழ்ச்சியோடு இருந்தார். இதற்குள் இப்படி ஆனதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. நல்ல தம்பி, நல்ல நண்பர்..." இவ்வாறு அவர் உருக்கமாக கூறினார்.












Click it and Unblock the Notifications