சூத்திரதாரியே ரவுடி நாகேந்திரன் தான்.. ஆம்ஸ்ட்ராங் கொலையில் “A1" குற்றவாளி.. A2 யார் தெரியுமா?
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏ1 குற்றவாளியாக ரவுடி நாகேந்திரன் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. ஏ2 குற்றவாளியாக, தலைமறைவாக இருந்து வரும் ரவுடி சம்போ செந்தில் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 5000 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிக்கையை காவல்துறையினர் எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி தனது வீட்டிற்கு வெளியே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலைச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த கொலை வழக்கு தொடர்பாக அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் என மொத்தம் 28 பேர் கைது செய்யப்பட்டனர். ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட திருவேங்கடம் என்பவர் போலீசாரிம் இருந்து தப்ப முயன்றதால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதனை தொடர்ந்து தலைமறைவாக இருந்த சீசிங் ராஜா சமீபத்தில் கைது செய்யப்பட்டு அவரும் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள சம்போ செந்தில் மற்றும் வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் ஆகியோரை தொடர்ந்து போலீசார் தேடி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பொன்னை பாலு, ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி, தோட்டம் சேகரின் மனைவி மலர்க்கொடி, ஹரிதரன், சதீஷ்குமார், ஹரிஹரன் சிவா, பிரதீப், முன்னாள் பாஜக நிர்வாகி அஞ்சலை, முகிலன், விஜயகுமார் என்ற விஜய், விக்னேஷ் என்ற அப்பு, முன்னாள் காங்கிரஸ் நிர்வாகியும், பிரபல ரௌடி நாகேந்திரன் மகனுமான அஸ்வத்தாமன், ராஜேஷ், செந்தில்குமார் மற்றும் கோபி உள்ளிட்ட 25 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனை போலீசார் தீவிரமாக தேடி வரும் நிலையில், அவர் வெளிநாடு தப்பி சென்று விட்டார் என கூறப்படுகிறது. சம்பவம் செந்தில் என்ற சம்போ செந்திலுக்கு மிகவும் நெருக்கமானவர் என கூறப்படும் மொட்டை கிருஷ்ணனை பிடித்தால், ஆம்ஸ்ட்ராங் கொலை சதித்திட்டம், சம்போ செந்தில் இருப்பிடம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் கிடைக்கும் என போலீசார் கருதுகின்றனர்.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 28 பேரும் மீதும் செம்பியம் காவல்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். 5000 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையை போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 28 நபர்களோடு சேர்த்து தலைமறைவாக உள்ள சம்போ செந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணன் ஆகியோர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் எதிரியாக அதாவது ஏ1 குற்றவாளியாக ரவுடி நாகேந்திரன் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. ஏ2 குற்றவாளியாக, தலைமறைவாக உள்ள ரவுடி சம்போ செந்தில் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. ஏ 3 குற்றவாளியாக வழக்கறிஞர் அஸ்வத்தாமனை காவல்துறையினர் சேர்த்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications