ஜூலை 20 முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான டோக்கன்- விண்ணப்பங்கள் விநியோகம்
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான டோக்கன் மற்றும் விண்ணப்பங்கள் வரும் ஜூலை 20 ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்படுகிறது.
திமுக தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு மாதம் ரூ 1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் திமுக அரசு அமைந்த நிலையில் இந்த திட்டத்தை தொடங்கி வைப்பதாக 2 ஆண்டுகள் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி இந்த திட்டம் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயனாளிகள் எப்படி தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வகுத்துள்ளது.
இந்த திட்டத்தில் பயன்பெற மகளிருக்கு ஆண்டு வருமானம் ரூ 2.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். சொந்த வீடு, நிலம் இருக்கக் கூடாது. கார், ஆட்டோ போன்ற வாகனங்கள் சொந்தமாக இருக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இதை பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டித்தன. ஆரம்பத்தில் எல்லாருக்கும் ரூ 1000 என சொல்லிவிட்டு தற்போது அதில் இத்தனை நிபந்தனைகளை வைப்பதா?
அப்படிப்பார்த்தால் இந்த திட்டத்தில் குறைந்த அளவிலான பெண்களே பயனடைவார்கள் என்ற விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில் பயனாளிகளை தேர்வு செய்யும் பொறுப்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.
அதில் விண்ணப்பதாரரின் பெயர், திருமண நிலை, தொலைபேசி எண், மின் இணைப்பு எண், ஆதார் எண், குடும்ப அட்டை, வாடகை வீடா அல்லது சொந்த வீடா உள்ளிட்ட 10 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் பயனடைய 18 வயதுக்கு மேல் உள்ளவராக இருத்தல் வேண்டும். இந்த நிலையில் வரும் 20-ம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான டோக்கன் மற்றும் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பயனாளிகளுக்கு வீடுதோறும் ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கனையும் விண்ணப்பங்களையும் கொடுப்பார்கள். அந்த விண்ணப்பத்தில் உள்ள விவரங்களை பூர்த்தி செய்து டோக்கனில் உள்ள தேதியில் நேரத்தில் ரேஷன் கடையில் ஒப்படைக்க வேண்டும். அவற்றை மாவட்ட ஆட்சியர்கள் குழு ஆய்வு செய்து பயனாளிகளை கண்டறியும். இந்த திட்டத்திற்கு கைவிரல் ரேகை அவசியம் என்று சொல்லப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications