சென்னை 2வது விமானநிலையம்.. ரூ.165 கோடி ஊழலுக்கு பலே பிளான்! பதிவுத்துறை அதிகாரி மீது பரபரப்பு புகார்
சென்னை: பரந்தூரில் அமையவிருக்கும் புதிய விமான நிலையத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணியில் இழப்பீடு வழங்குவதில் கூடுதல் பதிவுத்துறை தலைவர் ரூ.165 கோடி இழப்பு ஏற்படுத்த திட்டமிட்டதாக அறப்போர் இயக்கம் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
Recommended Video
சென்னை மீனம்பாக்கத்தில் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. அதை விரிவாக்கம் செய்வதற்கு மத்திய விமான போக்குவரத்துத்துறை முயன்ற நிலையில் அதற்கு தேவையான இடவசதிகள் இல்லாத காரணத்தால் புதிய விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக விமான போக்குவரத்துத் துறை தமிழ்நாடு அரசிடம் இடங்களை பரிந்துரை செய்ய கோரியது. அதன் அடிப்படையில், இரண்டாவது சர்வதேச விமான நிலையம் தொடங்க செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நான்கு இடங்களை பரிந்துரை செய்தனர்.

புதிய விமான நிலையம்
இந்த இடங்களில் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தை அடுத்துள்ள பரந்தூரில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட முடிவு செய்யப்பட்டது. மேலும் புதிய சர்வதேச விமான நிலையத்தை அமைக்க பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுமார் 12 கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

பொதுமக்கள் எதிர்ப்பு
இதனிடையே விவசாய நிலங்களை கையகப்படுத்த ஏகனாபுரம் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தங்கள் பகுதியை விட்டுவிட்டு வேறு பகுதிகளை அரசு விமான நிலையம் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். ஏகனாபுரம் கிராமத்தைப் போல் அதனைச் சுற்றியுள்ள ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு விதமான ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.

அறப்போர் புகார்
இந்த நிலையில் இதைவைத்து மோசடியில் ஈடுபட முயற்சி நடைபெறுவதாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து அந்த இயக்கம் தெரிவித்து உள்ளதாவது, "விமான நிலையம் வரப்போகும் இடம் என்பதால் அங்கு நிலம் வைத்திருப்பவர்களுக்கு 4 மடங்கு இழப்பீடு கிடைக்கும் என்று கணக்கிட்டு தங்களுடைய 73 ஏக்கர் நிலத்தின் மதிப்பை உயர்த்த கூடுதல் பதிவுத்துறை தலைவர் சீனிவாசனுடன் இணைந்து மோசடி பத்திரப்பதிவு செய்துள்ளது Prakash Silks and Sarees நிறுவனம்.

ரூ.165 கோடி மோசடி
இதன் மூலம் 165 கோடி அதிகமாக இழப்பீடு பெற திட்டமிட்டு காத்திருக்கின்றனர். தமிழக அரசு விழித்துக் கொள்ளுமா? உயர் பதவியில் இருந்து கொண்டு திருடர்களுடன் கூட்டணி வைத்து மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் சீனிவாசன் போன்ற அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்களா? மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் திமுக அரசு செயல்படுமா? அல்லது திருட்டு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு கொடுத்து மக்களுக்கு துரோகம் செய்யுமா?" என்று குறிப்பிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications