வெறும் 2 பேருக்கு மாதம் 80 ஆயிரம் செலவு.. வாயடைக்க வைத்த பிரபல மெட்ரோ நகரத்தின் செலவு
டெல்லி: டெல்லியின் புறநகர் பகுதியான குர்கானில் வசிக்கும் பெண் ஒருவர், தனது மாதச் செலவு ₹80,000 என்று பகிர்ந்த வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. மெட்ரோ நகரங்களில் வாழும் இளம் தம்பதிகளுக்கு இது மிகவும் "யதார்த்தமான" கணக்கு என்று பலரும் கூறி வருகின்றனர். அந்தப் பெண் (அனுஷ்கா) பகிர்ந்த செலவுகளின் விரிவான பட்டியலில் 2 BHK வீட்டின் வாடகை மற்றும் மெயிண்டன்ஸ் மட்டும் ₹37,000 ஆகும்.
குர்கானில் வசிக்கும் பெண் ஒருவர், தனது மாதச் செலவுகளின் விரிவான பட்டியலை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பட்டியலைபார்க்கும் போது, டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, குர்கான் போன்ற ஒரு மெட்ரோ நகரத்தின் வாழ்க்கைச் செலவு இப்படித்தான் இருக்கும் என்பதை அப்பட்டமாக காட்டுகிறது.

இதுபற்றி சற்று விரிவாகவே பார்ப்போம். குர்கானில் சிறு தொழில் நடத்தி வரும் அனுஷ்கா என்பவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட இந்த வீடியோ பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக பணத்தை பார்த்து பார்த்து செலவு செய்யும் இளம் தம்பதிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அவர் தனது கணவருடன் ஒரு 2 BHK வீட்டில் வசித்துக்கொண்டு எப்படி பட்ஜெட்டை நிர்வகிக்கிறார் என்பதை அந்த வீடியோவில் விளக்கியுள்ளார்.
குர்கானில் உள்ள ஒரு அரை-வசதியுள்ள 2BHK அபார்ட்மெண்டிற்கு பராமரிப்புக் கட்டணம் உட்பட மாதம் ரூ. 37,000 வாடகை செலுத்துவதாக அனுஷ்கா தெரிவித்தார். வாடகைக்கு அப்பால், வீட்டுத் தேவைகளுக்காக அவர்கள் தொடர்ந்து செலவிடுகிறார்கள். அவர்களின் மாத மளிகைப் பில் பயன்பாட்டைப் பொறுத்து ரூ. 10,000 முதல் ரூ. 15,000 வரை செலவு ஆகிறது. மேலும், கணவன்-மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் நகர்ப்புற வீடுகளில் வழக்கமாக இருப்பதைப் போல, வீட்டைச் சுத்தம் செய்யும் பெண்ணிற்கு மாதம் ரூ. 2,500 வழங்குகிறார்கள்.
போக்குவரத்து மற்றும் பயன்பாட்டுக் கட்டணங்கள் அந்த தம்பதியின் பட்ஜெட்டில் மற்றொரு முக்கியப் பங்கு வகிக்கிறது. அனுஷ்காவின் கூற்றுப்படி, கார் எரிபொருள் செலவு மாதம் ரூ. 6,000 முதல் ரூ. 8,000 வரையிலும், மின்சாரம் மற்றும் தண்ணீர் போன்ற இதர பயன்பாட்டுக் கட்டணங்கள் சுமார் ரூ. 5,600 ஆகவும் இருக்கிறது. பல நகர்ப்புற தம்பதிகளைப் போலவே, அவர்கள் வாழ்க்கை முறை சார்ந்த செலவுகளுக்கும் பணம் ஒதுக்குகிறார்கள். அந்த மாதத்தில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஷாப்பிங்கிற்கு ரூ. 10,000 செலவானது, அதே சமயம் வெளியே சாப்பிடுவதற்கும் உணவு ஆர்டர் செய்வதற்கும் சுமார் ரூ. 4,000 - 5,000 செலவாகி உள்ளது.
அனைத்தையும் கூட்டினால், அவர்களின் மொத்த மாதாந்திர செலவு சுமார் ரூ. 75,000 முதல் ரூ. 80,000 வரை வரும் என்று அனுஷ்கா மதிப்பிட்டிற்கிறார். அந்த வீடியோவின் தலைப்பில், "குர்கானில் வசிக்க உண்மையில் எவ்வளவு செலவாகும்? நாங்கள் கணக்கிட்டோம்... அதன் முடிவு எங்களை அதிச்சியடைய வைத்தது" என்று பதிவிட்டிருக்கிறார் அனுஷ்கா. இந்த பட்ஜெட்டில் அவர்களின் சேமிப்பு சேமிப்புக்காகத் தனியாகப் பணம் ஒதுக்குவதாகவும் அவர் கமெண்டில் தெளிவுப்படுத்தி உள்ளார்.
இந்த வீடியோ 7.5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து ரீச் ஆகி உள்ளது. அத்துடன் இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. பல பார்வையாளர்கள் இந்த செலவுப் பட்டியல் "மிகவும் உண்மையானது" என்றும், மெட்ரோ நகரங்களில் வாழும் தம்பதிகளுக்கு இது பொருத்தமானது என்றும் கூறினார். இருப்பினும், ஆடம்பரச் செலவுகள் ஏதுமின்றி இவ்வளவு விரைவாகச் செலவுகள் அதிகரிப்பது சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஒரு நெட்டிசன், "கடவுளே, இதே போன்ற வாழ்க்கை முறைக்கு நாங்கள் மும்பையில் இரண்டு மடங்கு செலவு செய்கிறோம்!" என்று கூறியுள்ளார், மற்றொருவர், "உங்கள் செலவுகள் இதைவிட அதிகமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்... நீங்கள் ஒரு மேலோட்டமான கணக்கைத்தான் கொடுத்துள்ளீர்கள்" என்று கருத்து தெரிவித்திருக்கிறார்
மூன்றாவது நெட்டிசன், "வாடகை மிக அதிகமாக இருக்கும் குர்கானைப் பொறுத்தவரை இது உண்மையில் மிகவும் யதார்த்தமானது" என்று கூறியுள்ளார். நீங்கள் சென்னை, பெங்களூர், கோவை, மதுரை உள்பட பெரிய நகரங்களில் வசிக்கிறீர்களா.. உங்களுக்கு மாதம் எவ்வளவு செலவாகிறது என்பதை கூறுங்கள்.












Click it and Unblock the Notifications