திமுக எமர்ஜென்சியை பார்த்த கட்சி.. எம்எல்ஏ கைது விவகாரத்தை சட்ட ரீதியாக சந்திப்போம்.. ஆர்எஸ் பாரதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தூத்துக்குடியில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக விளாத்திக்குளம் திமுக சட்டப் பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளதற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், திமுக எமர்ஜென்சியை பார்த்த கட்சி என்றும், எம்எல்ஏ கைது விவகாரத்தை சட்ட ரீதியாக சந்திப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் ஜூலை 18 ஆம் தேதியன்று இரவில் நடைபெற்றது. அப்போது, கூட்டத்தில் கலந்துகொண்ட விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன், பேரவையை பூட்டினாலும் முதல்வர் விஜயின் எலும்பை உடைப்போம் என்று பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

rs-bharathi-slams-markandeyan-arrest-says-dmk-is-a-party-that-faced-the-emergency

மார்க்கண்டேயன் கைது

இந்த மிரட்டல் சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி கண்ணனிடம் தவெகவினர் புகார் அளித்தனர். இதையடுத்து, இதுகுறித்து விசாரிப்பதற்காக விளாத்திகுளம் அம்பாள் நகரில் உள்ள சட்டப் பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயனின் வீட்டுக்கு இன்று காலை வந்தனர். அப்போது, மார்க்கண்டேயன் நடைப்பயிற்சியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார்.

அவரை கைது செய்ய வந்திருப்பதாக போலீஸார் கூறிய நிலையில், அவர் வீட்டிற்குள் சென்று தயாராகி வெளியே வந்தார். போலீஸ் கைது செய்ய வந்திருப்பதை அறிந்த திமுகவினர் மார்க்கண்டேயன் வீட்டிற்கு முன்பு திரண்டு கைதுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். தொடர்ந்து, தமிழக அரசைக் கண்டித்து கோஷமிட்டும், போலீஸ் வாகனத்தை மறித்தும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

சிறை கண்ட திமுக கட்சி

அவர்களைத் தடுத்து நிறுத்திய போலீஸார் காவல் வாகனத்தில் மார்க்கண்டேயனை போலீசார் அழைத்துச் சென்றனர். அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் தூத்துக்குடி மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாட்டுக்காகவும், மொழிக்காகவும் பல போராட்டங்களை நடத்தி சிறையிலே இருந்த கட்சிதான் திமுக. சட்டத்தை எரித்தோம் என்பதற்காக மதுரையில் இரண்டு வருடம் தண்டனை பெற்ற கழகத் தோழர்கள் எல்லாம் உண்டு. கோவை ராமநாதன் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு அப்போது நடைபெற்ற சம்பவத்துக்காக திருமணமான 2 மாதங்களில் 4 வருடம் தண்டனை கொடுக்கப்பட்டு உள்ளே அனுப்பினார்கள். இதையெல்லாம் சந்தித்த கட்சி திமுக.

வரலாறு தெரியாத விஜய்

இவை எல்லாம் தெரியாமல் ஆட்சி வந்திருக்கிறார் விஜய். அவருக்கு வரலாற்றை சொல்லிக் கொடுக்க வேண்டும். எம்ஜிஆர் கட்சி துவங்கிய நேரத்தில் கட்சியின் அமைப்பாளராக கேஏ கிருஷ்ணசாமி நியமிக்கப்பட்டார். அப்போது அவர் மேடையில் பகிரங்கமாக பேசினார். புரட்சித் தலைவர் கூறினால் கருணாநிதியின் தலையை கொய்து வருவேன் என்று பேசினார். ஆனால், அவர் மீது கருணாநிதியோ, திமுகவோ எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அண்ணாவை பற்றி கேவலமாக கீழ்த்தரமாக காங்கிரஸார் எழுதி வைத்தனர். பகலில் போவோர் மட்டுமே இதைப் படிப்பார்கள். இரவில் போவோரும் படிக்கும் வகையில் அங்கே பெட்ருமாஸ் லைட்டை வைக்க சொன்ன கட்சிதான் திமுக. ஜனநாயகத்தில் சகிப்புத் தன்மை, விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை வேண்டும். இன்றைக்கு இருக்கும் ஆட்சிக்கு அது அறவே இல்லை என்பதை இந்த 60 நாளில் நிரூபித்துவிட்டார்கள்.

எமர்ஜென்சியை பார்த்த கட்சி

திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனைத் தொடர்ந்து இரண்டாவது எம்எல்ஏவை கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற கட்சியில் இருந்து எம்எல்ஏக்களை விஜய் அவருடைய கட்சியில் சேர்த்துக் கொண்டார். ஆனால், திமுகவில் உள்ள எம்எல்ஏக்கள் வைரம் பாய்ந்த தொண்டர்களாக இருக்கிற காரணத்தால் அவர்களை மாற்ற முடியாது என்பதற்காக இதுபோன்ற நடவடிக்கைகளை தவெக அரசு கையாளுகிறதோ என்று எண்ணும் வகையில் அவர்கள் நடவடிக்கை இருக்கிறது.

திமுக எமர்ஜென்சியை பார்த்த கட்சி. நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை கொண்டிருப்பதால் மார்க்கண்டேயன் கைதை சட்ட ரீதியாக சந்திப்பதற்கு திமுக தயாராக இருக்கிறது. சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தால் வழக்கு போடலாம். நாட்டை விட்டு ஓடி செல்பவர்கள், தலைமறைபாவர்களை கைது செய்வது நியாயம். துன்புறுத்துவதற்காக, மன உளைச்சல் தருபவதற்காக இதுபோன்ற செயல்களைச் செய்கின்றனர்.

திமுக ஆதரவாளர்கள் கைது

கொலை, கொள்ளைகளை பார்ப்பதற்கு இந்த காவல் துறைக்கு நேரமில்லை. திமுகவை ஆதரித்து பதிவு போட்டால் அவர்களை போலீஸார் மிரட்டி நீக்குகின்றனர். கல்லூரியில் படிக்கும் மாணவர்களை மிரட்டி, விசாரணை என்ற பெயரில் அச்சுறுத்தி இருக்கின்றனர். புதிய தலைமுறை பத்திரிகையாளர் விஜயனை விசாரணை என்ற பெயரில் மிரட்டியிருக்கிறது என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+