'நீ டை போட்டு சூப்பரா இருக்க'.. ஆர்எஸ் பாரதி vs ஜெயக்குமார்.. வெளியே எலியும் பூனை.. உள்ளே வேறலெவல்
சென்னை: தேர்தல் ஆணைய ஆலோசனைக்கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்தில் திமுக சார்பில் கலந்து கொண்ட ஆர்.எஸ்.பாரதியும், அதிமுக சார்பில் கலந்து கொண்ட ஜெயக்குமாரும் ஒருவருக்கு ஒருவர் ஜாலியாக பேசிக்கொண்ட வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19 தேதி தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவிப்பது, வேட்புமனு தாக்கலுக்கு தயார் ஆவது என விறுவிறுப்பாக வேலைகளை செய்து வருகின்றன. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக தலைமையில் ஒரு அணியும், அதிமுக தலைமையில் ஒரு அணியும், பாஜக தலைமையில் ஒரு அணியும், நாம் தமிழர் கட்சி தனியாகவும் போட்டியிட உள்ளன.

பொதுவாக அதிமுக திமுக இடையே எப்போதுமே வலுவான போட்டி இருக்கும்.. இரு கட்சியினரும் எதிரிகள் போல் இருப்பார்கள். நாடாளுமன்றத்தில் பாஜக காங்கிரஸ் எம்பிக்கள் கேன்டீனில் ஒன்றாக சாப்பிடுவார்கள். இவர் அறையில் அவரும், அவர் அறையில் இவரும் என ஜாலியாக ஒன்றாக அமர்ந்து பேசுவார்கள். கட்சிகள் வேறாக இருந்தாலும், அரசியல் நிலைப்பாடு வேறாக இருந்தாலும் எதிரிகள் போல் இருக்க மாட்டார்கள்.
ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே என காங்கிரஸ் தலைவர்கள் சர்வ சாதாரணமாக பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா உடன் பல்வேறு விஷயங்கள் குறித்து நேரடியாக சென்று பேசிக்கொள்வார்கள். ஆனால் அந்த அரசியல் கலாச்சாரம் எல்லாம் தமிழ்நாட்டில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இல்லவே இல்லை. அடிமட்ட அளவில் தான் இரு கட்சியிலும் நட்பு இருக்கும். மேல்மட்ட நிர்வாகிகளிடையே சுத்தமாக இருக்காது.
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று அனைத்து கட்சிகள் கூட்டம் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தலைமையில் நடந்தது.

இந்த கூட்டத்தில் திமுக சார்பில் ஆர்எஸ் பாரதி கலந்து கொண்டார். அதிமுக சார்பில் ஜெயகுமார் கலந்து கொண்டார். வெளியில் இருவரும் எலியும் பூனையும் போல் இருக்கும் நிலையில், அனைத்து கட்சி கூட்டத்தில் ஒருவருக்கு ஒருவர் ஜாலியாக பேசி சிரித்துக் கொண்டனர். முதலில் ஜெயக்குமார் ஆர்எஸ் பாரதியை பார்த்து நீங்க கிளாமரஸ்ஸாக இருக்கீங்க என்று ஜாலியாக கேள்வி எழுப்பினார். அதற்கு ஆர்எஸ் பாரதி "எனக்கு வயசாகிடுச்சிபா.. நீ டை போட்டு சூப்பரா இருக்க" என்று கூறினார். அதற்கு சிரித்தபடி பதிலளித்த ஜெயகுமார். டையை கண்டுபிடிச்சவருக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும்... " என்று கூறினார்.
முன்னதாக நேற்று சென்னையில் தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களுக்கு சத்யபிரத சாகு பேட்டி அளித்த போது, தேர்தல் பணியில் உள்ள அரசு அலுவலர்கள், போலீசாருக்கு தபால் மூலம் ஓட்டுப்போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அப்படி பெறப்படும் தபால் ஓட்டுகளில் பெரும்பாலானவை ஓட்டுகளாக வருவதில்லை. எனவே தபால் ஓட்டு முறையில் சில மாற்றங்கள் செய்துள்ளோம். அதன்படி, இனி தபாலில் ஓட்டுகளை தேர்தல் அலுவலர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க முடியாது. தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவிக்கும் தேதியில் அதற்கான மையத்திற்கு நேரில் சென்று அங்கு வைக்கப்பட்டுள்ள பெட்டிகளில் தபால் ஓட்டுகளை செலுத்தலாம்.

இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த ஜனவரி 22-ந்தேதி வெளியிடப்பட்டிருக்கிறது. அதன் பிறகு யாரும் (1.1.2024 தேதிக்கு முன்பு 18 வயது பூர்த்தியானவர்கள்) வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மார்ச் 17-ந்தேதிக்குள் விண்ணப்பித்து இருந்தால், அவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். இந்த பட்டியல் வரும் 27-ந்தேதி இறுதி செய்யப்படும். மற்றவர்களின் விண்ணப்பம் தேர்தலுக்கு பின்னர் பரிசீலிக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications