தீண்டாமை வன்கொடுமை.. தமிழகத்தில் டாப் 10 மாவட்டங்களில் எந்த மாவட்டத்தில் முதலிடம்? ஆர்டிஐயில் பகீர்
சென்னை: தமிழகத்தில் தீண்டாமை வன்கொடுமைகள் கடைப்பிடிக்கப்படும் டாப்-10 மாவட்டங்கள் பட்டியலில் மதுரை மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளதாக ஆர்டிஐ மூலம் அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
இதுகுறித்து சமூக நல ஆர்வலர் கார்த்திக் கூறுகையில், கடந்த 2021ம் ஆண்டின் இறுதி நிலவரப்படி தமிழக காவல்துறையில் ADGP சமூக நீதி (ம) மனித உரிமைகள் பிரிவு அறிக்கையின்படி தமிழகத்தில் தீண்டாமை பாகுபாடு கடைபிடிக்கபடும் என்று அடையாளப்படுத்துப்பட்டுள்ள கிராமங்களின் எண்ணிக்கை மொத்தம் 445, இதில் அதிகபட்சமாக முதல் இடத்தில் மதுரை மாவட்டம் 43, இரண்டாம் இடத்தில் விழுப்புரம் 25, அதற்கு அடுத்தடுத்த இடத்தில் திருநெல்வேலி 24, வேலூர் 19, திருவண்ணாமலை 18 என்கிற வரிசையில் இடங்களை பிடித்துள்ளன.
இந்தாண்டு (2022), கடைசி இடத்தில் ஒரே ஒரு கிராமத்துடன் சென்னை இடம் பெற்றுள்ளது. மற்றொரு பக்கம் தீண்டாமை வன்கொடுமைகள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட கிராமங்கள் என்று 341 கிராமங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டியல் வரிசை
பட்டியல் வரிசையில் தீண்டாமை கிராமங்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மறுபுறம் இக்கிராமங்களில் தீண்டாமை ஒழிப்புதற்கான விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தப்பட்டு வருகின்றன. கடந்தாண்டு 2021ல் மொத்தம் 597 கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.

திருச்சி மாவட்டம்
6வது இடத்தில் உள்ள திருச்சி மாவட்டத்தில் அதிகபட்சமாக 50 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இதே காலகட்டத்தில் டாப்-1ல் உள்ள மதுரை மாவட்டத்தில் வெகு குறைவாக வெறும் 21 விழிப்புணர்வு கூட்டங்கள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளன. அதே போல் இந்தாண்டு 2022 ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான மூன்று மாதத்தில் மட்டும் தமிழகம் முழுவதும் ADGP சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் காவல் பிரிவு ஏற்படுத்திய விழிப்புணர்வு கூட்டங்கள் மொத்தம் 212, அதில் தீண்டாமை வன்கொடுமைகள் டாப்-1 வரிசையில் உள்ள மாவட்டமான மதுரையில் நடத்திய கூட்டங்கள் வெறும் 3 மட்டுமே, இதே காலகட்டத்தில் 6வது இடத்தில் திருச்சி மாவட்டத்தில் 28 இடங்கள் நடைபெற்றன.

25 கூட்டங்கள்
அதாவது மதுரையைவிட கூடுதலாக 25 கூட்டங்கள் நடத்தியுள்ளனர். மேலும் தூத்துக்குடி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் விழிப்புணர்வு கூட்டங்களின் எண்ணிக்கை பூஜ்ஜியம் (0) என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. தேசிய குற்ற ஆவண காப்பகம் (NCRB) அறிக்கையின்படி தமிழகத்தில் SC/ST Atrocity வழக்குகள் கடந்த 2009 லிருந்து 2018 வரையிலான 10 ஆண்டுகளில் 27.3 சதவீதம் அதிகரித்துள்ளது என்பதை எச்சரித்துள்ளது.

சாதி மக்கள்
இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் பட்டியல் சாதி மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவரும் நிலையில் அதை குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாதிய தீண்டாமை கிராமங்களை கண்டறிந்து அங்கு இரு தரப்பு மக்களிடையே விழிப்புணர்வு கூட்டங்கள் அதிக எண்ணிக்கையில் நடத்தப்படாத நிலை உள்ளது.

பரிந்துரைகள்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, ADGP சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் காவல் பிரிவு மற்றும் சமூகநலத்துறைகள் ஆகிய மூன்று துறைகளும் இணைந்து தமிழகத்தில் தீண்டாமை வன்கொடுமைகள் அதிகம் உள்ள முதல் டாப்-10 மாவட்டங்களில் முதற்கட்டமாக அதிக எண்ணிக்கையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு சமூக நல்லிணக்க கிராமங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். தமிழக அரசு இதற்காக சிறப்பு நிதி ஒதுக்கப்படவேண்டும்.

445 கிராமங்கள்
தீண்டாமை வன்கொடுமை கிராமங்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட 445 கிராமங்களை மாடல் நல்லிணக்க கிராமங்களாக உருவாக்க நடவடிக்கை எடுப்பதோடு அவ்வாறான மாடல் கிராமங்களுக்கு தலா ரூ.25 லட்சம்வரை ஊக்கத்தொகை பரிசு கிராம வளர்ச்சி அளித்து ஊக்கப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர் கார்த்திக் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications