சைலண்ட் ஹண்டர்.. உக்ரைனை காவு வாங்க ரஷ்யா களமிறங்கிய அஸ்திரம்.. பின்னணியில் இருக்கும் டிராகன்
சென்னை: உக்ரைன் ட்ரோன்களை குறிவைத்துத் தாக்குவதற்கு ரஷ்யா சீனாவில் தயாரிக்கப்பட்ட 'சைலண்ட் ஹண்டர்' லேசர் வான் பாதுகாப்பு அமைப்பை பயன்படுத்தியுள்ளதாக ரஷ்ய ராணுவ வட்டாரங்கள் வெளியிட்டுள்ள வீடியோ மூலம் தெரியவந்துள்ளது.
இந்த லேசர் ஆயுதமானது ரஷ்யாவின் கோசெவ்னிக் சிறப்பு ராணுவ குழுவின் நடமாடும் வான் பாதுகாப்புப் பிரிவால் பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சைலண்ட் ஹண்டர் லேசர் அமைப்பு
'சைலண்ட் ஹண்டர்' லேசர் அமைப்பானது, 30 கிலோவாட் திறன் கொண்ட ஃபைபர் ஆப்டிக் லேசர் ஆகும். இது எஸ்யூவி வாகனத்தில் பொருத்தப்பட கூடிய அளவிற்கு சிறிய லேசர் ஆயுதம் ஆகும். இந்த அமைப்பை சீன பொறியியல் அகாடமி டீம் உருவாக்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இந்த அமைப்பில் ரேடார் மற்றும் ஆப்டிகல் லேசர் சிஸ்டம் ஆகியவை உள்ளன. இவை இலக்குகளைக் கண்டறிந்து கண்காணித்துத் தாக்கும் திறன் கொண்டவை. ரேடார் 5 கிலோமீட்டர் தூரம் வரை இலக்குகளைக் கண்டறியும் திறன் கொண்டது என்றும், ஆப்டிகல் அமைப்பு 3 கிலோமீட்டர் தூரம் வரை இலக்குகளைக் கண்காணிக்கும் என்றும் கூறப்படுகிறது.

சைலண்ட் ஹண்டர் அமைப்பு 1.5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ட்ரோன்களை அழிக்கும் திறன் கொண்டது என்றும், 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆப்டிகல் அமைப்புகளை செயலிழக்கச் செய்யும் திறன் கொண்டது என்றும் கூறப்படுகிறது. இதை பயன்படுத்தி ரஷ்ய ராணுவம் 1,300 மீட்டருக்கும் அதிகமான தூரத்தில் ட்ரோன்களை வெற்றிகரமாக இடைமறித்து தாக்கியுள்ளதாக வீடியோவில் பதிவாகியுள்ளது.
ரஷ்ய ராணுவம் வெளியிட்ட வீடியோ ஒன்றில், சைலண்ட் ஹண்டர் அமைப்பு ஒரு இரும்பு தகட்டின் மீது சோதனை செய்யப்படுவதும், உக்ரைன் ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்படுவதும் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவில் காணப்படும் ட்ரோன்கள் உக்ரைனின் ஷ்செட்ரிக் வகை UAV, ஸ்கைவாக்கர் X8 மற்றும் டிஸ்ட்ராக்டர் எனப்படும் UAVக்கள் என அடையாளம் காணப்பட்டு உள்ளது.
உக்ரைன் அட்டாக் நடந்தது என்ன?
நேற்று ரஷ்யாவில் உக்ரைன் நடத்திய திட்டமிட்ட டிரோன் தாக்குதல் காரணமாக 41 ரஷ்ய போர் விமானங்கள் அழிக்கப்பட்டு உள்ளது. ரஷ்யா - உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்புகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.
ரஷ்யா உக்ரைன் போர் உச்சம் அடைந்து உள்ளது. இரண்டு நாடுகளுக்கு இடையிலான போர் ஒப்பந்தங்கள், அமைதி பேச்சுவார்த்தைகள் எதுவும் பயனளிக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் உக்ரைன் நாட்டின் டிரோன்கள் ரஷ்யா மீது நேற்று இரவு கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டது.
இதில் ரஷ்யாவின் 41 போர் விமானங்கள் அழிக்கப்பட்டது. முக்கியமாக ரஷ்யாவின் குண்டு போடும் போர் விமானங்களான Tu-95 மற்றும் Tu-22 அழிக்கப்பட்டது. உக்ரைன் மீது குண்டுகளை வீச ரஷ்யா இந்த போர் விமானங்களை பயன்படுத்தி வந்தது.
மர்மன்ஸ்க், இர்குட்ஸ்க், இவானோவோ, ரியாசான் மற்றும் அமுர் பகுதிகளில் உள்ள ரஷ்ய இராணுவ விமானநிலையங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தி உள்ளது. மர்மன்ஸ்க் மற்றும் இர்குட்ஸ்கில் நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தவிர, நாட்டின் அனைத்து இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை முறியடித்துவிட்டதாக ரஷ்யா கூறி உள்ளது.
ரஷ்யாவிற்கு உதவும் சீனா
இப்படிப்பட்ட நிலையில்தான் உக்ரைன் ட்ரோன்களை குறிவைத்துத் தாக்குவதற்கு ரஷ்யா சீனாவில் தயாரிக்கப்பட்ட 'சைலண்ட் ஹண்டர்' லேசர் வான் பாதுகாப்பு அமைப்பை பயன்படுத்தியுள்ளதாக ரஷ்ய ராணுவ வட்டாரங்கள் வெளியிட்டுள்ள வீடியோ மூலம் தெரியவந்துள்ளது.
ரஷ்யா இந்த சைலண்ட் ஹண்டர் அமைப்பை அக்டோபர் 2024 முதலே பயன்படுத்தி வருவதாக இந்த வீடியோ மூலம் தெரிய வருகிறது. ரஷ்யா மற்றும் சீனாவைத் தவிர, ஈரான் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளும் இந்த அமைப்பைப் பயன்படுத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஏப்ரல் 17, 2025 அன்று, சீனா ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்கி வருவதற்கான ஆதாரங்கள் உக்ரைனிடம் இருப்பதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த சீன வெளியுறவு அமைச்சகம், போரில் ஈடுபட்டுள்ள எந்த தரப்பினருக்கும் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ஆயுதங்களை சீனா வழங்கவில்லை என்று கூறியது.
கடந்த மே மாதம், ரஷ்ய பாதுகாப்பு நிறுவனங்களுக்கு வெடிமருந்து தயாரிப்பதற்கான உபகரணங்கள் மற்றும் பாகங்களை சீனா விநியோகித்ததாக உக்ரைனின் வெளிநாட்டு உளவு அமைப்பு தெரிவித்தது. அந்த அமைப்பின் கூற்றுப்படி, 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ரஷ்ய ட்ரோன்களில் பயன்படுத்தப்பட்ட முக்கியமான மின்னணு சாதனங்களில் 80% சீனாவிலிருந்து வந்தவை ஆகும்.
ரஷ்யா, உக்ரைன் ட்ரோன்களை குறிவைத்துத் தாக்குவதற்கு சீனாவில் தயாரிக்கப்பட்ட லேசர் வான் பாதுகாப்பு அமைப்பைப் பயன்படுத்துவது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் இது சீனாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான உறவில் ஒரு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications