வெளியே வந்த மூளை? கோமாவில் எடுத்த க்ளைமேக்ஸ்? ஆர்.வி.உதயகுமார் மெர்சல்!
சென்னை: இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் 'கிழக்கு வாசல்' படத்தினை டைரக்ட் செய்து கொண்டிருந்த போது தலையில் அடிப்பட்டு கோமாவில் இருந்தேன் என்றும் அப்படியான சூழ்நிலையில் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகளை எடுத்தேன் என்றும் கூறியுள்ளது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
கோடம்பாக்கம் சினிமா உலகில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த அமைதியான இயக்குநர் ஆர்.வி.உதயகுமார். ஒரு பக்கம் ஆக்ஷன் ஹீரோ விஜயகாந்த்தை 'சின்ன கவுண்டர்' படத்தில் மிக அமைதியாகக் காட்டுவார். இன்னொரு பக்கம் ஸ்டைல் மன்னன் ரஜினியை' அன்பான ''எஜமான்' ஆக மாற்றுவார். முதல் படம் 'உரிமை கீதம்' வெளியான போதே வெற்றிப் பட இயக்குநர்களில் இடம்பெற்றவர்.

'கிழக்கு வாசல்' போன்ற எமோஷனான படங்களை எடுக்கத் தெரிந்த இயக்குநர் உதயகுமார் நன்றாகப் பாடல் எழுதக்கூடியவர். அவரது இயக்கத்தில் வெளியாகும் படங்களில் அவரே சில பாடல்களை எழுதி, அவை சூப்பர் டூப்பர் ஹிட்டாகி உள்ளன. 'ஒரு நாளும் உன்னை மறவாத இனிதான வரம் வேண்டும்' என எழுதிய இவரது பேனாதான் 'தளுக்கி தளுக்கி வந்து மினிக்கி மினிக்கி வந்து உடல் குலுக்கி குலுக்கி வரும் முன்னாலே' என்ற கில்மா பாடல் வரிகளையும் எழுதியது. இப்போது நடிகராகவும் அவதாரம் எடுத்து நடித்து வருகிறார்.
இவரது அஃமார்க் முத்திரையை கிழக்குவாசல், சின்னக்கவுண்டர், எஜமான் ஆகிய படங்களில் பார்க்க முடியும். திரைப்பட விழா மேடைகளில் கூட அதிகம் அதிரும்படி பேசாத சாதுவான இயக்குநர் இவர். சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் 'கிழக்கு வாசல்' பட க்ளைமேக்ஸ் காட்சியை எடுக்கும் போது தான் பாதி கோமாவில் இருந்தேன் என்று சொல்லி இருக்கிறார். அந்த அதிர்ச்சியான செய்தியைக் கேட்டவர்கள் யாரும் அரண்டு போய்விடுவார்கள். கோமாவில் இருந்தவர் இயக்கிய படமா இது என்று? அப்போது என்ன நடந்தது?
அதைப் பற்றி ஆர்.வி. உதயகுமார் பேசுகையில், "எவ்வளவோ கஷ்டங்களை தாண்டிதான் சினிமா துறைக்குள் வாய்ப்பு கிடைத்து பலரும் வருகிறார்கள். அப்படித்தான் நானும். நான் ஆசைப்பட்ட ஒரு துறைக்குள்ள வாய்ப்பு கிடைத்து வந்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நாம பெயர் சம்பாதிக்கலாம், புகழ் சம்பாதிக்கலாம், ஆனால் ஒரு மனிதன் சந்தோஷத்தை எப்படிச் சம்பாதிப்பது? அந்த சந்தோஷத்தை நம் வாழ்க்கையில் யார் தருகிறார்களோ அவர்தான் நமக்கு ரியல் ஸ்டார். என் மகள் தான் என் சந்தோசம். அவள் எனக்குக் கல்யாணமாகி 9 ஆண்டுகள் கழித்துப் பிறந்தாள். 'கிழக்கு வாசல்' நேரத்தில் எனக்கு மிகப்பெரிய ஒரு விபத்து நடந்தது. மண்டை உடைந்து என் மூளையே திறந்துவிட்டது. பாதி படத்திலேயே இப்படி ஆகிவிட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு நான் பாதி கோமாவில் இருந்தேன்.
படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி ஷூட்டிங் போது எல்லாம் பாதி சுயநினைவுதான் இருந்தது. என்னை ஒரு சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிக் கொண்டு போனார்கள். நான் அப்படித்தான் அந்தப் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியை ஷூட் செய்தேன். அவ்வளவு நெருக்கடிகளில் மத்தியில்தான் 'கிழக்கு வாசல்' படத்தை எடுத்து முடித்தேன். படம் வெற்றி பெற்றாலும் அது நிலையான சந்தோஷம் இல்லை. என் மகள் பிறந்ததுதான் என் வாழ்க்கையில் நிலையான சந்தோஷம்.
என் முதல் படம் 'உரிமை கீதம்' படம் முடிந்து சென்சாருக்கு அனுப்பினோம். ஆனால், அதிகாரிகள் படம் பார்க்க தாமதம் ஆனது. அதற்குள் ஊரில் எனக்கு கல்யாணம் முடிவு செய்துவிட்டார்கள். 1988 பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி திருமணம். 24 ஆம் தேதி வரவேற்பு. உடனே சென்சார் அதிகாரியைப் பார்த்து பத்திரிகை கொடுத்தேன். திருமணத்திற்கு 2 நாட்கள்தான் இடைவெளி இருப்பதை உணர்ந்து இரவோடு இரவாகப் படத்தைப் பார்த்து சென்சார் சான்றிதழ் கொடுத்தார்கள். சென்சார் கிடைக்குமா? எனத் தவித்த எனக்கு அது மிகப்பெரிய அதிசயமாக இருந்தது. அது என் மனைவி வந்த ராசி என நினைத்துக் கொண்டேன்.
நான் சினிமா உலகில் யாரையுமே அழைக்கவே இல்லை. அப்படி இருந்தும் பண்ணைபுரத்தில் நடந்த என் திருமணத்திற்கு ஏவி.எம் சரவணன், சத்யராஜ், ஆர்.எம்.வீரப்பன் என திரையுலகமே திரண்டு வந்துவிட்டது. எப்படி இது நடந்தது என்பதே புரியவில்லை? உடனே நண்பரைக் கேட்டேன். படம் ப்ரிவ்யூ போட்டார்கள். பலரும் பார்த்துவிட்டார்கள். படத்திற்கு நல்ல பெயர் உள்ளது. ஆகவேதான் அனைவரும் வந்துவிட்டார்கள் என்றார். வீரப்பன் மேடையிலேயே 2 லட்சம் ரூபாய் செக் கொடுத்தார். அடுத்த படத்தை நீ தான் இயக்க வேண்டும் என்றார்.
திருமணத்திற்குப் பிறகு என் திரைப்படத்தின் கதைகளை எல்லாம் மனைவியுடன் தான் விவாதிப்பேன். அவரும் நிறைய ஐடியா கொடுப்பார். கார்த்திக் நடிப்பில் வெளியான 'பொன்னுமணி' கதையே என் மனைவி கொடுத்ததுதான். அந்தளவுக்கு அவர் விவரமானவர். படத்தில்கூட கதை என்று இவரது பெயரையே போட்டிருந்தேன்" என்கிறார்.












Click it and Unblock the Notifications