Congress Vs DMK: சட்டசபை தேர்தலில் காங்கிரஸுக்கு எதிராக திமுக உள்ளடி வேலை! திருநாவுக்கரசர் விமர்சனம்
சென்னை: நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களுக்கு எதிராக திமுக உள்ளடி வேலை பார்த்தது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் எஸ்.திருநாவுக்கரசர் விமர்சித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 138 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை சத்யமூர்த்தி பவனில் உள்ள அவரது திருவுருவபடத்திற்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் மலர்த் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். தொடர்ந்து பேசுகையில், "நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஜெயிக்க கூடாது என்பதற்காக திமுக பல தொகுதிகளில் உள்ளடி வேலைகளை பார்த்தது.

இதனால்தான் நிறைய தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெல்லவில்லை. ஆனால் திருமயம் உள்ளிட்ட தொகுதிகளில் குறைந்தபட்ச வாக்கு வித்தியாசத்தில் திமுக ஜெயித்திருக்கிறது என்றால் அது காங்கிரஸ் கட்சியின் உழைப்பால்தான்! தேர்தலுக்கு முன்பு நிறைய நிர்வாகிகள் "ஏன் மீண்டும் திமுக, அதிமுகவுடனேயே கூட்டணிக்கு போகணும், தவெகவுடன் செல்லலாம்" என ராகுல் காந்தியிடம் தெரிவித்தனர்.
அப்போது நிறைய பேரை அழைத்து ராகுல் காந்தி கேட்ட போது "பெரும்பாலானோர் திமுகவுடனேயே இருக்கலாம்" என்றார்கள். அதனால்தான் ராகுல் காந்தியும் திமுகவுடனேயே கூட்டணி தொடர ஒப்புக் கொண்டார். ஆனால் திமுகவினர் கட்சியின் தலைமைக்கு கட்டுப்படாமல் உள்ளடி வேலைகளை பார்த்தனர் என்றார்.
அது போல் அவர் மேலும் கூறியிருப்பதாவது: விஜய் தலைமையில் இயங்கும் கூட்டணி அரசு மிக சிறப்பாகவே செயல்பட்டு கொண்டுள்ளது. 6 மாத ஆட்சியை வைத்து ஒரு ஆட்சியின் திறனுக்கு மார்க் போட முடியாது, போடவும் கூடாது.
மக்கள் தேர்ந்தெடுத்தது 5 ஆண்டுகளுக்கு, சில சிறிய பெரிய பிரச்சினைகள் இருக்க தான் செய்யும். மின்சாரத்தை ஒரே நேரத்தில் உற்பத்தி செய்ய முடியாது. இந்த ஆண்டுக்கு எவ்வளவு தேவை என்று தொலைநோக்கு திட்டத்தோடு செயல்பட வேண்டும். 4 ஆண்டுகள் கழித்து பற்றாக்குறை இருந்தால் கேட்கலாம்.
வந்த உடன் மின்பற்றாக்குறை இருந்தால் வெளியில் தான் வாங்க வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்சனை, அங்கும் இங்கும் நடக்கும் சில விஷயங்களை ஒடுக்க அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும். குற்றச்சாட்டுக்கு ஆட்படுத்தப்படுபவர் யாராக இருந்தாலும் சட்டம் எல்லாருக்கும் பொதுவானது தான்.
அருள் விக்னேஷ் விவகாரத்தில் வரும் செய்திகள் உண்மையாக இருந்தால் சந்தோஷம். உண்மையாக இருந்தால் உரிய நடவடிக்கையை விஜய் எடுக்க வேண்டும் எடுப்பார் என்று நினைக்கிறோம். சம்பந்தப்பட்டவர்கள் சட்டமன்ற உறுப்பினர், மற்றொருவர் ஆட்சியர் . சட்டமன்ற உறுப்பினர் அதை மறுக்கிறார். நான் செய்யவில்லை ஆதாரம் காட்டுங்கள் என்றார்.
ஆட்சியரும் இதுவரை ஆம் என்றும் சொல்லவில்லை, இல்லை என்றும் சொல்லவில்லை. ஆட்சியரின் கணவர் அதிகாரபூர்வமாக தலைமைச் செயலாளருக்கு புகார் மனு அளித்து இருந்தால் ஊடகங்களில் வெளியாகியிருக்கும். காவிரி நதி நீர் பிரச்சினை, மேகதாது அணை பிரச்சினை விஜய் ஆட்சிக்கு வந்த பின் ஏற்பட்ட புதிய பிரச்சினை இல்லை. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு மேகதாது அணை கட்ட கூடாது என்பது தான் எங்கள் நிலைப்பாடு". இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
