பிரசாரத்திற்கு கூப்பிடலை.. என்னைவிட நமீதா சிறந்த பேச்சாளர்னு முருகன் நெனச்சிருக்கலாம்.. எஸ்வி சேகர்
சென்னை: நான் பாஜகவில் இணைந்த போதே தேர்தலில் போட்டியிட மாட்டேன் என பிரதமர் மோடியிடம் தெரிவித்துவிட்டேன் என பாஜக நிர்வாகியும் நடிகருமான எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
1979 களில் தனது படங்கள் மற்றும் நாடகங்கள் மூலம் நகைச்சுவையை வாரி கொடுத்து நம்மை சிரிக்க வைத்தவர். மயிலாப்பூர் தொகுதியின் சட்டசபை உறுப்பினராக இருந்தவர்.
இவர் ஒன் இந்தியா தமிழ் தளத்திற்கு அளித்த பேட்டி கேள்வி பதில் வடிவில்:

பாஜக தலைவர்
கே: தமிழக பாஜக தலைவராக அண்ணாமலையை தேர்வு செய்துள்ளார்களே அது குறித்து உங்கள் கருத்து என்ன?
ப: இது ஒரு சிறந்த தேர்வு என நான் சொல்வேன். இருப்பவர்களையே திருப்பி திருப்பி எடுக்காமல் புதியவர்களை, இளைஞர்களை எடுப்பது நல்லது. அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரியாக, நேர்மையாக செயல்பட்டவர். தேசத்துக்கு சேவை செய்ய அவர் பாஜகவில் இணைந்துள்ளார். இதனால் அவருடைய செயல்பாடுகள் வித்தியாசமானதாகவும் அறிவுப்பூர்வமானதாகவும் கட்சியின் வளர்ச்சிக்கு உதவும் என அவருடன் பழகியதில் நான் தெரிந்து கொண்டேன்.
தலைவரை மாற்றி அண்ணாமலையை கொண்டு வந்தது மட்டும் போதாது. வேறு சிலரையும் மாற்ற வேண்டிய சூழலில்தான் தமிழக பாஜக இருக்கிறது. இதையெல்லாம் செய்தால் அண்ணாமலைக்கு ப்ரீ ஹேண்ட் கிடைக்கும். தமிழகத்தில் திமுக கூட்டணி 38 எம்பிக்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது? குறைகளை மட்டும்தான் சொல்ல முடியும்.

களை எடுக்க வேண்டியவர்கள்
கே: கட்சியில் களையெடுக்க வேண்டியவர்கள் யார் யார்?
ப: அதை வெளிப்படையாக சொல்ல முடியாது. அண்ணாமலையே ஒரு விவசாயிதான். முதலில் அவர் களையெடுக்க கற்றுக் கொள்ள வேண்டும். பயிரை நட்டவுடனும் சுற்றியிருக்கும் களைகளை எடுக்க வேண்டும். அப்போதுதான் பயிர் 100 சதவீத அறுவடையை கொடுக்கும்.

பாஜக தலைவர் முயற்சி
கே: பாஜக தலைவராக நீங்கள் முயற்சித்தும் உங்களுக்கு ஏன் கொடுக்கப்படவில்லை
ப: நான் முயற்சியே செய்யவில்லை. என்னை நிருபர் ஒருவர் பாஜக தலைமையை ஏன் புறக்கணிக்கிறீர்கள் என கேட்டார். அதற்கு நான் அப்படியெல்லாம் புறக்கணிக்கவில்லை. எனக்கு தலைமை பொறுப்பை கொடுத்தால் நான் ஏற்பேன் என்றேன். பிறகு அவர்கள் நீங்கள் தமிழிசையை (பாஜக தலைவராக இருந்த போது) ஏன் புறக்கணிக்கிறீர்கள் என கேட்டார். அதை நேரடியாக கேட்க வேண்டியதுதானே எதற்கு சுற்றி வளைத்தீர்கள் என அவரை நான் கேட்டேன். பின்னர் அதற்குரிய பதில்களையும் கூறிவிட்டேன்.
எனக்கு எந்த சிபாரிசும் பிடிக்காது. நாடகம் முதல் அரசியல் வரை நான் யாருடைய சிபாரிசையும் கேட்டதில்லை. ஜெயலலிதா என்னை அரசியலுக்கு அழைத்தார், ராகுல் காந்தி அழைத்தார். அதன் பிறகு மோடி என்னை பிஜேபியில் சேரலாம் என சொன்னார்.

பாஜக தலைவர் யார்
கே: அண்ணாமலை பாஜக தலைவராக நியமனம் செய்யப்படாவிட்டால் வேறு யார் அந்த பதவிக்கு பொறுத்தமானவராக இருப்பார் என நினைக்கிறீர்கள்?
ப: நான் ஏன் அதை நினைக்க வேண்டும்? நான் ஜேபி நட்டாவாகவோ இல்லை டெல்லியில் கட்சியில் உயர் பதவியில் இருப்பவராகவோ இருந்தால் அதுகுறித்து கவலைப்படலாம். அதெல்லாம் இல்லாத போது நான் ஏன் கவலைப்பட வேண்டும்? பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை, எல் முருகன் ஆகியோர் பாஜக தலைவர்களாக இருநத போது என்னை கட்சி அலுவலகத்திற்கு கூட அழைத்ததில்லை.
தமிழக பாஜகவின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் இருவர்தான் முக்கிய காரணங்கள் , ஒன்று தலைவர், இன்னொன்று அமைப்பு செயலாளர் (Organising Secretary). இந்த பதவியில் கேசவ் விநாயகம் உள்ளார்.

வாய்ப்பில்லையே
கே: 2006 இல் ஜெயலலிதா உங்களை எம்எல்ஏவாக்கினார். இந்த முறை உங்களுக்கு ஏன் வாய்ப்பு கிடைக்கவில்லை?
ப: நான் எந்த தேர்தலிலும் போட்டியிட மாட்டேன். எந்த தேர்தல் வந்தாலும் உங்களுக்காக நான் பிரச்சாரம் செய்வேன் என கட்சியில் சேரும் போதே மோடியிடம் நான் சொன்னேன். எனவே நான் தேர்தலில் வாய்ப்பை கேட்கவே இல்லை.
ஆனால் பிரச்சாரம் செய்வேன் என்றேன், அதற்குரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் அவர்கள் கொடுக்கவில்லை. நமீதா சிறந்த பேச்சாளர், அவரால் மிகப் பெரிய கூட்டத்தை கூட்ட முடியும் என எல் முருகனோ, கேசவ வினாயகமோ நினைத்ததாலோ என்னவோ, என்னை அழைக்கவில்லை. என்னை கட்சியில் பயன்படுத்திக் கொண்டால் கட்சிக்கு நல்லது, என்னை பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் நஷ்டம் எனக்கில்லை. அதனால் நான் சும்மா இருந்துவிடவில்லை. பாஜகவுக்கு ஆதரவான பிரச்சாரங்களை சமூகவலைதளங்களில் செய்தேன்.

அண்ணாமலைக்கு அறிவுரை
கே: உங்கள் அனுபவத்தின் அடிப்படையில் அண்ணாமலைக்கு என்ன அறிவுரை
ப: என்னை அண்ணாமலை கேட்டாலோ சந்தித்து பேசினாலோ அவரிடம் நேரில் சொல்வேன். மோடியின் திட்டங்கள் அடிதட்டு மக்களுக்கு போக வேண்டும் என சொன்னேன். அதற்கு அவரது திட்டங்களை தமிழில் பெயர் வைத்து மக்களிடம் கொண்டு சேர்க்க தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பேனர் வைத்திருந்தால் அடிதட்டு மக்களுக்கு புரிந்திருக்கும். ஆனால் அதை செய்யவில்லை.
ஒரு கட்சி தினமும் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். 300 கூட்டங்களையாவது கூட்டியிருக்க வேண்டும். இதற்கு 500 பேச்சாளர்களை தயார் செய்திருக்க வேண்டும். நான் இதுகுறித்து கேசவ் விநாயகத்திற்கு கடிதமாக எழுதியிருந்தேன். அதையெல்லாம் படித்தார்களா என தெரியவில்லை.

புறக்கணிப்பு ஏன்
கே: கட்சி பணிகளில் ஏன் உங்களை புறக்கணிக்கிறார்கள்?
ப: நான் நேர்மையாக இருப்பதும் ஒரு காரணமாக இருக்கும். அரசியலில் உள்ள சினிமாக்காரர்களை தேர்தல் நேரத்தில் மட்டும் பயன்படுத்திவிட்டு கருவேப்பிலை மாதிரி தூக்கி எறிவதாக மோடியிடம் சொல்லியிருந்தேன். மேலும் தலைவர்கள் மக்களால் அணுகக் கூடியவர்களாக இருக்க வேண்டும். கெட்ட பெயர் வரக் கூடாதுனு நினைப்பதை போல் நாம் செய்யும் கெட்ட விஷயங்களும் தெரியக் கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறார்கள். எனவே தலைவர் முன் உள்ள தடுப்புகளை உடைத்தெறிய வேண்டும், அதை அண்ணாமலை செய்வார் என நம்புகிறேன்.

நிதி கையாடல்
கே: சட்டசபை தேர்தலில் தேர்தல் செலவுக்கான நிதியை கையாடல் செய்ததாக புகார் எழுந்துள்ளதே இதுகுறித்து என்ன நினைக்கிறீர்கள்?
ப: அது கட்சிக்குள் நடந்த புகார். கட்சிக்குள் நடப்பது எதுவுமே எனக்கு தெரியாது என்றபோது அது குறித்து நான் ஏன் பேச வேண்டும்? அதுகுறித்து அண்ணாமலை பார்த்துக் கொள்வார். பாஜக மட்டுமல்ல அனைத்து கட்சிகளும் எவ்வளவு பணம் வாங்குகிறார்கள், எவ்வளவு பணம் செலவு செய்தார்கள் என்பதை தேர்தல் ஆணையம் பார்த்து கொள்ளும்.

அரவணைப்பு
கே: மூத்த தலைவர்களை அண்ணாமலை அரவணைத்து செல்வார்களா?
ப: இதில் தவறில்லை. யார் திறமையானவர்களோ அவர்கள் தலைமையின் கீழ் இயங்கலாம். அனுபவங்களையும் கருத்தில் கொள்ளலாம். அனுபவம் நிறைந்தவர்களை குழு அமைத்து ஆலோசனை கேட்டு பெற பயன்படுத்திக் கொள்ளலாம். இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும். யாராக இருந்தாலும் நேர்மையானவர்களாக இருக்க வேண்டும்.

மத்திய அரசு
கே: கொரோனாவை மத்திய அரசு சிறப்பாக கையாண்டதா?
ப: உலகிலேயே கொரோனாவை சிறப்பாக கையாண்டதில் முதல் இடம் மோடிக்குத்தான். மோடி உலகத் தலைவர். அவர் குறித்து தமிழக மக்களுக்கு சரியான புரிதல் இல்லை. 2024 இல் நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்படுவார்.
எது உண்மையில் மதசார்பின்மை என்பது மோடியின் ஆட்சி காலத்தில்தான் வந்துள்ளது. ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் இந்துகளுக்கு எதிராக பேசுவது மட்டுமே மதசார்பின்மை என முட்டாள்தனமான கருத்துகளை பதியவைத்துவிட்டார்கள். மாநிலங்களை வைத்து மத்திய அரசு உருவாகவில்லை. மத்திய அரசு மொழிவாரி மாநிலங்களை பிரித்தார்கள். கொள்கையை விட மக்கள் நலன் சார்ந்தது என்றால் அது நன்றாக இருக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications