‛லட்டு பாவங்கள்’.. வீடியோவை டெலிட் செய்தாலும் கோபி - சுதாகருக்கு சிக்கல்? சாட்டை துரைமுருகன் பதிவு
சென்னை: திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக ‛லட்டு பாவங்கள்’ என்ற பெயரில் கோபி, சுதாகர் ‛பரிதாபங்கள்’ யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டனர். முழுக்க முழுக்க திருப்பதி லட்டு விவகாரத்தை ட்ரோல் செய்ததோடு, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணை கலாய்த்து இருந்தனர். இந்த வீடியோ தற்போது நீக்கப்பட்டாலும் கூட பலரும் அதனை வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இப்படி பரப்புவோரால் கோபி, சுதாகருக்கு சிக்கல் ஏற்படும் என எச்சரித்து நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் விமர்சனம் செய்துள்ளார்.
திருப்பதி லட்டு பிரசாதத்தில் மாட்டுக் கொழுப்பு, மீன் எண்ணெய், பன்றி எண்ணெய் கலந்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. இதனை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

லட்டுவில் கலப்படம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர். அதுமட்டுமின்றி திருப்பதி லட்டுவில் கலப்படம் செய்ததற்காக நேற்று முன்தினம் கோவிலில் பரிகார பூஜை செய்து ஹோமம் வளர்க்கப்பட்டது.
அதோடு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் 11 நாள் விரதம் இருந்து வருகிறார். தற்போது நாடு முழுவதும் திருப்பதி லட்டு விவகாரம் பெரும் விவாதப்பொருளாகி உள்ளது. இந்நிலையில் தான் ‛பரிதாபங்கள்' யூடியூப் சேனலில் நேற்று கோபி, சுதாகர் சார்பில் ‛லட்டு பாவங்கள்' என்ற பெயரில் வீடியோ வெளியிட்டு இருந்தனர். இந்த வீடியோ மொத்தம் 15.02 நிமிடங்கள் இருந்தன.
இந்த வீடியோவில் திருப்பதி லட்டுவில் மாட்டு கொழுப்பும், பன்றி கொழுப்பு கலக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தை ட்ரோல் செய்திருந்தனர். அதேபோல் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணையும் கிண்டல் செய்திருந்தனர். வீடியோவில் திருப்பதி லட்டு விவகாரங்கள் தொடர்பாக கோபி, சுதாகர் நடித்து இருந்தனர். இதில் சுதாகர் அசைவ உணவை சாப்பிடாதவர் போலவும், கோபி அசைவ உணவு சாப்பிடுவது போலவும் நடித்து இருந்தார். மேலும் லட்டுவில் மாட்டு கொழுப்பு, மீன் எண்ணெய், பன்றி கொழுப்பு கலந்து இருக்கிறது. இதனால் தான் லட்டு மிகவும் டேஸ்ட்டாக இருக்கிறது என கோபி சொல்லும் காட்சிகள் இருந்தது.
அதேபோல் இன்னொரு சீனில் திருப்பதி கோவிலுக்கு கோபி செல்வதும், அப்போது சுதாகர் அசைவ உணவுகளை மலை மீது எடுத்து செல்லக்கூடாது என சொல்லி பிடுங்கும் காட்சிகள் உள்ளது. அதன்பிறகு லட்டில் மாட்டு எண்ணெய், மீன் எண்ணெய் கலந்துள்ளதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறிய விவகாரம் தெரிகிறது. அப்போது சரி விடுங்க நாம் தான் அசைவ உணவு சாப்பிடுவோமே அதனால் என்ன? என கூறி சுதாகரிடம் சண்டையிடும் காட்சிகள் உள்ளது. மலைக்கு அசைவ உணவு எடுத்து செல்லக்கூடாது, அசைவம் சாப்பிட்டு செல்லக்கூடாது என கூறும் நீங்கள் லட்டுவில் லேசா ‛அதை’ போட்டு கிண்டி இருக்கிறீர்களே? என கூறுகின்றனர்.
அதேபோல் லட்டுவில் நெய் தான் ஊற்ற வேண்டும். டேஸ்ட்டுக்காக நெய் மாதிரி இருப்பதை எல்லாத்தையும் ஊற்றக்கூடாது என கூறியிருந்தனர். மேலும் தமிழகத்தை சேர்ந்த பெண் ஒருவர் நாங்கள் திருப்பதி லட்டை சாப்பிடுவது இல்லை. பலபேரில் கைப்பட்டு வருவதால் சாப்பிடுவது இல்லை. அனைவரும் சாப்பிடுவதால் அதனை நாங்கள் சாப்பிடுவது இல்லை என கூறியிருந்தார். அதனையும் ட்ரோல் செய்து இருந்தனர்.
இதுதவிர மாட்டு கொழுப்பு, மீன் எண்ணெய், பன்றி கொழுப்பு கலந்தாலும் தின்னது தின்னது தான். இதை மாற்ற முடியாது. தெரிஞ்சி ஒரு விஷயத்தை சாப்பிட்டால் தான் நம்ம தப்பு. தெரியாமல் ஒரு விஷயத்தை சாப்பிட்டால் தப்பு இல்லை என கூறியிருந்தனர். இதுதவிர ஆந்திர துணை முதல்வர் ‛பவர் ஸ்டார்' பவன் கல்யாணையும் கலாய்த்து இருந்தனர்.
இந்த வீடியோ சர்ச்சையான நிலையில் பரிதாபங்கள் சேனலில் இருந்து டெலிட் செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி வருத்தம் தெரிவித்து இருந்தனர். இதுதொடர்பாக ‛பரிதாபங்கள்' சேனலின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், ‛‛கடைசியாக பரிதாபங்கள் சேனலில் வெளிவந்த வீடியோ முழுக்க நகைச்சுவைக்காக உருவாக்கப்பட்டது. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படவில்லை. அதையும் மீறி சிலர் மணம் புண்பட்டிருப்பதால் அதற்கு வருத்தம் தெரிவித்து சம்பந்தப்பட்ட காணொளியை நீக்கி உள்ளோம். இதுபோல் வருங்காலங்களில் நடைபெறாது என்பதையும் தெரிவித்து கொள்கின்றோம்'' என கூறியிருந்தனர்.
இந்த வீடியோ டெலிட் செய்யப்பட்டாலும் கூட அதற்கு முன்பாகவே பலரும் அதனை டவுன்லோட் செய்து வைத்துள்ளனர். இந்த வீடியோவை தற்போது வலைதள பக்கங்களில் பகிர்ந்து ‛பரிதாபங்கள்' யூடியூப் சேனலில் டெலிட் செய்யப்பட்ட ‛லட்டு பாவங்கள்' வீடியோ இதுதான் என கூறிவருகின்றனர். இதன்மூலம் டெலிட் செய்யப்பட்ட வீடியோ தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில் தான்டெலிட் செய்யப்பட்ட கோபி - சுதாகர் வீடியோவை பரப்புவோரை நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இந்த வீடியோவை பரப்புவது அயோக்கியத்தனத்தின் உச்சம் என சாடியுள்ளார். இதுதொடர்பாக சாட்டை துரைமுருகன் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛பரிதாபங்கள் சேனலில் வெளிவந்த லட்டு பாவங்கள் காணொளி அந்த சேனலில் இருந்து நீக்கப்பட்ட பிறகு இதுதான் நீக்கப்பட்ட காணொளி என அடுத்து பரப்புவது அயோக்கித்தனத்தின் உச்சம்! ஒரு காணொளியை உருவாக்கியவன் நீக்கிய பிறகு நீங்கள் எடுத்து பரப்புவதால் ஏற்படும் சிக்கல்களும் அவர்களையே சேரும்! உங்களின் அரிப்புத்தனத்திற்கு அவர்களை பழி ஆக்காதீர்கள்'' என காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications