தேசிய கொடி ஏற்ற சொன்ன மோடி! ஆனால், தமிழ்நாடு பாஜக அலுவலகத்திலோ.. பாரத மாதாவை கவனிச்சீங்களா?
சென்னை: தமிழ்நாடு பாஜக அலுவலகத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு என்று ஒதுக்கப்பட்ட அறையில் மாட்டப்பட்ட புகைப்படத்தில் பாரத மாதாவின் கையில் தேசிய கொடிக்கு மாற்றாக காவி கொடி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழிசை சவுந்திரராஜனை தொடர்ந்து தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டவர் எல்.முருகன். தமிழ்நாடு முழுவதும் வேல் யாத்திரை பிரபலமானவர் எல்.முருகன். இவர் தலைமையில்தான் பாஜக 2021 தேர்தலை எதிர்கொண்டது.
அதிமுகவுடன் கூட்டணி வைத்து 4 சட்டமன்றத் தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. அதன் பின்னர் எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதனால் தமிழ்நாடு பாஜக நடவடிக்கைகளில் இருந்து அவர் சற்று ஒதுங்கி இருந்தார்.

மீண்டும் எல்.முருகன்
இதன் தொடர்ச்சியாக அண்ணாமலை பாஜகவின் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் 2024 தேர்தலுக்கான முன் தயாரிப்பு பணிகளில் இறங்கியுள்ள பாஜக டெல்லி தலைமை எல்.முருகனை மீண்டும் தமிழ்நாடு பாஜக பணிகளில் ஈடுபட உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

கமலாலயத்தில் முருகன் அறை
இதனை அடுத்து தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவரும் மத்திய இணை அமைச்சருமான எல்.முருகனையே மீண்டும் தமிழ்நாடு பாஜகவை கவனித்துக்கொள்ளும் வகையில் அவருக்கு கமலாலயத்தில் தனி அலுவலகமும் ஒதுக்கப்பட்டு உள்ளது. இன்று காலை நடைபெற்ற எல்.முருகன் அறை திறப்பு பூஜையில் அண்ணாமலை, கரு.நாகராஜன், கேசவ விநாயகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு இருக்கின்றனர்.

பாரத மாதா படம்
இந்த புகைப்படங்களில் சமூக ஊடகங்களில் வெளியாகி இருக்கின்றன. அதில், எல்.முருகன் இருக்கைக்கு பின்னால் ஒரு புகைப்படம் மாட்டப்பட்டு இருக்கிறது. அதில் ஒரு பக்கம் பிரதமர் நரேந்திர மோடியின் படமும் மறுபக்கம் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா படமும் உள்ளன. இரண்டுக்கும் நடுவே பாரத மாதாவின் படம் உள்ளது. அதில் பாரத மாதாவின் கையில் தேசிய கொடிக்கு பதிலாக காவி கொடி இடம்பெற்றுள்ளது.

தேசிய கொடி எங்கே?
சுதந்திர போராட்ட சமயத்தில் கடந்த 1904 ஆம் ஆண்டு கொல்கத்தாவை சேர்ந்த அபிந்திரநாத் தாகூர் என்ற ஓவியரால் பாரத மாதா தோற்றம் வரையப்பட்டது. பாரதியாரின் விஜயா இழலிலும் பாரதமாதா படம் இடம்பெற்றுள்ளது. அதை வைத்தே இன்றுவரை பாஜகவினர் பாரத மாதா கி ஜே என்று முழக்கமிடுகின்றனர். தருமபுரியில் தமிழ்நாடு அரசு அமைத்த பாரத மாதா நினைவாலயம், போபாலில் உள்ள பாரத மாத சிலை போன்றவற்றின் கையில் தேசிய கொடியே உள்ளது.

பிரதமரின் வேண்டுகோள்
பாரதமாதா என்றாலே அதன் கையில் இருக்கும் தேசிய கொடியும் நினைவுக்கு வரும். பிரதமர் நரேந்திர மோடி 75 வது குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக அலுவலகத்திலேயே பாரத மாதா கையில் தேசிய கொடிக்கு பதில் காவி கொடி இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications